Monday, February 10, 2014

மொழி – எமர்சன்

மனிதனுக்கு இயற்கையின் மூலம் கிடைத்த மூன்றாவது பயன் மொழி ஆகும். இயற்கை என்ற ஊடகம் மூலம் மொழி மூன்று படி நிலைகளில் மனிதனுள் மொழி உருவாகிறது.

1. மனித மனதிற்குள்ளே உள்ள சகல சொற்களும் இயற்கையில் அவன் கண்டு, அனுபவப்பட்ட ஏதோ ஒன்றின் அடிப்படயிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. அவன் அனுபவத்திற்குள் வந்த இயற்கையின் உறுப்பை மற்றொன்றை சுட்டும் சின்னமாக மாற்றி சேர்த்துக் கொள்கிறான். சொற்களின் மூலத்தை தேடிச் சென்றால், ஆதிமொழியில் இயற்கையில் காணக் கிடைக்கும் ஒரு பொருளின் வரைபடத்தில் தான் சென்று முடியும். அதனாலேயே பழங்குடிகளும், குழந்தைகளும் தங்களைச் சுற்றி உள்ள உலகத்தை பெயற்சொற்கள் கொண்டு மட்டுமே குறிப்பிடுகிறார்கள்.

2. முதல் நிலையில் வார்த்தைகள் இயற்கை அங்கங்களின்  குறியீடு என்றால் அடுத்ததாக இயற்கையின் அங்கங்கள் மனித எண்ணங்களின் கூறியீடுகளாக உள்ளன. அவற்றைக் கொண்டே மனிதன் தன் மனவோட்டங்களை வெளிப்படுத்துகிறான். மனித மனம் அருவமான உணர்ச்சிகளுக்கு குறியீடுகளாக இயற்கை செயல்பாடுகளையும், மாறும் அதன் நிலைகளையும் தொடர்புறுத்திக் கொள்கிறது. மாறும் பருவ நிலைகளை மனநிலைகளை உணர்த்தும் உவமைகளாக, பாயும் வேங்கையை வீரனை சுட்டுவதாக, எறும்பின் இயல்பை விடாமுயற்சியின், சுறுசுறுப்பின் சின்னமாக, இன்னும் பல விதங்களில் இயற்கையில் காணகிடைக்கும் செயல்களை தன் மனதின் வெளிப்பாடுகளாக பெரிதாக்கி, மாற்றி அமைத்து தன் மொழியில் சேர்த்துக் கொண்டேயிருக்கிறது.

இயற்கையை தன் என்ண்ணங்களின் மொழிபெயர்ப்பாக மிக சிறந்த முறையில் மாற்ற கூடிய ஒருவன் தன் மொழியை இயற்கையின் அருகிலிருந்து அவதானிப்பதன் வழியாகவே உருவாக்கியிருப்பான். அதன் பொருட்டே ஒரு விவசாயியின், முதிர்ந்த கிராமத்தானின் சொற்கள் என்றும் மனிதர்களுக்கு நேர்மையின், உண்மையின் வாக்காக தோன்றுகின்றன. எண்ணங்களில் தூய்மையும், எளிமையும், தன் மனதை துல்லியமாக மற்றவர் அறிய உரைக்க வேண்டும் என்ற உந்துதலையும் கொண்டவர்கள் இயற்கையிலிருந்தே தன்னை வெளிப்படுத்தும் சொற்களை பெற்று இருப்பார்கள்.

புகழ், அதிகாரம், செல்வம் போன்றவற்றை மட்டுமே அடைய மறைமுகமாக ஆசைப்படுகையில் இயற்கை, மொழியின் வழியே எதை சுட்டுவதற்காக எடுத்தாளப்பட்டதோ அதை விட்டு வெகு தூரத்தில் சென்று விடுகிறது. காகித பணத்தைப் போல ஒரு வார்த்தைக்கு விளக்கமாக மற்றொரு வார்த்தை என திரிக்கப்பட்டு அதன் அசல் மதிப்பு மிகவும் தாழ்ந்து நசிந்து விடுகிறது. என்றும் மனிதனின் வீழ்ச்சியை மொழியின் வீழ்ச்சி பின்தொடர்ந்து வருகிறது. எவ்வளவு காலங்கள் இயற்கையிலிருந்து விலக்கி வைத்து மொழியினூடே உண்மை மறைக்கப்பட்டாலும், மனதின் உண்மையை உரைக்கும் வலுவுடைய, நேர்மையுடைய மனிதன் அதை கையிலெடுக்கையில் இதுவரை படிந்திருந்த களிம்புகளை உதறிக்கொண்டு மொழி இயற்கையிலிருந்து புதிய குறியீடுகளை வாங்கி தன் மேல் உடுத்திக் கொண்டு எழுந்து வரும். அப்படி மீண்டெழுந்த மொழி மனித சமூகங்களை அடுத்த மேல் நிலைக்கு ஒட்டுமொத்தமாக நகர்த்தும் வல்லமையை பெற்றிருப்பதை நாம் காணலாம்.

3. மனிதனின் எண்ணங்களையும் அவனுடைய சிறிய வாழ்வின் அலுவல்களையும் நடத்திச் செல்லும் மொழியின் வாகனமாக இருப்பது மட்டும் தான் இயற்கை உள்ளதா? அது உண்மையென்றால் மனிதனை சூழ்ந்துள்ள இயற்கையின் பொருட்களும், நிகழ்வுகளும் தங்களுக்கென்று ஒரு உண்மையை கொண்டிருக்கவில்லை என்று பொருள்படுகிறது. இயற்கையின் மொழி வெறுமனே மனித மனதின் உவமைகளே என்று குறுக்கப்பட்டு விடுகிறது. அதுவல்ல உண்மை. இயற்கையின் எல்லா கூறுகளும் தன் இருப்பின் வழியே காலாதீதமான, மேலான உண்மையை, தனி மனிதனுக்கும், மனித இனத்திற்கும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.


இயற்கையின் செயல்கள் வழியே மனிதன் கண்டு கொண்ட அழியா உண்மைகள் பல. அவை எல்லாம் பழமொழிகளாகவும், கதைகளாகவும், விழுமியங்களாகவும், நீதிகளாகவும் அதன் மனதில் தேங்கிவிட்டன. உதாரணமாக காக்கை உட்கார பனை மரம் சரிந்தது, ஓடும் நீர் தெளிந்து இருக்கும், காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று பல முக்கியமற்ற தினசரி அவதானிப்புகள் சகல மனிதர்களுக்கும் என்றும் அழியாத உண்மைகளை சொல்வதாக மாறிவிட்டன. இங்கு உள்ளவைகளை எல்லாம் உருவாக்கிய ஆற்றல் அல்லது ஆன்மா என்ற ஒன்று இயற்கையின் வழியே ஆதார உண்மைகளை கண்ணாடியினூடே செலுத்தப்பட்ட ஒளியாக உன்னத மனங்களுக்கு சில நேரங்களில் அளிக்கிறது. இயற்கை என்ற புதிரின் முன்னால் மனிதர்களுள் சிறந்த மனங்கள் அந்த செய்தியை எதிர்பார்த்து வரலாறு முழுவதும் காத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவ்வண்ணம் இயற்கையை பிரித்து பேருண்மைகளை கண்டு கொள்ளும் மனிதனுக்கு அதன் ஒவ்வொரு பொருளும், நிகழ்வும் ஆன்மாவின் புதியதொரு பக்கத்தை திறந்து வைத்துக் கொண்டேயிருக்கிறது.  புலப்படா உண்மைகள் இயற்கையின் வழியே பிரித்தறியப்பட்டு மனித அறிவின் பகுதியாக சேகரிக்கபடும் போது அவை மனித ஆற்றலின் மற்றுமொரு ஆயுதமாக மாற்றம் கொண்டு விடுகிறது. 

No comments: