Saturday, August 4, 2012

இசைச் செவி


சில வாரங்களாக வலிந்து வேலைக்கு காரில் போய் வருகையிலும், வீட்டில் கணினியில் இணையத்தில் மேய்கையிலும் தொடர்ச்சியாக ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையை கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மரபிசையில் அதிக நாட்டமோ பழக்கமோ இல்லாதிருந்ததால், இப்போது மனதை பழக்கிக் கொள்ள இசை கேட்கும் செயலை ‘வலிந்து’ செய்ய வேண்டியுள்ளது. எனக்கு செவியுணர்வு ஒப்பிடுகையில் குறைவு என யூகித்து வைத்திருக்கிறேன். இந்த நாட்களில், மரபிசையை கேட்டு அவதானித்ததில் அந்த யூகம் இன்னும் நிச்சயமாக மனதில் பதிந்து விட்டது.

என்னுடன் முதுகலையில் ஒரே அறையில் வசித்த நண்பன் தேர்ந்த கர்நாடக வயலின் இசையாளன். அவனிடம் நான் ஒரு பாட்டின் இரு வரிகளை கேட்டவுடனேயே ராகங்களை கண்டு கொள்ளும் சிலருடைய திறமையை வியந்து கொண்டிருக்கையில், அவன், அது கடினமான விஷயமேயில்லை என்றும், இசையை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் அத்திறமை எளிதில் சாத்தியப்படும் என்றும் பதிலளித்தான். அந்த உரையாடலுக்கு ஒரு வாரம் முன்பே மரபிசையை கேட்க ஆரம்பித்துவிட்டதால், மனதில் புது உற்சாகத்துடன் இசை கேட்டலைத் தொடர்ந்தேன். ஆனால் என் நம்பிக்கைப்படி அல்லது நண்பனின் நிபுண கருத்துப்படியோ இசைக் கட்டுமானத்தின் இணைப்புகளையும், அதன் வடிவங்களையும் மனதால் பகுத்தறிய இயலவில்லை.


நண்பனோடு மறுபடியும் உணவு விடுதியொன்றில் சனிக்கிழமை மாலை பேசிக் கொண்டிருக்கையில் என் முயற்சியையும், அதன் கைமேல் பலனின்மையையும் சுருக்கமாக விளக்கினேன். தனக்கு ஹிந்துஸ்தானி இசையில் அதிக நாட்டமில்லை ஆனால் கர்நாடக இசையில் அடுக்கடுக்காக பாட்டுகளை தன் கணினியில் வைப்பிருப்பதாக சொல்லி, அடுத்த முறை சந்திக்கும் பொழுது எனக்கு பதிவு செய்து தருவதாக வாக்களித்தான். மேலும், என் இசையறிவை உயர்த்த தவழ் அடிகளாக முதலில் ‘மோகனா’ மற்றும் ‘ஹம்ஸத்வனி’ ராகங்களில் அமைந்த பாடல்களை இணையத்தில் கேட்கச் சொன்னான். எனக்கு ஹம்ஸத்வனி என்ற பெயர் மிகவும் பிடித்திருந்தது. அவையிரண்டும் சுலபமாக கண்டறிய கூடிய ராகங்கள் என்றும் அவற்றை ஒரு பாட்டில் எங்ஙனம் கண்டு கொள்வது என்பதை விளக்க சன்னமாக பாடியும் காட்டினான். அவன் பாடக் கேட்டு ஐந்தாவது வினாடியில் அவை மனதில் எங்கோ அரூபமாக கரைந்து போயிற்று. திரும்பவும் அவனிடம் கேட்கத் தோன்றாமல் பேசாமலிருந்து விட்டேன். இதற்கிடையில் மரபிசைக் கேட்டல் என்பது பழக்கப்படுத்த வேண்டிய ஒன்றிலிருந்து இயல்பான ஒரு செயலாக மனம் ஏற்றுக் கொண்டது. இரண்டு நாள் திரைப்பட இசையோ அல்லது ஆங்கில இசையோ கேட்டால் கூட மறுபடியும் மரபிசை கேட்பதை வலிந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றாகிவிட்டது. கர்நாடக இசைப் பாடல்களையும் ஹிந்துஸ்தானி பாடல்களையும் பிரித்து புரிந்து கொள்வது சுலபமாகி விட்டது. இதுவரை அதுவே என்னுடைய நிலையில் மிகச்ச் சிறந்த முன்னேறறம் என நினைக்கிறேன்.

ஹிந்துஸ்தானி இசை மிக விசாலமான நீர் நிலையைப் போலவே எண்ணிக் கொள்கிறேன். அதைப் பாடுபவர்களும், பக்க வாத்தியங்களை வாசிப்பவர்களும் அந்த நீரில் மெதுவாக அசைந்து செல்லும் சிறு ஓடங்களைப் போலவே எனக்கு காட்சியளிக்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் மற்றவர்களை தொலைத்து விட்டு ஆடியாடி மிதந்து செல்கிறார்கள். சிறிது நேரத்தில் சட்டென அவர்கள் மற்றவர்களை கண்டு கொண்டு அருகில் வந்து முகமன் செய்து விட்டு மறுபடியும் தம்போக்கில் மிதந்து பிரிகிறார்கள். ஒரு பாடலில் இது பல முறை நிகழ்கிறது. பக்க வாத்தியங்களை வைத்து ஒப்பிடுகையில் பாடகரின் ஓடம் கவனத்தை ஈர்க்கும் நிறமுடையது, ஆனால் அவர்கள் சஞ்சரிக்கும் தொலைவில், அந்த வேறுபாடு தனிமையின் விசாலத்தில் சிறு குறிப்பாக சுருங்கி விடுகிறது. ஹிந்துஸ்தானி இசையை கேட்பது படித்துறையில் நீர் நிலைக்குக் சமானமாக இருக்கும் படியில் பாதத்தை வைத்து சிறு அலைகளை உணர்வது போன்றதாகும். சில தருணங்களில் அலைகள் பெருவிரலை தொட்டுச் செல்லும், மறு சமயம் பாதத்தின் பாதி வரை நீர் ஏறி வரும். வெகு சில நேரங்களில் அவ்வலைகள் மிக குளிர்ச்சியுடன் கணுக்கால் வரை வந்து திரும்பும். அசல் படித்துறையை போலன்றி அந்த அலைகளின் தொடக்கம் அங்கே மிதந்து கொண்டிருக்கும் ஓடங்களின் ஒருமித்த அசைவுகளின் பலனே என நான் அறிவேன். சில பாடல்களின் தொடக்கமான ஆலாபனையை கேட்பது அடர்ந்த இருட்டில் அதே படித்துறையில் நின்று கொண்டிருப்பதற்கு ஒப்பாகும்.

மாறாக கர்நாடக இசை தனக்கென கரைகளை உயர்த்திக் கொண்டு பாதையிட்டு செல்லும் ஆற்றைப் போலுள்ளது. என் நண்பனின் சொற்களை கடன் வாங்கினால், ‘வர்ணம் பிறகு ஆலாபனை அதைத் தொடர்ந்து வேண்டுமென்றால் தானம் பிறகு பல்லவி, அதை முடித்து விட்டு அநுபல்லவி….” என அதன் வடிவத்தை எளிதில் கண்டு கொள்ள இயலும். என்னால் கூட சில பாடல்களைக் கேட்டவுடன் அப்பாடலின் போக்கை ஒருவாறு யூகித்து விட முடியும். உதாரணமாக ஆலாபனை எப்போது முடியும் என கடைசி நொடி வரை எனக்கு பிடிபடுவதில்லை. ஆனால் அது முடிந்தவுடன் அடுத்ததாக அப்பாடல் எப்படி இருக்கும் என கேட்ட பழக்கத்தில் மனம் அதற்கு தயாராகிவிடும் என கவனித்திருக்கிறேன். அப்படிப் பட்ட பரிச்சயம் ஹிந்துஸ்தானி இசையில் இன்னும் கைவரவில்லை. கர்நாடக இசையை ஆறு என உவமைப்படுத்தியதால் அதில் தொலைந்து போவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லவே இயலாது. ஆற்றின் போக்கை ஒத்த சுழிப்புகளும், அருவிகளும், நீர் சிதறல்களும் அதில் பிரதிபலிக்கும் வானவில்லுமாக கர்நாடக இசை பொங்கி செல்கிறது. அவற்றின் பல பாடல்களின் ஆலாபனைகள் ஹிந்துஸ்தானி இசையின் விரிந்த தன்மையை அடைந்து விடுகின்றன.

ஹிந்துஸ்தானி இசை வழுக்கிச் செல்கிறதென்றால் கர்நாடக இசை துல்லியமாக பதிந்து செல்கிறது என தோன்றுவதுண்டு. பாடல் வரிகள் என்பதைத் தாண்டி அதன் பக்க வாத்தியங்களும் அத்தன்மையுடனேயே அமைந்திருப்பதைக் காணலாம். கர்நாடக இசையில் மிருதங்கம் என்றால் ஹிந்துஸ்தானியில் தபலா. முன்னது ஒப்பிடுகையில் துல்லியமான தாளச் சத்தத்தைக் கொடுக்கவல்லது. அதைப் போலவே கர்நாடக இசையில் வயலின் இசை, பாடலைத் தொடருமென்றால் ஹிந்துஸ்தானியில் அதைச் செய்வது ஹார்மோனியம். இங்கும் வயலின் ஹார்மோனியத்தை விட துல்லியமான ஒலியை இயற்றக் கூடியது. இவையனைத்தையும் ஒன்று சேர்கையில் இவ்விரண்டு இசையும் தமக்கென ஒரு குணத்தையும் அதன் வழியே கேட்பவரின் மனதில் வேறுபட்ட உணர்வைக் கொடுக்கிறது என நினைக்கிறேன்.

எவ்வகையிலும் ஒன்றிலிருந்து மற்றொன்று சிறந்தது என சொல்ல இயலாது. கேட்கும் மனதைப் பொறுத்து ஒவ்வொரு முறையும் அவைகளுக்கிடையில் சார்பு நிலையை எடுத்துக் கொள்கிறேன். தமிழில் நிறைய பாடல்களை கேட்பதால் கர்நாடக இசையை மனம் இன்னும் நெருக்கமாக உணர்கிறது. இதுவரை ஹம்ஸத்வனியை எப்படி பிரித்தறிவது என செவியையும் மனதையும் பழக்கவில்லை. ஹம்ஸத்வனியை கேட்டுவிட்டு வேறொரு ராகத்துடன் கூடிய பாடலைக் கேட்டு, அதுவும் பிடித்திருந்தால் அங்கேயும் ஹம்சத்வனி தான் பாடப்பட்டது என மனம் புரிந்து கொள்கிறது.
ஒவ்வொரு பாடல்களிலும் அதன் தனித்துவமான ராகங்களை கண்டு கொள்வது இன்பமென்றால், இன்று நான் செய்யக் கூடியது என்பது, கேட்கும் ராகங்களிலெல்லாம் ஹம்ஸத்வனியை கண்டு கொள்வது மட்டுமே.

No comments: