Tuesday, October 23, 2012

விவாத சூழல்

நண்பர் ஒருவருடன் காலை நடையின் போது இலக்கியம் குறித்தும், எழுத்தாளர் ஒருவரின் கட்டுரை குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தேன். அந்த விவாதம் தீர்க்கமான புள்ளியில் இருந்து ஆரம்பிக்கவில்லை. தினசரி வாழ்க்கையை குறித்து ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றத்தின் இடையே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த தலைப்பு உள்ளே நுழைந்து விட்டது. முடிவில் அது சுவாரசியமான விவாதமாக அமைந்தது. அதன் தலைப்பு தோராயமாக இப்படி வைத்துக் கொள்ளலாம் – “மனிதனுக்கு கலை, இலக்கியம் போன்ற துறைகளில் ஆர்வம் பிறப்பிலேயே எழுகிறதா அல்லது தொடர் பயிற்சியின் விளைவாக உருவாவதா?” எங்களுடைய நிலைப்பாடு அந்த கட்டுரையுடன் உடன்பட்டும், எதிர்த்தும் இருக்கவில்லை. இங்கு விவாதத்திற்கு உள்ளானது அக்கட்டுரையை குறித்த எங்களுடைய நுண்புரிதல்கள் மட்டுமே.

விவாதத்தின் முடிவு என்ன, அப்போது பகிரப்பட்ட கருத்துக்கள் என்ன என்பதை இங்கு விளக்க முற்படவில்லை. எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்து அதைப் பற்றி – விவாத சூழலைப் பற்றி – யோசித்துப் பார்க்கையில் சில விஷயங்கள் புலப்பட்டன. அவைகளே இங்கு பகிரப்பட உள்ளன.


முதலாவதாக, நல்ல விவாத சூழல் உருவாவதற்கு பங்கெடுப்பவர்களின் இடையே பொதுவான கூறுகள் இருத்தல் வேண்டும். எங்களுக்கிடையில் அன்று இருந்தது இரு பொதுக் கூறுகள். ஒன்று – நாங்கள் இருவரும் நன்கு பரிச்சயமானவர்கள். அந்த காலையல்ல நாங்கள் முதலில் சந்தித்துக் கொள்வதோ அல்லது மற்றவரை அறிந்து கொள்வதோ. இரண்டு – பேசுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையை நாங்கள் முன்னரே வாசித்திருந்தோம். விவாதத்தின் தளம் குறித்து பேசுபவர் அனைவரும் (ஒரு வாக்கியம் எதிர்வினை ஆற்றுபவர் கூட) சுயமாக அறிந்திருக்க வேண்டும்.

இரண்டாவதாக, விவாதத் தளத்தை குறித்து அனைவருக்கும் தோராயமாக சம அளவில் உள்ளார்ந்த ஆர்வம் இருக்க வேண்டும். (தீவிரமற்ற சமமான ஈடுபாடு தான் வெற்று அரட்டைகளை மிக ஆர்வமுடையதாக்குகிறதோ எனத் தோன்றுகிறது) . வெறும் கோட்பாடு சார்ந்த சார்பு நிலை நலம் பயக்கும் விவாதத் தளத்தை உருவாக்கும் என்ற கூற்றின் மேல் எனக்கு ஐயமுண்டு. யதார்த்த வாழ்வில் கேள்விகளை உருவாக்கி, நம்மை சலனப்படுத்திய விஷயங்கள் விவாதமாக வருகையில், அங்கே ‘விளங்கிக் கொள்ளல்’ என்ற தேவை ‘என் நிலைப்பாட்டை வலியுறுத்தல்’ என்ற தேவையை மீறி நிற்கிறது. அதன் முக்கிய பயன், ஒருவர் மற்றொருவரின் வாதத்தை செவிமடுத்துக் கேட்டுக் கொள்கிறார். இங்கு ‘கேட்டல்’ என்பது வெறுமே பேசுவதற்கு கொடுக்கப்படும் அவகாசம் என்பதற்கு மேலாக, மற்றவர் பேசுகையில் நம் மனதில் கோட்டைகளை எழுப்பி, அகழிகளை நிரப்பி அவருடைய கருத்துக்கள் உள்ளே நுழையும் முன்னரே கொல்லாமல் விடுவது என்ற பொருளில் எடுத்துக் கொள்ளலாம்.

மூன்றாவதாக, ஒரு விவாதத்தின் போக்கு கடைசிவரை திசைத் திரும்பாமல் இருத்தல் வேண்டும். லேசர் ஒளியைப் போன்ற கூர்மையை கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் தரையில் சிந்திய பாதரசம் போல் சிதறிவிடக் கூடாது. மட்டுறுத்தல் என்பதன் தேவையை அங்கு உணர முடிகிறது. நாங்கள் இருவர் மட்டுமே இருந்ததாலோ என்னவோ விவாதம் வெகுவாக திசை திரும்பவில்லை. ஆனால் பங்கு கொள்பவர்களின் எண்ணிக்கை உயருகையில் நிச்சயமாக ‘விவாத அதிகாரியின்’ அவசியம் வருகிறது. யோசிக்கையில் மட்டுறுத்தல் என்பது இரு பகுதிகளைக் கொண்டது. ஒன்று – விவாதத்தின் நகர்வு அதற்கு மறைமுகமாகக் கூட தொடர்பில்லாத விஷயங்களால் திசை மாறாமல் கண்காணித்தல் ( தனி மனித விமர்சனம், தேவையற்ற உதாரணங்கள், மட்டு மீறிய உணர்ச்சி இன்ன பிற). இரண்டு – இது விவாதத்தின் நெடுக வர வேண்டிய ஒன்று. பொதுவாக, ஒரு விவாத தலைப்பிற்குள் பல சிறு தலைப்புகள் பகிரப்படும். ஒரு பெரும் போரின் உள்ளே வெவ்வேறு படைகளுக்கிடையில், வெவ்வேறு இடங்களில் நடக்கும் சிறு சண்டைகள் போல. அந்த போரின் முடிவு என்பது சிறு பூசல்களின் வெற்றி தோல்வியின் கூட்டலே. மட்டுறுத்துபவர் இந்த சிறிய தலைப்புகளை முடித்து வைக்க வேண்டும். உதிரி நூல்களாக விவாதங்கள் ஊசலாடிக் கொண்டிருக்கக் கூடாது. குறைந்தபட்சம் முடிக்க முடியாத சிறு திரிகளை விவாதப் போக்கில் உருவான அடுத்த திரியுடன் இணைக்க செய்யலாம். காரணம், சிறு வாதங்களுக்காக சொல்லப்பட்ட கருத்துக்களும், எதிர்கருத்துக்களும், மனதில் உருவான உணர்வுகளும் முடிக்கப் படாமல் இருந்தால் அதுவும் ஒரு விதமான திசை திருப்பலே. நம்மை அறியாமலேயே விவாதத்தின் அடுத்த கட்டங்களில் அவை மனதிற்குள் பாரமாகி விடுகின்றன.

இறுதியாக பங்குபெறுபவர்கள் செய்ய வேண்டியது – ஒருவர் தன் கருத்தை கூறி முடிக்கும் வரை காத்திருந்து, பிறகு தனது ஆதரவையோ, எதிர்ப்பையோ, மாறுபட்ட கண்ணோட்டத்தையோ தெரிவித்தல் வேண்டும். ‘நீங்க சொல்றத ஒத்துக்குறேன்’ என்பதும் ‘அதெப்படீங்க நீங்க சொல்றது?’ என்பதும் விவாதத்தின் தரத்தை ஒரு போலவே தாழ்த்தி விடுகிறது என எனக்குத் தோன்றுகிறது. எங்களுடைய விவாதத்தில் எவரும் தன்னுடைய தரப்பை ஒவ்வொரு முறையும் மிக அதிக நேரம் எடுத்துக் கொண்டு பேசவில்லை. தன் கருத்துக்களை அதிக நேரம் எடுத்து விலாவாரியாக விளக்குவதால் ஏற்படும் தாக்கம் பற்றி என்னால் கணிக்க முடியவில்லை.

நான் அன்று காலைப் பொழுதில் பேசியதை அசைப் போடுகையில் ஒன்று புலப்பட்டது. என் தரப்பை முன்வைப்பதற்கும், நண்பரின் வாதங்களுக்கு எதிர்வினையாற்றுவதற்கும் உபயோகப்படுத்திய உதாரணங்கள், அந்த கணத்தில் உருக்கொண்டவை. அவை வேர் கொண்டிருந்த பின்புலத் தகவல்களை இந்த விவாதத்தின் கண்ணோட்டத்தில் முதலில் வாசிக்கவில்லை. எங்களுடைய அறிதலின் பரப்பு விரிந்தால் அவ்விவாதம் மேலும் செறிவாகக் கூடிய சாத்தியம் உள்ளது என்பது தெளிவாகிறது. மேலும், அந்த விவாதத்தையோ அல்லது அதன் சாரமான கேள்வியை முன்வைத்தோ தகவலகளை தெரிந்து கொண்டு பேசினால் இன்னும் பல திறப்புகளை அடைய முடியும் எனத் தோன்றுகிறது. (குறைந்தபட்சம் அந்தக் கட்டுரையின் பிரதி கையில் இருந்திருந்தால் கூட போதுமானது). ஒரு விவாதம் என்றுமே முடிவடைவதில்லை. விவாதிப்பவர் நகர்ந்து விட்டாலும் பரஸ்பரம் மனதிற்குள் கொளுத்தப்பட்ட திரி மேலதிக தகவல்களையும், அனுபவங்களையும், கால மாற்றங்களையும் பற்றிக் கொண்டு சதா மனதிற்குள் எரிந்து கொண்டே தான் இருக்கும்.

No comments: