Sunday, September 30, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 2

வியரெஜோ, இத்தாலி
ஏப்ரல் 5, 1903

பிப்ரவரி 24 அன்று எழுதி அனுப்பிய உங்களுடைய கடிதத்திற்கு தாமதமாக இன்று பதிலளிப்பதற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன். இத்தனை காலமும் உடல் நலமற்று இருந்தேன், நோய்வாய்ப்பட்டு என்று சொல்ல இயலாது, ஆனால் இன்ஃப்ளுயென்ஸா போன்ற உடல் தளர்ச்சியால் எந்த காரியத்தையும் செய்ய முடியாமல் இருந்தேன். என் உடல்நிலை இறுதி வரை முன்னேற்றம் கொள்ளாததால், தெற்கு கடற்கரை பகுதிக்கு வந்தேன், அதன் நலத்தன்மை மீண்டுமொருமுறை எனக்கு உதவியது. ஆனால் நான் இன்னும் முழுமையாக குணமடையவில்லை, எழுதுவது கடினமாக உள்ளது. ஆதலால் நான் அனுப்ப ஆசைப்பட்ட உங்களுக்கான கடிதத்திற்கு பதிலாக இந்த ஒருசில வரிகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நிச்சயமாக, உங்களுடைய ஒவ்வொரு கடிதமும் எனக்கு மனமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பதில் உங்களுக்கு மிகவும் பழக்கப்பட்டு போயிருக்கலாம், அதனாலேயே நீங்கள் பல நேரங்களில் வெறுங்கையுடன் திரும்பிச் செல்லலாம்; ஏனென்றால் முடிவில் முக்கியமான, ஆழ்ந்த விஷயங்களில் நாம் சொல்ல இயலா தனிமையில் தான் உள்ளோம்; ஒரு மனிதன் மற்றொனுவனுக்கு வெற்றிகரமாக உபதேசமோ அல்லது உதவியோ செய்து முடிக்க பல சம்பவங்கள் ஒன்று பட்டு சரியாக நடந்தேற வேண்டியுள்ளது.

Tuesday, September 18, 2012

புத்தகத்தை வாசிப்பது எப்படி? – விர்ஜினியா வுல்ஃப்

முதலில் இந்த தலைப்பின் இறுதியில் உள்ள வினவும் தன்மையை குறிப்பிட்டு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதற்கான பதிலை நான் அடைந்தாலும், அந்த பதில் எனக்கு மட்டுமே பொருந்தும், உங்களுக்கு அல்ல. மற்றெவருடைய அறிவுரையையும் ஏற்காமல், தன்னுடைய உள்ளுணர்வை தொடர்ந்து சென்று, தன்னுடைய தர்க்கத்தை உபயோகித்து, தனக்கான முடிவுகளை அடைய வேண்டுமென்பதே வாசிப்பதற்கான அறிவுரையாக ஒருவர் மற்றொருவருக்கு தர முடியும். நமக்குள் இந்த கருத்து சம்மதமென்றால் நான் என்னுடைய கருத்துகளையும், பார்வைகளையும் உங்கள் முன் வைப்பேன், ஏனென்றால் அவை, ஒரு வாசகன் கொள்ள வேண்டிய முக்கிய குணமான, உங்கள் வாசிப்பு சுதந்திரத்தை தடுப்பதற்கு அனுமதிக்க மாட்டீர்கள். புத்தகங்களைப் பற்றி அப்படி சட்டங்கள் வகுத்திட முடியுமா என்ன?

வாட்டர்லூவின் யுத்தம் நிச்சயமாக குறிப்பிட்ட ஒரு நாளில் தான் போரிடப்பட்டது: ஆனால் ஹாம்லெட் லியரை விட சிறப்பான நாடகமா? யாராலும் முடிவாக சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரும் அதற்கான முடிவை அவர்களே அடைய வேண்டும்.

Sunday, September 9, 2012

திரை கடல் திரவியம் - சிறுகதை


மதிய உணவு இடைவேளையில் புதிதாய் வேலைக்கு சேர்ந்த நண்பனுடன் திரைப்பட பாடல்களை போலவே ரீமிக்ஸ் பாடல்களை உருவாக்குவதற்கு இசை ஞானம் தேவையில்லை என உணர்ச்சிகரமாக விவாதித்ததை இப்போது நினைக்கையில் கூச்சமாக இருந்தது. மதியம் மூன்று மணியளவில் கம்பெனியில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு தற்போதைக்கு நாங்கள் வடிவமைத்துக் கொண்டிருந்த எல்லா மின்னணு சாதனங்களையும் நிறுத்தப் போவதாக அறிவித்தார்கள். சுருக்கத்தில், நாளை காலை வேலைக்கு வேண்டுமென்றால் வரலாம் ஆனால் செய்வதற்கு ஓன்றும் இல்லை. அடுத்தது அதிகாரப்பூர்வமாக வேலைக்கு வரவே வேண்டாம் என்று எப்போது அறிவிப்பார்கள் எனத் தெரியவில்லை.

     மொத்தமாக ஆயிரம் சொச்சம் பணியாளர்களும் மாநாட்டுக் கூடத்தில் திரண்டிருக்க கோட், சூட், டை, பளபளக்கும் ஷூ அணிந்த இருவர் மேடை மீது நின்று கொண்டு அதை அறிவித்தார்கள். கீழே நின்றவர்களின் முகங்களை பார்க்க சகிக்கவில்லை. சிலர் தரையை பார்த்துக் கொண்டேயிருந்தார்கள், இரு ஆள் உயரமும் பத்தடி அகலமும் உடைய ஜன்னல் கண்ணாடி வழியே சிலர் தெருவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். வேறு சிலரோ கூட்டத்தின் நடுவே யாருக்கெல்லாமோ அவசரமாக இங்கு நடந்துகொண்டிருப்பதை செல்பேசியில் தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். என் முகத்தை கண்ணாடியில் எப்படி இருக்கிறது எனப் பார்க்கலாமோ என்றும் தோன்றியது.