Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, August 10, 2012

கவிதை விவாதத்தின் அவசியம்

நவீனக் கவிதைகள் என்பது நவீன காலத்து ஓவியங்களை பார்ப்பது போன்றதாகும். பழைய ஓவியங்களில் முதலில் நாம் பார்ப்பது ஒரு காட்சியை – நாம் பழக்கப்பட்ட விதத்தில். உதாரணமாக ஒரு நிலவெளிக் காட்சி, ஒரு மனிதர், ஓர் இடம் அல்லது ஒரு புராண சம்பவம். அந்த புராணச் சம்பவத்தை பற்றி நாம் ஒன்றும் அறியாமலிருந்தால் கூட – ஒருவன் நிற்கிறான், ஒரு இறக்கையுள்ள குழந்தை பறக்கிறது, கீழே ஒரு அழகிய பெண் நழுவும் ஆடைகளுடன் படுத்திருக்கிறாள் என தனித்தனியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் நவீன ஒவியங்கள் ஒரு நிறங்களின் கலவையாகவே நம்மிடம் காட்டப்படும். தர்க்கப்படுத்தி புரிந்து கொள்ள அவற்றில் சாத்தியங்கள் மிகக் குறைவு. எடுத்த எடுப்பிலேயே அதிலிருந்து நாம் நம்முடைய கற்பனையை வைத்து பொருளை உருவகித்துக் கொள்ள வேண்டும். இது நவீன கவிதைகளுக்கு ஒரு தோராயமான ஒப்பீடு என நினைக்கிறேன்.

நவீன கவிதைகளை வாசிப்பது என்பது சுலபமற்றதாக இருப்பதற்கு முக்கிய காரணம், அவை நேரடியாகவே சொல்லிலிருந்து பொருளையும், ஒரு அடியிலிருந்து தர்க்கத்தையும் பிடுங்கி எறிவதால் தான் என நினைக்கிறேன். முதலில் காலூன்றி நிற்க எதுவுமே இருப்பதில்லை. ஒன்றைச் சொல்லி அதிலிருந்து வேறொன்றிற்கு நாம் பயணிக்காமல், முதலிலேயே நமக்கு பரிச்சயமில்லாததை அவை சொல்லிச் செல்கின்றன.

Wednesday, October 20, 2010

ஒற்றை செறுப்பு

திசைகள் சங்கமிக்கும்
இடத்தில் கிடந்தது
தனிமையில் குழந்தையின்
ஒற்றை செறுப்பு

கால்களை தொலைத்து
துணையை பிரிந்து
யாரோ வரும் வழி நோக்கி
சுணங்கியபடியே

மலரா பாதங்களின் வெம்மை
ஒன்றையே அறிந்தவனுக்கு
இனி
காலி வீட்டின் முன் நாளிதழ்
புல் மண்டிய கல்லரையின் பெயர் தூண்
என்ற
சொந்தங்களின் வழியே அறிவான்
தன் மறு பிரதிபலிப்பை

தினசரி கடந்து போகிறேன்
நம்பிக்கையுடன்
காணாமல் போய் விடுவான் என
நேற்று இன்று நாளை ...

Monday, September 20, 2010

ஊமை சாட்சி

இரவு தொடங்கிய நேற்று
புரை படிந்த பூனையின் ஒற்றை கண்ணை
போல் நிலா
என் நெற்றியின் மேல்  மிதந்தது
என் வீதியின் தனிமையை போக்க
யார் முதலில் கண் சிமிட்டுவார்
என்று அதனிடம் விளையாடிக் கொண்டே நடந்தேன்
என் கண்கள் அசைந்தாலும் சிமிட்டவில்லை
நிலவின் பார்வையில்
அசைவில்லை சலனமில்லை
வெறும் ஒரு பார்வை
தோற்பேனோ என நினைத்து
கண்ணை குறுக்கி ஆழ்ந்து நோக்க
நிலவின் உள்ளே
கசடுகளை தாண்டி
ஒரு குழியில்
தலையை உயர்த்தி ஒருவன்
என்னையே பார்த்திருந்தான்,
கண்களை விலக்கி
நெஞ்சு விம்ம வீட்டுள் ஓடி
தாழிட்டுக் கொண்டேன்
அன்றிரவு என் சுவரில்
நிலவொளியுடன் சேர்ந்து
அவன் பார்வையும்
படர்ந்து கிடந்தது.

Sunday, August 8, 2010

தொலைந்தது

உறங்காமல் தூங்கி
விழிக்காமல் எழுந்து
உண்ணாமல் தின்று
பேருந்தின் உபரியாய்
பயணித்து
இயந்திரமாய் உழைத்து
என
ஜன்னலை திறக்க
நான்கு மாதமாயிற்று...
அதனடியில்
முழு நிறத்துடன்
இரு இதழ்களை வைத்துவிட்டு
இயற்கையாய் மரணித்திருந்தது
என் தொட்டிச் செடி

Sunday, December 6, 2009

கணக்கு

பேசியதும் பேசாததுமான
என் வார்த்தைகளை
கூட்டிப் பார்த்தேன்
மௌனமே மிஞ்சியது !!

இரவு சத்தம்

பெருவழியில் வாகனங்கள் செல்லும் அலையோசை
ஜன்னல் திரையில் வெட்டி விழும் தெரு விளக்கு
குளிர் சாதன பெட்டியின் மெல்லிய முனகல்
கூரையில் மேல்மாடி மனிதனின் நடை
பிறகு நானும் என் நிசப்தமும்...

Sunday, November 29, 2009

இருப்பு

என்
முன்னால் நான்
பின்னால் நான்
இருந்தும் யாருமில்லை ....

தீராக் கனவு

தினம் தினம்
கனவில் சிரிக்கும்
அமாவாசை நிலவை
பகலில் தேடுகின்றது
சூரியகாந்தி !!!