Friday, October 12, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 4

வார்ப்ஸ்விட், ப்ரீமென் நகரின் அருகில்,
ஜூலை 16, 1903

சுமார், பத்து நாட்களுக்கு முன் பாரீஸிலிருந்து, தளர்ச்சியும் உடல் நலக்குறைவுடனும், கிளம்பி இந்த அற்புதமான வட சமவெளிப் பகுதிக்கு வந்தேன். இந்த பகுதியின் விசாலமும், அமைதியும், வானமும் என்னை மறுபடியும் சுகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நீண்ட மழை காலத்தின்  நடுவினில் வந்து சேர்ந்தேன்; அமைதியின்றி ஓலமிட்டுக் கொண்டிருந்த நிலவெளி இன்று தான் முதல் முறையாக அடங்கியது. பிரகாசமான இக்கணத்தில் என் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன், ஐயா.

என் அன்பிற்குரிய திரு. கப்பஸ்: உங்கள் கடிதமொன்று வெகு காலமாக பதிலளிக்கப்படாமல் என்னிடம் உள்ளது; நான் அதை மறந்து விட்டேன் என்பதனால் அல்ல. மாறாக பல கடிதங்களின் மத்தியில் அதைக் காணும் போதெல்லாம் மறுபடியும் வாசிக்க வைக்கும் கடிதம் அது. அக்கடிதத்தில் நீங்கள் எனக்கு மிக அருகில் இருப்பதைப் போலவே உணர்கிறேன்.  அது நீங்கள் மே மாதம் இரண்டாம் நாள் அனுப்பிய கடிதம்; நிச்சயமாக உங்களுக்கு அக்கடிதம் நினைவில் இருக்கும் என நம்புகிறேன். இத்தருணத்தில், தொலைதூரத்தில் உள்ள இவ்விடத்தின் அமைதியில் அக்கடிதத்தை வாசிக்கையில், வாழ்க்கையை நோக்கிய உங்களுடைய இனிமையான பதட்டம் என் மனதை உருக்குகிறது – பாரீஸில் இருந்ததை விட மேலாகவே, ஏனென்றால் அங்கு அளவிற்கு அதிகமான கூச்சலால், சகலமும் எதிரொலித்து தேய்ந்து மாறிப் போய்விடுகிறது. இங்கே, கடல் காற்று அசைந்து செல்லும் மிகப்பெரிய நிலவெளியால் சூழப்பட்ட இடத்தில், எனக்கு தோன்றுவது என்னவென்றால்: ஆழங்களில் தமக்கென ஒரு வாழ்க்கையை கொண்டிருக்கும் உங்களுடைய கேள்விகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு பதிலளிக்கக் கூடியவர் எங்கேயும் இல்லை. நினைத்ததை தெளிவாக உரைக்கும் திறமை கொண்டவர் கூட உங்களுக்கு உதவி செய்ய இயலாது, ஏனென்றால் அவ்வார்த்தைகள் சுட்டுவது சொல்லிவிட முடியாத,  நுண்மையான ஒன்றை பற்றியே. இருந்தாலும் கூட, இந்த தருணத்தில் என் கண்களின் முன்னால் உள்ள காட்சியைப் போன்ற விஷயங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை வைத்தால், உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்காமலேயே இருந்து விடாது என நான் எண்ணுகிறேன். இயற்கையின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தால், அதில் யாரும் கவனிக்காமல் விடும் சிறு விஷயங்கள் திடீரென்று அளவிட முடியாத பிரம்மாண்டத்தை அடைந்து விடும்; எளியவைகளின் மீது நீங்கள் அன்பு கொள்வீர்கள் என்றால்; அந்த அன்பை சேவகம் செய்பவரைப் போல, ஒரு ஏழையின் நம்பிக்கையை அடைவதற்கு என்பதைப் போல; மிகவும் அடக்கத்துடன் பிரயோகிப்பீர்கள் என்றால்; கூடுதல் ஒத்திசைவுடனும், சமரசத்தோடும் சகல காரியங்களும் உங்களுக்கு எளிதாகிவிடும்; உங்களுடைய விழிப்பு நிலையில் அப்படி தோன்றாவிட்டாலும், ஆழ் மனதின் அறிவில் தெரிந்துவிடும். 


நீங்கள் மிகவும் இளையவர், எல்லா வகையான ஆரம்பங்களுக்கும் முன்னால் நின்று கொண்டிருப்பவர்; உங்களிடம் என்னால் இயன்றவரை வேண்டிக் கொள்வது இது தான் – இங்கள் இதயத்தில் தீர்க்கப் படாதவைகளுடன் பொறுமையோடு இருங்கள் மற்றும் அக்கேள்விகளை பூட்டிய அறைகளைப் போலவோ அல்லது வேற்று மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களைப் போலவோ நேசிக்க முயற்சி செய்யுங்கள். பதில்களை தேடாதீர்கள், உங்களுக்கு அவை கொடுக்கப்பட மாட்டாது ஏனென்றால் உங்களால் அவற்றை வாழ்ந்து அறிய முடியாது. எல்லாவற்றையும் வாழ்ந்து உணர வேண்டும் என்பதே முக்கியம். இப்போது உங்கள் கேள்விகளை கொண்டு வாழுங்கள். எதிர்காலத்தில் ஒரு நாள், நீங்கள் அறியாமலேயே படிப்படியாக வாழ்ந்து உங்கள் விடையை அடையலாம். நீங்கள் படைத்தலுக்கும், உருவாக்குதலுக்கும் உரிய உள்ளாற்றலை , ஆசீர்வதிக்கப்பட்ட, தூய வாழ்க்கை முறையாக கொண்டிருக்கலாம். உங்களை அதற்கு பழக்கிக் கொள்ளுங்கள் – ஆனால் நேர்கொள்வது அத்தனையையும் எடுத்துக் கொள்ளுங்கள்; பெரும் நம்பிக்கையோடு,  உங்கள் அகத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக,  சுயவிருப்பத்தின் மூலம் உங்களிடம் அவை வரும் வரை, எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளுங்கள்; எதன் மீதும் வெறுப்படையாதீர்கள். ஆமாம், காமம் கடினமானது. ஆனால் நம் பொறுப்பிலாக்கப்பட்டுள்ள எல்லா கடமைகளும் கடினமானவையே; அநேகமாக முக்கியம் வாய்ந்த விஷயங்கள் எல்லாமே கடினமானது தான்; எல்லா விஷயங்களும் முக்கியமானது. இதை உணர்ந்து கொண்டு, உங்களுடைய இயல்பையும், திறனையும் கொண்டு, உங்களுடைய அனுபவங்களையும், பால்யபருவத்தையும், அதன் உறுதியையும் வைத்து, காமத்தின் பால் உங்களுக்கான தனிப்பட்ட உறவை (பாரம்பரியமும், மரபும் உருவாக்கும் தாக்கம் இல்லாமல்) உருவாக்கிக் கொண்டால், அதில் உங்களை தொலைத்து விடுவீர்களோ என்ற அச்சமும், உங்களுடைய அரிதான உடைமைகளை இழக்க நேரிடுமோ என்ற பதட்டமும் கொள்ளத் தேவையில்லை.

உடலின்பம் என்பது புலனின்பமே, ஒன்றை காண்பதற்கும் அல்லது கனிந்த பழம் நாக்கினில் உருவாக்கும் உணர்வுக்கும் அதற்கும் வேறுபாடு கிடையாது. அது நமக்கு அளிக்கப்பட்ட ஒரு சிறந்த, முடிவற்ற அறிதலாகும். இவ்வுலகைப் பற்றிய முழுமையான, ஒளிரும் அறிவாகும். அதை நாம் ஏற்றுக் கொள்வது தவறல்ல; தவறு எங்கேயென்றால், அவ்வறிவை மனிதர்கள் விரயப்படுத்தி, தளர்ந்து போகும் தருணங்களில் அதை கிளர்ச்சியூட்டுவதற்காகவும் தம்மையே திசை திருப்புவதற்காகவும் உபயோகப்படுத்துகையில் தான். மனிதர்கள் உண்பதைக் கூட வேறு விஷயமாக மாற்றி விட்டார்கள்: தேவை ஒரு பக்கமும், மிகுதி மறுபக்கமுமாக; இந்த தேவையை குறித்த எண்ணத்தின் தெளிவை கலங்கலாக்கி விட்டார்கள்; அதைப் போலவே வாழ்க்கை தன்னையே புதிப்பித்துக் கொள்ளும் எல்லா ஆழமான, எளிய தேவைகளையும் கலங்கலாக்கி விட்டார்கள். ஆனால் தனிமனிதன் அத்தேவைகளை தெளிவுபடுத்திக் கொண்டு அதற்கேற்ப வாழ முடியும் (யாரையும் சார்ந்திருக்காத, தனி மனிதன் மட்டுமே).  சகல மிருகங்களிலும், தாவரங்களிலும் காணும் அழகானது, நிலைத்திருக்கும்  அன்பும், ஏக்கமும் தான் என்பதை நினைவில் கொள்வான். தாவரங்களும், மிருகங்களும் பொறுமையுடனும், சம்மதத்துடனும் ஒன்று சேர்ந்து, இனவிருத்தி அடைந்து வளர்வது உடலின்பத்தினாலோ, உடல்வலி கொண்டோ அல்லாமல் அதைவிட உயர்ந்த – சுகத்தையும், வலியையும் விட சிறந்த, விருப்பாற்றலையும், எதிர்த்து தாங்கும் சக்தியையும் விட வல்லமை கொண்ட -  ஒரு தேவையை பூர்த்தி செய்வதற்கே என்பதைக் காண்பான். சிறு விஷயங்களில் கூட நிரம்பியிருக்கும் இந்த மர்மத்தை, மனிதர்கள் பணிவுடன் ஏற்றுக் கொண்டு, இன்னும் சிரத்தையுடன் தாங்கி, அனுபவித்து, அதன் பாரத்தை உணர்ந்தால் சிறப்பாக இருக்கும். அத்தேவையின் இன்னொரு முகமான, தங்களால் உருவாக்கவல்ல பயனைக் குறித்து மரியாதைக் கொண்டால், நன்றாக இருக்கும். மனிதர்களினால் உண்டாகும் பயன் உடல் கொண்டோ மனம் கொண்டோ ஏற்படலாம், ஏனென்றால் அவை இரண்டும் ஒரே தேவையின் இரு வேறு வெளிப்பாடுகளே. மனதில் உருவாக்கப்படும் படைப்பும் உடல் வழியே தான் ஆரம்பமாகிறது. அதுவும் உடல் உணரும் இன்பத்தின் இயல்பை கொண்டது ஆனால் அதைவிட மிருதுவானதும், அதிக இன்பமுடையதும், பலமுறை திரும்ப உணரக்கூடியதும் ஆகும்.

படைப்பவனாகவும், வடிவம் கொடுப்பவனாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் ஈர்ப்பு – அது புறவடிவில் இவ்வுலகத்தில் தொடர்ந்து நடந்தேறுவதாலும், எல்லா விலங்குகளும், பொருட்களும் அதை ஆயிரம் மடங்கு நம்மிடம் ஒப்புதல் அளிப்பதாலும் உருவானது. அந்த இன்பம் சந்ததிகள் வழியாக கோடிக்கணக்கான உயிர்கள் கருவாகி, உயிர்பெற்ற நினைவுகளை கொண்டிருப்பதால் தான் விவரிக்கமுடியாத அளவிற்கு நாம் அழகுடனும், வளமுடனும் அவற்றை உணர்கிறோம். ஒரு படைப்பூக்கம் கொண்ட எண்ணம் மறக்கப்பட்ட ஆயிரம் காதல் இரவுகளை உயிர்ப்பித்து அவற்றை இன்னும் மேன்மைபடுத்தக் கூடியது. இரவு பொழுதுகளில் ஒன்று கூடி, பிணைந்து இன்பத்தில் திளைப்பவர்கள், எதிர்கால கவிஞர்களின் வார்த்தைகளற்ற பரவசத்தை உரைக்கும் பாடல்களுக்கு தித்திப்பையும், ஆழத்தையும், வலிமையையும் சேகரிக்கும் செயலை புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதன் வழியே அவர்கள் எதிர்காலத்தை அழைக்கிறார்கள். அவ்வாறு இல்லாமல் வெறும் உடல்களை மட்டும் தழுவிக் கொண்டார்கள் என்றாலும் கூட, எதிர்காலம் வந்தே தீரும், ஒரு புதிய மனிதன் உருவாகிறான், இங்கு நடந்த சிறு விபத்தின் வழியே ஒரு புது விதி விழித்தெழுகிறது, அதன் வழியே விதை ஒன்று தன்னை வரவேற்கும் முட்டை ஒன்றை அடைகிறது. வெளிப்பரப்புகளை கண்டு குழம்பி விடாதீர்கள்; ஆழ் நிலைகளில் எல்லாம் ஒரு விதியாக மாறிவிடுகிறது. இந்த பிரபஞ்ச மர்மத்தை பொய்யாகவும், தவறாகவும் வாழ்பவர்கள் (நிறைய மனிதர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள்) அதை இழக்கிறார்கள். ஆனால் திறக்கப்படாத கடிதத்தைப் போல அதை எதிர்காலத்திற்கு அனுப்பி விடுகிறார்கள். 

ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்க்கையின் சிக்கல்களையும், பெயர்களையும் கண்டு குழம்பி விடாதீர்கள். அவற்றிற்கு எல்லாம் மேலே தாய்மையுணர்வு, பகிர்ந்து கொள்வதற்கான ஏக்கமாக உருமாறி இருக்கலாம். தன்னையே முன்னுணர்ந்து அதற்காக தயார்படுத்திக் கொண்டு, பதட்டத்துடனும், ஏக்கத்துடனும் காத்திருக்கும் தாய்மையுணர்வே ஒரு பெண்ணின் (நீங்கள் அழகாக குறிப்பிட்டதைப் போல – “இன்னும் எதையும் அடையாத”) அழகு. தாயின் அழகு அவள் காட்டும் தாய்மையுணர்வு; வயதான முதிர்ந்தவளின் அழகு அதன் நினைவுகள். எனக்கு தோன்றுவது; ஆணின் உள்ளும் உடலாலும், மனத்தாலும் தாய்மையுணர்வு உண்டு. அவனுள்ளே உள்ள ஆழத்தின் முழுமையிலிருந்து உருவாக்கும் பொழுது ; அவன் வழியே உருவாகும் உயிர் கூட அவன் பிரசவிப்பதைப் போன்றது தான். உலகம் புரிந்து வைத்திருப்பதைக் காட்டிலும் இரு பாலரும் ஒத்த இயல்புடையவர்கள் என நான் நினைக்கிறேன். இவ்வுலகின் புதுப்பிறப்பு நிகழ்வதற்கு ஆணும், பெண்ணும் தம்முள் உள்ள பிழையான உணர்வுகளை களைந்து, ஒருவரையொருவர் எதிர்பதமாக நாடாமல், சகோதரத்துவத்துடன், நட்புணர்ச்சியுடன் சகமனிதர்களாக இணைந்து- தம்மீது ஏற்றப்பட்டிருக்கும் காமம் என்ற பாரத்தை பொறுமையுடனும், முனைப்புடனும் தாங்க வேண்டும்.

என்றோ ஒருநாள் பல மனிதர்களுக்கு சாத்தியப்படக் கூடியதை, தனி மனிதன் தன்னை தயார்படுத்திக் கொண்டு, பெரிய தவறுகளை நிகழ்த்தாமல்,  இன்றே அடைந்து விடலாம். ஆதலால், உங்கள் தனிமையை நேசித்து, அது தரும் வலியுடன் பாட முயற்சி செய்யுங்கள். எழுதுங்கள், அது அருகிலிருப்பவரையும் தூரத்தில் வைத்து விடும். உங்களுக்கு அருகிலிருப்பதெல்லாம் வெகு தொலைவில் சென்றுவிட்டது என்றால் உங்கள் மனப்பரப்பின் விசாலம் நட்சத்திரங்களுக்கு இடையில் மிகவும் பெரிதாக ஆகிவிட்டது எனலாம். உங்கள் வளர்ச்சியை கண்டு சந்தோஷம் அடையுங்கள்; அதில் மற்ற எவரையும் கூட அழைத்து செல்ல இயலாது, அதனால் பின்தங்கியவர்களின் மீது கருணையோடு இருங்கள்; அவர்களின் முன் அமைதியாகவும், நம்பிக்கையுடனும் நடந்து கொள்ளுங்கள்; அவர்களால் புரிந்து கொள்ளவே முடியாத உங்களுடைய ஐயங்களையும், நம்பிக்கைகளையும், ஆனந்தத்தையும் சொல்லி அவர்களை பயமுறுத்தி, அவதிக்குள்ளாக்காதீர்கள். உங்களுக்கிடையே பொதுவான ஒன்றை கண்டு கொள்ளுங்கள்; அவர்களைக் காணும் பொழுது அவர்களுடைய பார்வையில் இவ்வாழ்க்கையின் மேல் அன்பு கொள்ளுங்கள். வயது முதிர்ந்தவர்களிடம் கூடதலாக விட்டுக் கொடுங்கள் ஏனென்றால் நீங்கள் விரும்பும் தனிமையை கண்டு அவர்கள் அஞ்சுவார்கள். முடிந்தவரை பெற்றவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படும் உறவுப் பிரச்சனைகளுக்கான காரணிகளை தவிர்த்து விடுங்கள். அது குழந்தைகளின் ஆற்றலையும், பெரியவர்களின் அன்பையும் வீணடித்து விடுகிறது. அவர்களிடம் அறிவுரை கேட்காதீர்கள்; அவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள் என்றும் எதிர்ப்பார்க்காதீர்கள். ஆனால் அவர்களுக்குளே உங்களுக்காக பரம்பரை சொத்தைப் போல சேகரித்து வைக்கப்பட்டுள்ள அன்பின் மீது நம்பிக்கை வைத்திருங்கள். அந்த அன்பில் உள்ள வல்லமையும், ஆசீர்வாதத்தையும் கொண்டு அதனுள்ளேயே வேண்டிய தூரம் வரை பயணிக்க இயலும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களை முற்றிலும் சுதந்திர மனிதனாக மாற்றப் போகும் தொழில் ஒன்றில் நீங்கள் சேரப் போவது குறித்து மகிழ்ச்சி. இந்த வேலை உங்களுடைய அகவாழ்க்கையை முடக்குகிறதா என பொறுமையோடு கண்டறியவும். என்னைப் பொறுத்தவரை உங்களுடைய தொழில் கடினமானதும், உழைப்பை அதிகம் கோரக்கூடியதும் ஆகும். மிக அதிகமான மரபொழுங்குகளை கடைபிடிக்க வேண்டி வருவதால் அந்த செயல்களைக் குறித்த தனிப்பட்ட உள்ளார்ந்த பார்வைகளை செலுத்த இயலாது. ஆனால் இத்தரப்பட்ட பரிச்சயமற்ற சூழ்நிலைகளிலும் கூட உங்களுடைய தனிமை ஒரு பக்கபலமாக, உறைவிடமாக, சரியான பாதையை காட்டுவதாக இருக்கும் என நினைக்கிறேன்.

என் நல்வாழ்த்துக்கள் உங்களுடன் எப்போதும் இருக்கும், அதைப் போலவே என் நம்பிக்கைகளும் உங்களுடன் இருக்கும்.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.

No comments: