Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Monday, February 10, 2014

மொழி – எமர்சன்

மனிதனுக்கு இயற்கையின் மூலம் கிடைத்த மூன்றாவது பயன் மொழி ஆகும். இயற்கை என்ற ஊடகம் மூலம் மொழி மூன்று படி நிலைகளில் மனிதனுள் மொழி உருவாகிறது.

1. மனித மனதிற்குள்ளே உள்ள சகல சொற்களும் இயற்கையில் அவன் கண்டு, அனுபவப்பட்ட ஏதோ ஒன்றின் அடிப்படயிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. அவன் அனுபவத்திற்குள் வந்த இயற்கையின் உறுப்பை மற்றொன்றை சுட்டும் சின்னமாக மாற்றி சேர்த்துக் கொள்கிறான். சொற்களின் மூலத்தை தேடிச் சென்றால், ஆதிமொழியில் இயற்கையில் காணக் கிடைக்கும் ஒரு பொருளின் வரைபடத்தில் தான் சென்று முடியும். அதனாலேயே பழங்குடிகளும், குழந்தைகளும் தங்களைச் சுற்றி உள்ள உலகத்தை பெயற்சொற்கள் கொண்டு மட்டுமே குறிப்பிடுகிறார்கள்.

2. முதல் நிலையில் வார்த்தைகள் இயற்கை அங்கங்களின்  குறியீடு என்றால் அடுத்ததாக இயற்கையின் அங்கங்கள் மனித எண்ணங்களின் கூறியீடுகளாக உள்ளன. அவற்றைக் கொண்டே மனிதன் தன் மனவோட்டங்களை வெளிப்படுத்துகிறான். மனித மனம் அருவமான உணர்ச்சிகளுக்கு குறியீடுகளாக இயற்கை செயல்பாடுகளையும், மாறும் அதன் நிலைகளையும் தொடர்புறுத்திக் கொள்கிறது. மாறும் பருவ நிலைகளை மனநிலைகளை உணர்த்தும் உவமைகளாக, பாயும் வேங்கையை வீரனை சுட்டுவதாக, எறும்பின் இயல்பை விடாமுயற்சியின், சுறுசுறுப்பின் சின்னமாக, இன்னும் பல விதங்களில் இயற்கையில் காணகிடைக்கும் செயல்களை தன் மனதின் வெளிப்பாடுகளாக பெரிதாக்கி, மாற்றி அமைத்து தன் மொழியில் சேர்த்துக் கொண்டேயிருக்கிறது.

Saturday, February 8, 2014

அழகு – எமர்ஸன்

இயற்கையை விளை பொருளாக பார்ப்பதற்கு அடுத்தபடியாக அதை அழகானதாக பார்ப்பதை குறித்து எமர்ஸன் கூறுகிறார். அழகு என்பது புதிய நிறங்கள், புத்துணர்ச்சி கொள்ள வைக்கும் சூழ்நிலைகள், கிளர்ச்சியூட்டும் வடிவங்கள் போன்றவற்றை கூறலாம்.

கட்டுரையில் அவர் இயற்கை அழகை மூன்று கூறுகளாக பிரித்துப் பார்க்கிறார். முதல் அழகுணர்ச்சியை இயற்கையின் மூலமாக கிடைக்கும் ஒரு விளைபொருளைப் போலவே மனிதன் உணர்கிறான். அது புறத்தில் உணரப்படும் அழகாகும். அடைந்த கூடத்தில் நெடுநேரம் ஒரு வேலையில் கழித்து விட்டு கடற்கரையின் முன்னாலும், பெரும் இமயங்களுக்கு முன்னலும் போய் நிற்கையில் ஏற்படும் விடுபடலை குறிக்கும் அழகுணர்ச்சி என்று அதைக் கூறலாம். அழகின் அக்கூறை உணர்கையில் அங்கு மனிதனை வந்தடையும் காட்சியில், தொடுகையில், ஒலிகளில் புதியவைகளை கண்டுகொள்வான். ஓடும் நீரிலும், கடலின் பரப்பிலும், அந்தி நேர ஒளியில் மிளிரும் மேகங்களின் வடிவங்கள் வழியே அவன் உணரும் அழகு என்பது வெளியே உள்ளது. அது அவனை அமைதிபடுத்தலாம், சந்தோஷப்படுத்தலாம். ஆனால் சிறிது நேரத்தில் அந்த கூறுகள் பழகிப் போய் மற்றொரு புதிய அனுபவத்திற்காக அவன் தேடல் ஆரம்பமாகிவிடும்.

இரண்டாவது அழகென்பது வெளியே உணரப்படும் அழகினூடே அவன் அகத்தின் உள்ளே செல்லும் பயணமே. அழகென்பது புலன்களின் வழியே தன்னையே காண்பது. அழகின் வெளி ஆபரணங்களை துளைத்து அதில் அழகென தான் உணர்வது எதை என்றும், அவற்றின் எல்லா வடிவங்களிலும் மறையாமல் நின்றிருக்கும் மறை பொருள் என்ன என்றும் தன் அகத்தின் வழியே கேட்டுக் கொள்ளும் கேள்விகளின் பதில்களே அவை. அப்படிபட்ட அழகை கண்டு கொள்ளும் ஒருவனுக்கு ஒவ்வொரு முறையும் புதுப்புது புறக் காட்சிகளும், சூழ்நிலைகளும் தேவைப்படுவதில்லை. வெளிர் வானமும், கூழங்கற்களும், காய்ந்த சருகுகளையும் பார்த்துக் கொண்டு அவனால் வெகு தூரம் அழகை ரசிக்க முடியும். அவற்றினூடே அறுபடாமல் செல்லும் நிலையான ஒன்றை பிடித்துக் கொண்டு செல்ல முடியும். அகபுறம் என்று சொல்லப்படுவதைப் போல புற அழகும், அக அழகும் ஒன்றை ஒன்று சமன் செய்யும் நிலை அது என எமர்ஸன் குறிப்பிடுகிறார். இதுவே அழகில் தெய்வீகத்தைக் காண்பது எனலாம்.
அகங்காரம் அழிந்த நிலையில் கண்களை மட்டும் வைத்து இயற்கையை உள்வாங்கிக் கொண்டு உள்ளும், புறமும் வேறுபாடில்லாமல் காணும் அழகை விட உயர்ந்ததாக அவர் கூறும் மூன்றாவது நிலை- அந்த அழகை மனிதன் உருவாக்கும் நிலை என்பதாகும். இயற்கையில் தான் காணும் அழகை முழுவதுமாக உள்வாங்கி அதை கலையாக வெளிப்படுத்தும் பொழுது அவன் இயற்கை அழகை உணர்வதன் அதிகபட்ச சாத்தியத்தை எட்டுகிறான் எனலாம். இயற்கையின் அழகு மனிதனின் அகம் வழியே மறுவாக்கம் செய்யப்படும் பொழுது அதன் ஒரு துளி முடிவிலா ஒன்றை சுட்டிக் காட்டி நிற்கிறது. அதை உருவாக்குவதே கலையின் நோக்கமாக இருக்க முடியும். இயற்கை அழகின் ஆதாரத்தை பிரதிபலிக்கும் எந்தவொரு படைப்பும் அதன் உள்ளே உண்மை, நன்மை, அழகு என்ற முக்குணங்களையும் கொண்டிருக்கும் என்கிறார்.
இயற்கை இருப்பதற்கான காரணம் என்ற கேள்விக்கும் அதன் அழகு என்பது மறுக்கமுடியாத உண்மை என்றாலும் அது மட்டுமே இறுதி உண்மை என்றாகி விடாது என முடிக்கிறார்.

Tuesday, October 23, 2012

விவாத சூழல்

நண்பர் ஒருவருடன் காலை நடையின் போது இலக்கியம் குறித்தும், எழுத்தாளர் ஒருவரின் கட்டுரை குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தேன். அந்த விவாதம் தீர்க்கமான புள்ளியில் இருந்து ஆரம்பிக்கவில்லை. தினசரி வாழ்க்கையை குறித்து ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றத்தின் இடையே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த தலைப்பு உள்ளே நுழைந்து விட்டது. முடிவில் அது சுவாரசியமான விவாதமாக அமைந்தது. அதன் தலைப்பு தோராயமாக இப்படி வைத்துக் கொள்ளலாம் – “மனிதனுக்கு கலை, இலக்கியம் போன்ற துறைகளில் ஆர்வம் பிறப்பிலேயே எழுகிறதா அல்லது தொடர் பயிற்சியின் விளைவாக உருவாவதா?” எங்களுடைய நிலைப்பாடு அந்த கட்டுரையுடன் உடன்பட்டும், எதிர்த்தும் இருக்கவில்லை. இங்கு விவாதத்திற்கு உள்ளானது அக்கட்டுரையை குறித்த எங்களுடைய நுண்புரிதல்கள் மட்டுமே.

விவாதத்தின் முடிவு என்ன, அப்போது பகிரப்பட்ட கருத்துக்கள் என்ன என்பதை இங்கு விளக்க முற்படவில்லை. எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்து அதைப் பற்றி – விவாத சூழலைப் பற்றி – யோசித்துப் பார்க்கையில் சில விஷயங்கள் புலப்பட்டன. அவைகளே இங்கு பகிரப்பட உள்ளன.

Friday, August 10, 2012

கவிதை விவாதத்தின் அவசியம்

நவீனக் கவிதைகள் என்பது நவீன காலத்து ஓவியங்களை பார்ப்பது போன்றதாகும். பழைய ஓவியங்களில் முதலில் நாம் பார்ப்பது ஒரு காட்சியை – நாம் பழக்கப்பட்ட விதத்தில். உதாரணமாக ஒரு நிலவெளிக் காட்சி, ஒரு மனிதர், ஓர் இடம் அல்லது ஒரு புராண சம்பவம். அந்த புராணச் சம்பவத்தை பற்றி நாம் ஒன்றும் அறியாமலிருந்தால் கூட – ஒருவன் நிற்கிறான், ஒரு இறக்கையுள்ள குழந்தை பறக்கிறது, கீழே ஒரு அழகிய பெண் நழுவும் ஆடைகளுடன் படுத்திருக்கிறாள் என தனித்தனியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் நவீன ஒவியங்கள் ஒரு நிறங்களின் கலவையாகவே நம்மிடம் காட்டப்படும். தர்க்கப்படுத்தி புரிந்து கொள்ள அவற்றில் சாத்தியங்கள் மிகக் குறைவு. எடுத்த எடுப்பிலேயே அதிலிருந்து நாம் நம்முடைய கற்பனையை வைத்து பொருளை உருவகித்துக் கொள்ள வேண்டும். இது நவீன கவிதைகளுக்கு ஒரு தோராயமான ஒப்பீடு என நினைக்கிறேன்.

நவீன கவிதைகளை வாசிப்பது என்பது சுலபமற்றதாக இருப்பதற்கு முக்கிய காரணம், அவை நேரடியாகவே சொல்லிலிருந்து பொருளையும், ஒரு அடியிலிருந்து தர்க்கத்தையும் பிடுங்கி எறிவதால் தான் என நினைக்கிறேன். முதலில் காலூன்றி நிற்க எதுவுமே இருப்பதில்லை. ஒன்றைச் சொல்லி அதிலிருந்து வேறொன்றிற்கு நாம் பயணிக்காமல், முதலிலேயே நமக்கு பரிச்சயமில்லாததை அவை சொல்லிச் செல்கின்றன.

Saturday, August 4, 2012

இசைச் செவி


சில வாரங்களாக வலிந்து வேலைக்கு காரில் போய் வருகையிலும், வீட்டில் கணினியில் இணையத்தில் மேய்கையிலும் தொடர்ச்சியாக ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மரபிசையில் அதிக நாட்டமோ பழக்கமோ இல்லாதிருந்ததால், இப்போது மனதை பழக்கிக் கொள்ள இசை கேட்கும் செயலை ‘வலிந்து’ செய்ய வேண்டியுள்ளது. எனக்கு செவியுணர்வு ஒப்பிடுகையில் குறைவு என யூகித்து வைத்திருக்கிறேன். இந்த நாட்களில், மரபிசையை கேட்டு அவதானித்ததில் அந்த யூகம் இன்னும் நிச்சயமாக மனதில் பதிந்து விட்டது.

என்னுடன் முதுகலையில் ஒரே அறையில் வசித்த நண்பன் தேர்ந்த கர்நாடக வயலின் இசையாளன். அவனிடம் நான் ஒரு பாட்டின் இரு வரிகளை கேட்டவுடனேயே ராகங்களை கண்டு கொள்ளும் சிலருடைய திறமையை வியந்து கொண்டிருக்கையில், அவன், அது கடினமான விஷயமேயில்லை என்றும், இசையை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் அத்திறமை எளிதில் சாத்தியப்படும் என்றும் பதிலளித்தான். அந்த உரையாடலுக்கு ஒரு வாரம் முன்பே மரபிசையை கேட்க ஆரம்பித்துவிட்டதால், மனதில் புது உற்சாகத்துடன் இசை கேட்டலைத் தொடர்ந்தேன். ஆனால் என் நம்பிக்கைப்படி அல்லது நண்பனின் நிபுண கருத்துப்படியோ இசைக் கட்டுமானத்தின் இணைப்புகளையும், அதன் வடிவங்களையும் மனதால் பகுத்தறிய இயலவில்லை.

Thursday, July 26, 2012

பெய்யெனப் பெய்யும் இரவு


பல்லாயிரம் இரவுகள் தாண்டி இன்னும் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பு சில நேரங்களில் ஒரு மர்ம பிரபஞ்ச செயல் போல மனதிற்குள் தோன்றுகிறது. அத்தனை இரவுகளையும் ஒன்று சேர்த்து அடுக்கினால் அவை தம்முள் கலந்து ஒரே இரவாக, இனிவரும் எல்லா இரவுகளின் ஆரம்பக் கண்ணியாக மாறித் தெரிகிறது. பகல்கள் எப்போதும் அத்தன்மையை கொண்டிருப்பதில்லை. அதிகபட்சம் அவை, பிரதி எடுக்கப்பட்ட ஆயிரம் பகல்களாக வெளிறி நிற்குமேயன்றி அவை ஒன்று கூடுவதேயில்லை.

இரவு ஆரம்பிப்பது இருட்டு கூடும் பொழுது என தோன்றவில்லை. யதார்த்தத்தில் ஒவ்வொரு இரவும் ஏதொவொரு எதிர்பாரா புள்ளியில் ஆரம்பமாகிறது. பெரும்பாலான இரவுகள் தொடங்கும் முன் உறங்கி விடுகிறோம். மனதின் அடி ஆழத்தில் உள்ள மனதொன்று, அவ்வுறக்கத்திலும் அப்புள்ளியை குறித்து வைத்துக் கொண்டு, விழித்திருக்கும் இரவுகளில் மறுபடியும் ஞாபகப்படுத்துகிறது.

Tuesday, October 5, 2010

மரணமெனும் சிறுவன்





ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது வந்த தீபாவளி. முந்திய நாள் ஆரம்பித்து, அடுத்த நாள் இரவு மிக ஆரவாரமாக போய்க் கொண்டிருந்தது. எனக்கு அப்பா நூறு அல்லது இருநூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கித் தருவார், மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம் சகிதம். பொன்னை செலவழிப்பது போல பட்டாசு கொளுத்துவேன். சில நாட்கள் கழித்து வரும் திருக்கார்த்திகைக்கும் இதில் மிஞ்சியதை வைத்து தான் சரி கட்டவேண்டும். 

'ஏ' ப்ளாக் வீடுகளின் சிறுவர்கள் விடும் ராக்கெட் ரகங்கள்  'பி' ப்ளாக்கில் இருந்த எனக்கு வாங்கித் தரப்படவில்லை. இன்னும் ஒரு பாக்கெட் ஆட்டம் பாம்ப், ஒரு பாக்கெட் சீனி வெடி, 2 பாக்கெட் லட்சுமி வெடி,, 4 டப்பா மத்தாப்பு, ஒவ்வொரு பாக்கெட் புஸ்வாணமும், சக்கரமும் மீதமிருந்தது (சீனி வெடி தவிர மற்றவைகளில் பாதி கார்த்திகைக்கு வைப்பு நிதியாக்க வேண்டியிருந்தது). 

மாலை தூர்தர்ஷன் தமிழ் சிறப்பு படம், தெவிட்டும் இனிப்புகளுடன் முடித்துவிட்டு கடைசி ரவுண்ட் வெடிவைப்புக்கு பால்கனியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். பத்து அடி இடைவெளி விட்டு குவாட்டர்ஸ் முற்றத்தில் அரை ட்ரவுசர் போட்ட சிறுவன் நின்று கொண்டிருந்தான். புது உடுப்பு என சொல்வதற்கில்லை, கிழிசல் இல்லை. டம், டமால் என்று சத்தமும், பல வண்ணங்களில் ஒளிர்ந்து அணைந்து கொண்டிருக்கும் வாணவேடிக்கைகளுக்கு நடுவே அவன் அசைவே இல்லாமல் என்னை பார்த்துக் கொண்டிருந்தான். எதற்காக வந்திருக்கிறான் என தெரியும். சீனி வெடி பாக்கெட். பால்கனியிலிருந்து குதித்து வெளியேறினால் அவனை கடந்து தான் அடுத்த ப்ளாக் நண்பர்களை அடைய முடியும். பார்வையை தவிர்த்து பட்டசுகளை கலைத்து அடுக்கிக் கொண்டிருந்தேன். போய் தொலைவான் என நினைத்தேன்.