நாஞ்சில் நாடன்
என்ற ஆளுமையுடன் பழக பல மணிக்கூறுகள் – மூன்று தினங்கள் அவர் உரையாற்ற கேட்டும், ஒரு
நாள் முழுவதும் அவருடன் ஊர் சுற்றிக் கொண்டும் - அமெரிக்காவில் வாய்ப்பு கிடைத்தது.
நாஞ்சில் நாடன்
எதை போல் நேர்ப் பழக்கத்தில் தோற்றமளிக்கிறார்? அவருடைய கதைகளை போலவா? கட்டுரைகளைப்
போலவா? சராசரி பயணியாகவா? அல்லது இவையெல்லாமில்லாத வேறொரு ஆளுமையாகவா?
ஃப்ரீமான்ட் (Fremont) நகரத்தில் முதல் நாள் கம்பராமாயணம் கலந்துரையாடலுக்கு அவர் வீட்டினுள் நுழையக்
கண்ட பொழுது, மிக தயக்கத்துடன் புதியவர்களை கண்டு வணக்கம் சொல்லும் ஒரு எளிய மனிதராகத்
தான் தோன்றினார். தன்னிடம் கேட்கப் படாத கேள்விகளுக்கு வலிய சென்று அவர் பதிலுரைத்து
நான் காணவேயில்லை. சின்ன தகவல் முதற்கொண்டு எல்லாவற்றையும் சிறு தயக்கமின்றி அடுத்தவரிடம்
கேட்டுத் தெரிந்து கொண்டார். வெளியிடங்களில் தான் காண்பதை உள்வாங்கிக் கொண்டே, சில
நேரங்களில் பாக்கெட்டில் வைத்திருந்த கனக்கச்சிதமான ஒரு நோட்டு புத்தகத்தில் குறிப்பெடுத்துக்
கொண்டார்.
இதிலிருந்து வெகுவாக
வேறுபடும் முகம் கம்பனை பாடும் பொழுது நாஞ்சிலுக்கு வருவதுண்டு. அவரே சொல்வதை போல கம்பன்
அவருடைய ‘Passion’. அதன் பொருட்டே கம்பராமயணத்தை பாடும் பொழுதும் அதைப் பற்றி பேசும்
பொழுதும் அவரின் பேச்சிலும், முகத்திலும் பரவசம் தெரிந்தது. கம்பராமாயணம் செய்யுளை வாசிக்கும்
பொழுது ஒரு பாவம், அதை விவரிக்கும் பொழுது வேறொரு பாவம். முதலாவது பாவம் இரண்டாவதை
விட கொஞ்சம் தூக்கல். என் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு எதிலும் இப்படி ஒரு மணி நேரம்
ஒரு ஆசிரியரை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு, அவர் சொல்வதை இடைவெளியில்லாமல் மனதில்
வாங்கியதில்லை. கும்பகர்ணனுக்கும் இராவணனுக்கும் நடக்கும் உரையாடல் பகுதியில் அதை உணர்ந்து
அன்னிச்சையாக அவரின் மேல் வைத்த பார்வையை விலக்கிக் கொண்டேன். அது ஒரு அனுபவம்.
இதை என்னால் நிச்சயமாக
சொல்ல முடியும், ஏனென்றால் மூன்றாவது நாள் சங்கக் கவிதைகளை பற்றி அவர் உரையாற்றும்
பொழுது ஆசிரியருக்கும் சரி, மாணவனுக்கும் சரி, அவ்வனுபவம் நிகழவில்லை.
நாஞ்சில் நாடனின்
கட்டுரைகள் பெரும்பாலும் தான் வாழ்கின்ற சமூகத்தை பற்றியும், அவற்றை நோக்கியும் பேசுபவை.
ஒரு தனி மனிதனாக, தன் சமூகத்தின் மேல் அக்கறை கொண்டவராக அவர், மிகவும் முன்னேறிய நாட்டில்
சுற்றி அலையும் பொழுது, தொடர்ந்து அதை தன் நாட்டுடன் ஒப்பிட்டுக் கொண்டே வந்தார். எங்கும்
தட்டுப்பாடில்லாத சில்லரை, கேட்டால் வழி சொல்லும் சக மனிதர், பிரம்மாண்டமான பாலம், தூய்மையான
சுற்றுப்புரம் என பல காட்சிகளை (பெரிதோ, சிறிதோ…) ஒப்பிட்டு நோக்கி வருத்தப்பட்டுக்
கொண்டே இருந்தார். “One who cares the most is the one who suffers the most” என்பது
உண்மையானால், அவருடை இந்த பயணத்தில் அடி மனதில் ஒரு வலியை உணர்ந்து கொண்டே இருந்ததாகவே
நான் யூகிக்கிறேன். ஹூவர் அணையை பற்றி சிலாகித்து பேசும் பொழுது, “எவ்வளவு பெருசா கட்டிருக்கான்”
என்ற ஆரம்ப வரியை தொடர்ந்து, “எவ்வளவு சுத்தமா வச்சிருக்காங்க!!! யாரும் ஒரு ப்ளாஸ்டிக்
பாட்டில் அங்க தூக்கி போடுறதில்ல…” என்ற இரண்டாவது வரி தொடர்ந்து வந்தது அவரிடமிருந்து.
இதே தொனியில் அவர் மிகவும் அனுபவித்த மற்ற இடங்களில் நின்ற பொழுதும் ஒரு வரி, தன் நாட்டை
ஒப்பிட்டு வந்து கொண்டேயிருந்தது.
ஆனால் அவ்வுணர்வுகள்
எவ்வகையிலும் பயணத்தின் அனுபவத்தை இடை மறிக்காமல் கவனித்துக் கொண்டார் என்றே தோன்றியது.
இடைவெளியில்லாமல் அமெரிக்காவில் பயணம் செய்து கொண்டிருந்தாலும், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும்
வெளிக்காட்சிகளை காண்பதற்கு ஆயுத்தமாகவே இருந்தார். இந்நாட்டின் நூலகங்களையும், பிள்ளைகளுக்கு
படிக்க கிடைக்கும் புத்தகங்களையும், அதற்கு பெற்றோர்கள் அளிக்கும் ஊக்கத்தையும் தமிழ்
நாட்டிற்கு ஒப்பு நோக்கும் பொழுது, நாஞ்சில் அவருடைய காரமான கட்டுரைகளாக மாறினார் என்று
சொல்ல வேண்டும் (அங்கதம் தவிர்த்து…). அவர் பேசக் கேட்ட நான்கு நாட்களுமே நூலகங்கள்
குறித்த தன்னுடைய அங்கலாய்ப்பை சொல்லிக் கொண்டேயிருந்தார். அதே போல் சராசரி தமிழ் மனதின்
சமூக அக்கறையின்மை, இயலாமை, சீர்கேடு எல்லவற்றையும் கடுமையாக சாடி, இறுதியில் அவைகளுக்கு
புறக்காரணங்களுக்கு சமமாக தனி மனிதனின் ஒரு வகை மனக் கோளாறும் காரணம் என்ற முடிவுக்கு
வந்து விட்டார் என்று தெரிந்தது.
இன்று தமிழின்
பழம்பெரும் நூல்களின் மறுபதிப்புகளின் நிலையென்ன, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்றுத்
தரப்படும் தமிழின் தரமென்ன, அதை விட முக்கியமாக
கற்றுக் கொடுப்பவரின் தரமென்ன, வெளிச்சப்படுத்தப் படாமல் போன தமிழ் ஆர்வலர்களும் அவர்தம்
படைப்புகளின் நிலையென்ன என்று கேள்விகளும், பதில்களும், எதிர்வினைகளும் அவர் மனதில்
குவிந்து கிடக்கிறது. இவையெல்லாம் நேர் பேச்சில் அவருடைய கட்டுரைகளை போலவே, ஆனால் அங்கதமின்றி
ஒரு படி அக்கறை கூடி, ஒலிக்கிறது.
நாஞ்சில் நாடன்
தன் கதைகளாக காட்டிக் கொண்ட தருணங்கள் மிக சில. கம்பராமாயணம் உரையின் இரண்டாம் நாள்
தொடக்கத்தில், சூடிய பூ சூடற்க தொகுப்பில் உள்ள தன்ராம் சிங் என்ற கதையில் வரும் கூர்க்கா
கதாபத்திரங்களை பற்றி பேசுகையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். குறிப்பாக அந்த கூர்க்காக்கள்
தம் குடும்பத்தில் ஒருவர் இறந்த சேதியை கொண்டுவரும் கடிதத்தை வாரக்கடைசியில் கடற்கரையில்
கூடி உட்கார்ந்து, துக்கம் பகிர்ந்து, இறுதியில் எரிப்பதை சொல்லும்பொழுது அவர் குரல்
உடைந்தது. அவர் உருவாக்கிய கதை மாந்தரை, அவர் குரலால், அதே மனவெழுச்சியுடன் உயிர்த்தெழக்
கேட்டது மறக்கவியலா தருணம். ஒருவகையில் அன்று மிக எழுச்சியுடன் வெளிப்பட்ட கம்பனின்
இராவணன் கதாபாத்திரத்திற்கு மேலே சொல்லப்பட்ட நிகழ்ச்சி ஒரு முகாந்திரமாக அமைந்தது
என்று நினைக்கிறேன்.
ஹிந்துஸ்தானி மற்றும்
கர்னாடக இசையில் மிகுந்த ஆர்வமுள்ளவர் என்பது அவரிடம் வலிந்து பேச்சுக் கொடுத்தாலன்றி
தெரியாது. அவர் காரில் ஸான்- ஃப்ரான்ஸிஸ்கோவிற்கு போகும் பொழுது, P.A.கிருஷ்ணனிடம் தற்பொழுது
யார் நன்றாக பாடுகிறார்கள், தனக்கு பிடித்தமான பாடகர்கள் யார் என விரிவாக சில நேரம்
பேசிக் கொண்டிருந்தார். எவ்வளவு நேரம் பேசினார் என்பதைக் காட்டிலும், மிக அமைதியாகவும்
தெளிவாகவும் அவருடைய பார்வைகளை சொன்னது மூலம் இசை மேல் உள்ள ஈடுபாடு விளங்கிற்று. ஆனால்
கேட்டாலன்றி, எதிரில் இருப்பவற்கு இசையில் பரிச்சயமானவர் என்றாலன்றி அவராக அதைப் பற்றி
பேச மாட்டார் என்றே நான் விளங்கிக் கொண்டேன்.
அடுத்தது சொல்லப்பட
வேண்டியது, தவிர்க்கவே இயலாதது நாஞ்சில் நாடனும் உணவும். பொதுவாக பலருக்கு பரிச்சயமானது
என்றாலும் கூட அதை தொடாமல் தாண்டிச் செல்ல இயலாது. சமீப காலமாக சைவத்திற்கு மாறி விட்டலும்,
நாஞ்சில் நாடனுக்கு அமெரிக்காவில் சாகசத்திற்கு பலவித உணவு வகைகள் கிடைத்தன என்று தான்
சொல்ல வேண்டும். தனிப் பேச்சில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால் இன்னும் பல நாட்களுக்கு
(சில மாதங்களுக்கு கூட..) கோவையில் அவர் வீட்டில் இரவுணவில் பல சோதனை முயற்சிகள் நடைபெறும்
என்பதே. குறைந்த செலவில், துரிதமாக, சத்தான, நிறைந்த உணவு சிலவற்றை செய்வதெப்படி என
கற்றுக் கொண்டார் என்பது உறுதி. போனால் போகட்டும் என நினைத்து உருளை கிழங்கை வைத்து
பொடிமாஸ் போல ஒன்றை எப்படி சீக்கிரம் செய்வது என்று கோல்டன் கேட் பிரிட்ஜ் அடியில்
எனக்கும் போதித்தார். (“ அப்புறம் எப்படி சார் உருளை வேகும்” என நான் கேட்க, அவரும்
திருமதி.P.A.கிருஷ்ணனும் ஒன்று சேர்ந்து, “முதல்ல உருளைய வேக வச்சிட்டு தான் இதெல்லாம்
செய்யவே ஆரம்பிக்கணும்” என்று தண்ணி தெளித்து விட்டு, போதனையை நிறுத்திக் கொண்டது
வேறு கதை…).
இங்குள்ள Starbucks
சங்கிலி காபி கடையில் அவர்கள் தரும் லாட்டே
(Latte) காப்பியை சில ‘பக்குவங்கள்’ சொல்லி அவர்கள் கையாலேயே தனக்கு பிடித்தமானதாக
மாற்றிவிட்டார் என்பதை ஸாவ்ஸலிட்டோ (Sausolito) கடற்கரையில் பார்த்தேன். வடகிழக்கு
அமெரிக்காவில் ஆரம்பித்து ஏறத்தாழ ஒரு மாதம் இதை செய்துவருகிறார் என நினைக்கிறேன்.
ஸான் ஃப்ரான்ஸிஸ்கோவிலிருந்து திரும்பி வரும் பொழுது, மாலை பொழுதின் உச்ச கட்ட நெரிசலில்
பின் இருக்கையிலிருந்த P.A.கிருஷ்ணன் மற்றும் துணைவியாருக்கு சரியான முறையில் ரச வடை
செய்வதெப்படி என்பதை முந்தின நாள் ஊறப் போடுவதிலிருந்து ஆரம்பித்து இறுதியில் அதை சாப்பிடும்
பொழுது நாக்கில் தொடங்கி வயிற்றில் அடங்குவது வரை அதன் சுவை எப்படி இருக்கும் என சொல்லிக்கொண்டு
வந்தார். இனி அந்த ரச வடை தவிர்த்து வேறு சாப்பிட்டால் எனக்கு திருப்தி படாது. ஒவ்வொன்றாக
சொல்வதைக் காட்டிலும் இப்படிச் சொல்லலாம். டோஃநட்ஸ் (Doughnuts), மெபிள் ஸிரப் ஊற்றிய
பான் கேக் (pan cakes), ஸாலட், சான்ட்விச், வீட்டுச் சாப்பாடு, சரவணா பவன் சாப்பாடு
என நாஞ்சில் உண்ட உணவின் ருசி அவரை சுற்றி பொங்கி வழிந்து கொண்டேயிருந்தது.
தீர்க்கமான கருத்துக்களும்,
விமர்சனங்களும், எதிர்வினைகள் இருப்பினும் நாஞ்சில் நாடன் சக எழுத்தாளர்களை பற்றி குறைவாகவே
பேசினார், முக்கியமாக விமர்சனங்களை. ஆனால் அதை குறிப்பிட்டு கேட்டால் மிகவும் ஆணித்தரமாக
என்ன நினைக்கிறாரோ அதை தயக்கமின்றி சொன்னார். தான் ஒரு எழுத்தாளராக இருப்பதாலோ அல்லது
இலக்கிய சூழலில் தனக்கு ஒவ்வாத சூழ்நிலை நிலவுவதாலோ அவர் தேவையற்ற ‘gossip’ஐ தவிர்ப்பதாகவே
நான் புரிந்துக் கொண்டேன்.
அவர் பேசக் கேட்ட
நான்கு நாட்களில் ஒப்பு நோக்க அவர் தொடாத விஷயம் என்று ஒன்றுண்டென்றால் அது தத்துவம்
அல்லது சித்தாந்தம் என்று சொல்வேன். அவருடைய வயதிற்கும், வாசித்த நூல்களுக்கும், மேற்கொண்ட
பயணங்களுக்கும், கடந்து சென்ற வாழ்கை அனுபவங்களுக்கும் சாரமாக ஏதோவொரு சித்தாந்ததில்/
தத்துவத்தில் சார்பு ஏற்பட்டு விட வாய்ப்புள்ளது. உரையாடல்களில் அது மறைமுகமாக கூட
வெளியில் தெரிந்து விடும், அதுவும் மிக வெளிப்படையான நாஞ்சில் நாடனை போன்றவரிடம் நிச்சயமாக.
ஒன்று நான் கண்டு கொள்ளவில்லை அல்லது கண்டதும், கேட்டதும் தாண்டி வேறொன்றுமில்லை என்பது
தான் அவரின் கண்டடைதலாக இருக்கக் கூடும்.
இறுதியாக, நாஞ்சில்
நாடன் அவருடைய கட்டுரையாகவா, கதைகளாகவா, ஒரு பயணியாகவா அல்லது மற்றொரு ஆளுமையாகவா தெரிகிறார்
என்று ஆரம்பித்த கேள்வி. உண்மையில், அதற்கான பதிலை என்னால் கூற இயலாது. எனக்கு கிடைத்த
நேரம் போதாமல் இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.
ஆனால், நாஞ்சில் நாடன் தன்னை ‘எதுவாகவும்’
காட்டிக் கொள்ள முயற்சிக்காதவர் என்று தீர்க்கமாக சொல்வேன்.
ரெட்வுட் சிட்டியிலிருந்து,
ஃப்ரீமான்டிற்கான பயணத்தில், டம்பார்ட்டன் பாலத்தில் (Dumbarton Bridge) காரில் போகும்
பொழுது நாஞ்சில் நாடன், “இந்த ஊருல புருஷனும் பொண்டாட்டியுமா குடும்பம் நடத்திட்டு, அங்க
இந்தியாவுல பெத்தவங்களுக்கு செலவுக்கு பணம் அனுப்பிட்டு நல்ல படியா வாழணும்னா எவ்வளவு
சம்பாதிக்கணும்?”
அதுவும் கூட நாஞ்சில்
நாடன் தான்.
---------------------------------------------------------------------------------------------
2 comments:
நீ சொல்லக் கேட்டதிலும், இதைப் படித்தபோது சுவை அதிகமாக இருந்தது!!! சுவாரசியமான பதிவு!!!
- Makesh
நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்து பிடிக்கும். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல, மற்றவர்களைப் பற்றி gossip பேசாத அவருடைய தன்மை மிக மிகப் பிடிக்கும். தமிழ் எழுத்தாளர்களுள் சமூகம் குறித்த அக்கறை மிகுந்தவர்கள் வெகு சிலரே. அவர்களுள் நாஞ்சில் குறிப்பிடத்தக்கவர். அவர் ஒரு நல்ல மனிதராகவும் இருப்பது அவருடைய எழுத்தை வாசிக்கும்போதே தெரிந்துவிடும்.
Post a Comment