Thursday, July 26, 2012

பெய்யெனப் பெய்யும் இரவு


பல்லாயிரம் இரவுகள் தாண்டி இன்னும் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பு சில நேரங்களில் ஒரு மர்ம பிரபஞ்ச செயல் போல மனதிற்குள் தோன்றுகிறது. அத்தனை இரவுகளையும் ஒன்று சேர்த்து அடுக்கினால் அவை தம்முள் கலந்து ஒரே இரவாக, இனிவரும் எல்லா இரவுகளின் ஆரம்பக் கண்ணியாக மாறித் தெரிகிறது. பகல்கள் எப்போதும் அத்தன்மையை கொண்டிருப்பதில்லை. அதிகபட்சம் அவை, பிரதி எடுக்கப்பட்ட ஆயிரம் பகல்களாக வெளிறி நிற்குமேயன்றி அவை ஒன்று கூடுவதேயில்லை.

இரவு ஆரம்பிப்பது இருட்டு கூடும் பொழுது என தோன்றவில்லை. யதார்த்தத்தில் ஒவ்வொரு இரவும் ஏதொவொரு எதிர்பாரா புள்ளியில் ஆரம்பமாகிறது. பெரும்பாலான இரவுகள் தொடங்கும் முன் உறங்கி விடுகிறோம். மனதின் அடி ஆழத்தில் உள்ள மனதொன்று, அவ்வுறக்கத்திலும் அப்புள்ளியை குறித்து வைத்துக் கொண்டு, விழித்திருக்கும் இரவுகளில் மறுபடியும் ஞாபகப்படுத்துகிறது.


சூரியன் மறைந்த பிறகு, சாவகாசமான செயற்கை வெளிச்சங்களில் மனம் அமைதி கொள்வதில்லை. சிறிது சிறிதாக ஓடையில் நீர் வற்றுவதைப் போல புறவுலகின் ஓசையும், அனக்கங்களும் அடங்குகையில் கூட இரவு வருவதில்லை. எத்தனை அமைதி வெளிப்புறம் கூடி வந்தாலும் மனம் மெல்லிய ஓசைக்கும், ஒளி வேறுபாடுகளுக்கும் சலனப்பட்டுக் கொண்டேயிருக்கும். இப்படியே துல்லியமாக உணரமுடியாத ஓர் எல்லையில் மனம் உள்ளும் புறமும் தாவிக் கொண்டிருக்கும் ஒரு கணத்தில் சுற்றியுள்ள பொருட்களிளெல்லாம் அடர்த்தி கூடிவிட்டதென தோன்றுகையில் இரவு தொடங்கிவிடும். தெருவில் இடைவெளி விட்டு ஒலிக்கும் தவளை சத்தத்தை தவிர்த்து விட்டு மனம் அதனிடையில் பொதிந்திருக்கும் நிசப்தத்தை சேகரிக்க ஆரம்பித்திருக்கும். இதைப் போன்ற மற்ற இரவுகளை போலவே, சாலையில் அரிதாக செல்லும் வண்டிகளின் ஓசை இடைவெளிகள், குளிர் சாதனப் பெட்டி ஓய்ந்து அடங்குகையில் விரியும் அமைதி, என சேகரிக்கப்பட்ட நிசப்தம் மனதின் ஆழத்தில் நிறைந்து கொண்டிருக்கும்.

அந்நேரங்களில் மனம் சதா துழாவிக் கொண்டே ஏதோவொரு நுனியை பற்றி இழுக்கையில், அதன் மறுபுறம் கட்டப்பட்டு வருவது, என்றோ தொலைந்து போன ஒரு நினைவு. மிகச் சிறியது, முக்கியமற்றது. அது என்னுள் கிடந்தது என்று நான் அறிந்திராதது. ஆனால் இரவு, தன் மௌனத்தை அந்நினைவின் மேல் ஏற்றி நானிருக்கும் திசையில் உந்தித் தள்ளி விடும். அதில் என்ன பார்ப்பது, அதைப் பிரிப்பது, எதனோடு இணைப்பது என புரியாமல் சுற்றி வந்து கொண்டேயிருப்பேன். நாடகத்தின் கதாபாத்திரங்களைப் போல, நான் என்ன புரிந்து கொண்டேன் என்பதைப் பற்றி எந்த சிந்தையுமன்றி என்னைக் கடந்து சிறிது நேரத்தில் இருளின் ஆழத்தில் சென்று விடும். எங்கு போயிற்று என அத்திசையில் பார்த்துக் கொண்டிருக்கையில், மறுபடியும் இரவின் மௌனமேற்று இன்னொரு நினைவு மறுதிசையிலிருந்து வந்து கொண்டிருக்கும். நான் சோர்வுரும் வரை நடந்து கொண்டிருக்கும் இந்த புரியாத, இலக்கற்ற விளையாட்டு.

நான்கு சுவர்களுக்கு மத்தியில், மின் விளக்கின் கீழ் அமர்ந்திருந்தாலும், இரவின் பொழுதில் மனம் முடிவிலா நேரமொன்றை உருவகித்துக் கொள்கிறது. அந்த இரவில், ஆழ்ந்த அமைதியில் ஒரு போதும் நிலவு தெரிவதில்லை. அதையும் தாண்டி ஒளிராத நட்சத்திரங்களே அவ்விருளில் தேங்கி நிற்கின்றன. இறுகிப் போன கறுத்த நீரில் சிக்கிக் கொண்ட நட்சத்திரங்களே இரவினுடைய இருப்பின் சாட்சிகள். உண்மையில், அந்நட்சத்திரங்கள் தங்களாலேயே அறிந்து கொள்ள முடியாத ஒரு இருப்பை, நான் பழகி வைத்திருக்கும் ஒளி என்ற ஒன்றைக் கொண்டு, எனக்கே எச்சரிப்பது போலுள்ளது. இந்த நேரங்களில், ஒவ்வொரு முறையும், வானமென்றால் என்ன என்று புரியாமல் நிலவற்ற வெளியில், நட்சத்திரங்களில் மிருகங்களையும், தேவர்களையும் கண்டு ஆச்சரியமும், பயமும் கொண்டு கிடந்த முகமறியா முன்னோர்கள் மத்தியில் நானும் கிடக்கிறேன் என்ற பிரமை ஒட்டிக் கொள்வதுண்டு. அவர்களின் அமானுஷ்யங்களின் எச்சங்களே என் மனதை இரவாக உருவகித்துக் கொள்கின்றனவா? என்முன் சொட்டிக் கொண்டிருக்கும் இரவின் வழியே தென்படும் வீட்டுப் பொருட்களெல்லாம், அவர்கள் இருளில் கண்ட மிருங்களின் ஒளிவிடும் கண்களின் காலவெளியற்ற ஞாபக மிச்சங்களா?
அது உண்மையென்றால் அதன் பின்புலமாக விரியும் இந்த இரவு, யுகந்தோறும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரே நதி என்று தெரிகிறது. அந்த நட்சத்திரங்கள் என்னை எச்சரித்தது எதற்காக?

நாளை நிச்சயமாக விடியும் என்ற தர்க்கத்தை மனம் அறிந்திருந்தாலும் யோசனைகளெல்லாம் முடிவற்ற இரவையும், அதில் வெளிவர முடியா நிர்கதியை பற்றியே சுற்றுகிறது. எத்தனையோ கேள்விகள் மையிருட்டில் பாயும் தோட்டாக்களை போல சீறி அணைகிறது. மரணம் என்ற நிகழ்வை இரவோடு மனம் ஏன் உருவகிக்கிறது? தனிமை என்பதன் மிகப் சரியான உணர்வாக ஏன் இவ்விரவு பொருந்தி நிற்கிறது? இல்லை இவையிரண்டும் சேர்ந்து, மரணமென்பது தூய்மையான தனிமை என்பதை உணர்த்துவதே இவ்விரவின் பொருளாகக் கொள்ளாலாமா?

இரவு பெய்து கொண்டிருக்கையில் எல்லா விளக்குகளும் புள்ளியாக சுருங்கி நட்சத்திரங்களாகி விடுகின்றன. தூரத்து மலையடிவாரத்தின் சாலை விளக்குகளில் தொடங்கி, என் வீட்டின் முன் உள்ள வாசல் விளக்கு வரை சில ஒளிமிக்கவையாகவும், சில ஒளி குறைந்தவையாகவும் மாறி மாறி தெரிகின்றன. நானறிந்த வாழ்க்கை ஒரு மாபெரும் பிரபஞ்சமாக உருமாறி அதை கவனித்துக் கொண்டிருப்பவனாக மட்டுமே என்னை மாற்றி விடுகிறது என தோன்றுவதுண்டு. அவ்விரவுகளில் மாறி மாறி ஒளிரும் விளக்குகளையெல்லாம் தவமிருப்பதைப் போல பார்த்துக் கொண்டிருந்தால், என் கண் முன்னே நட்சத்திரங்களும், பால் வெளிகளும் உருவாகி அழிந்துக் கொண்டேயிருக்கிறது எனத் தோன்றும். நாளைய இரவின் பார்வையில் இன்றைய நட்சத்திரத்தின் இருப்பில் உண்மை என்று ஏதுமில்லை. இந்த இரவின் பொழுதில் ஒரு பால் வெளியின் மதிப்பு கண நேரத்தில் இழக்கப்படுகிறது என சில நேரம் தோன்றுவதுண்டு.
அளவிலடங்கா விசாலத்தின் முன் உறைந்துள்ள நிசப்ததின் மத்தியில் நடைபெறும் பெரும் நிகழ்வொன்றின் பிரதியெடுக்கப்பட்டு, சுருக்கப்பட்ட வடிவத்தை என் கண் முன்னே காட்டுவதற்கே ஒவ்வொரு இரவும் நிகழ்கிறதா?

இவ்விரவுகளில் மனதின் பல்லயிரக்கணக்கான கொக்கிகளில் பிடிபடாமல் ஒரு உணர்வு நழுவிக் கொண்டே செல்கிறது. அதன் வடிவத்தை வார்த்தையில் உரைக்க இயலவில்லை, மனச்சட்டகத்தில் ஒரு கணம் நிறுத்தி பதிக்கவும் முடிவதில்லை. எனக்கு என்றும் பரிச்சயமான உணர்வு ஆனால் என் பின்னால் ஒரு அடி விலகியே வந்துள்ள உணர்வு என்று தான் கூற முடியும்.

ஒருமுறை, ஸான் ஹோஸேயில் சில்லிடும் ஒரு சூரிய அஸ்தமன வேளையில் ஹாமில்டன் மலையுச்சியில் உள்ள ‘லிக்’ விண்வெளி ஆய்வு மையத்தின் அருகில் உள்ள கண்காணிப்பு அறையில் நின்றிருந்தேன். கோடை மாதங்களில் இருட்டுவதற்கு ஒன்பது மணியாகிவிடுவது வழக்கம். அம்மலைத்தொடரில் அடுத்தடுத்த சிகரங்களில் வெள்ளை மொட்டுக்களைப் போல வெவ்வேறு தொலைநோக்கி கோபுரங்கள் ஒட்டி நின்று கொண்டிருக்கும். அதனருகில் யாருமற்ற, சிதிலமான வீடுகளும், தங்குமிடங்களும் காணக் கிடைக்கும். மேற்கில் மறைந்த சூரியனின் பிடிவாதமான இறுதி வெளிச்சக் கீற்றுகளை அணைத்து விட்டு இருள் மேலெழுந்துக் கொண்டிருந்தது. கிழக்கில், மலைத் தொடர்களற்ற வெளியில் ஏதோவொரு ஊர் கீழே அமைதியாக உறங்கத் தயாராகிக் கொண்டிருந்தது. வெகு அபூர்வமாகவே அந்நேரங்களில் வாகனங்கள் அங்கே செல்வதுண்டு. மரங்கள் அனேகமிருந்தாலும் இருளடையும் பறவைகள், பூச்சிகளின் ஓசை மிக சன்னமாகவே கேட்டுக் கொண்டிருந்தது. அது மற்ற இடங்களை விட நிசப்தமான, ஆழ்ந்த இரவைக் கொண்டது.

என் வாகனத்தை கிளப்பிக் கொண்டு கீழிறங்கிச் செல்ல நினைக்கையில் ஒரு மனிதன் தனியே வந்துக் கொண்டிருந்தான். கடந்து சென்றாலும் அவன் என்னை கவனிக்கவில்லை. நேராகச் சென்று தொலைநோக்கி கோபுரத்தின் பெரிய கதவுகளை தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு திறந்து, உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டான். சிறிது நேரத்தில் அக்கோபுரத்தின் தானியங்கி கூரை திறந்து கொள்ள, ஒரு பிரம்மாண்டமான தொலைநோக்கி தன் பார்வையை இருளில் செலுத்த ஆரம்பித்தது. வலதுபுரம் இரவு தொடங்கிக் கொண்டிருக்க, இடதுபுரம் அதை ஒத்துக் கொண்டு சகல மனிதரும் நித்திரையில் அமிழத் தொடங்க, நடுவில் ஒருவன் அதே இரவிற்குள் -தன்னை தனிமையில் பூட்டிக் கொண்டு – உற்று நோக்கி எதையோ தேடிக் கொண்டிருந்ததை பார்த்த பொழுது மனதில் கடந்து சென்ற உணர்வின் தூரத்து சாயலையே, இவ்விரவுகளில் நழுவிச் செல்லும் இவ்வுணர்வுக்கு என்னால் தர முடியும்.
கறுத்த பாதரசத் துளிகளென சேர்ந்து கொண்டேயிருக்கும் என் இரவுகளை, நான் கவனிப்பதை அறியாது, உற்று பார்த்துக் கொண்டிருக்கும் அது யார்?

No comments: