Friday, October 5, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 3

வியரெஜோ, இத்தாலி
ஏப்ரல் 23, 1903

ஈஸ்டர் திருநாளுக்காக அனுப்பிய கடிதம் மூலம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தீர்கள். ஏனென்றால், அக்கடிதம் உங்களை பற்றிய நல்ல செய்திகளை கூறியது மற்றும் ஜேகப்ஸனின் உன்னதமான கலையை பற்றி நீங்கள் கூறிய விதம், உங்கள் வாழ்க்கையையும் அதன் கேள்விகளையும் இந்த செல்வத்தை நோக்கி நான் தவறாக வழிகாட்டவில்லை என உணர்த்தியது.

இனி ‘நீல்ஸ் லைன்’நாவல் அலங்காரமும், ஆழமும் நிறைந்த ஒரு புத்தகத்தை உங்களுக்கு திறந்து கொடுக்கும். ஒருவர் அதை மறுபடியும் வாசிக்கையில், மேலும் அதில் - வாழ்க்கையின் நுட்பமான வாசனைகளில் தொடங்கி அதன் மிகப் பெரிய கனிகள் வரை - அனைத்தும் அடங்கியிருப்பது போல தோன்றும். அந்த புத்தகத்தில் புரிந்து கொள்ள முடியாதது என்றோ, வாழப்படாதது என்றோ, நினைவுகளின் ஊசலாட்டத்தின் எதிரொலியில் அறிந்திராதது என்றோ எதுவும் இல்லை. அதில் எந்த அனுபவமும் முக்கியமற்றது அல்ல; விதியின் படி நடப்பது போல சிறு சம்பவங்களும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும், விதியே கூட ஒரு அகண்ட விந்தையான துகில் – அதன் ஒவ்வொரு இழையும் முடிவிலா மென்மையை கொண்ட கைகளால் எடுக்கப்பட்டு, இன்னொரு இழையின் அருகாமையில், இன்னும் நூறு இழைகளால் தாங்கப்பட்டு, வைக்கப்பட்டுள்ளது – போலிருக்கும். முதல் முறை வாசிக்கையில் நீங்கள் மிகுந்த சந்தோஷத்தை உணர்வீர்கள் மேலும் அதன் எண்ணிலடங்கா ஆச்சரியங்களை கனவிலிருப்பது போல் கடந்து செல்வீர்கள். பின்னர் இந்த புத்தகங்களை மறுபடியும் பலமுறை இதே திகைப்புடன் வாசிக்கையில், அவை தம்முடைய அற்புதமான ஆற்றல்களையும், நம்மை கவர்ந்திழுக்கும் தன்மையையும், முதல் முறை  வாசிப்பதை போலவே கொஞ்சமும் இழந்துவிடுவதில்லை என்றே கூறுவேன்.


அவைகளை மேலும் மேலும் ஒருவர் அனுபவித்து, ஏதோ ஒரு விதத்தில் அவர்களின் வாழ்கை நோக்கு இன்னும் மேன்மையும் எளிமையும் பெற்று, வாழ்வின் மீதான நம்பிக்கையில் ஆழம் கூடி, அவர்களுடைய வாழ்க்கை இன்னும் மகிழ்ச்சியாகவும், சிறப்பானதாகவும் ஆனதற்காக, மேலும் மேலும் நன்றியுணர்வு கொள்வார்கள்.

அதற்கு பின்னர் நீங்கள் ‘மேரி க்ருப்பேவுடைய விதியும் ஏக்கங்களையும்’ பற்றிய அற்புதமான புத்தகத்தை வாசிக்க வேண்டும் மற்றும் ஜேகப்சனின் கடிதங்கள், நாட்குறிப்புகள் இறுதியாக முடிவிலா ஓசையுடன் நீடித்திருக்கும் ( சுமாரான மொழிபெயர்ப்பாக இருந்தாலும் கூட) அவருடைய பாடல்களை வாசிக்க வேண்டும். (இந்த காரணத்தாலேயே உங்களுக்கு என் அறிவுரை, இயன்ற போது ஜேகப்சனின் முழு தொகுப்பையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், என்பதுதான். லீப்ஸிக் இல் உள்ள யூஜென் டைடெரிக்ஸ் பதிப்பகத்தில் வந்துள்ள தொகை ஏடுகளில் அவை முழுவதும் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்கிறது. ஒரு தொகுப்பின் விலை ஐந்து அல்லது ஆறு மார்க்ஸ் இருக்கலாம் என எண்ணுகிறேன்).

அவருடைய, “இங்கு ரோஜாக்கள் இருந்திருக்க வேண்டும்…”(நிகரில்லா நயமும், வடிவமும் கொண்ட ஆக்கம்) என்ற கதைக்கு முன்னுரை எழுதியவரைப்  பற்றிய உங்கள் கருத்து மறுக்க முடியாத உண்மை. ஆனால் உங்களிடம் ஒன்றை இப்பொழுதே வேண்டிக் கொள்கிறேன். இலக்கிய விமர்சனத்தை முடிந்த வரை குறைவாகவே வாசியுங்கள் – அவை பொருளற்று, இறுகி, கல்லாகி முடிவில் உயிரற்று போன சார்புடைய கருத்துகளோ அல்லது இன்று ஒரு கருத்தும் நாளை அதன் எதிர்மறை கருத்தும் ஓங்கி நிற்கும் வெறும் வார்த்தை விளையாட்டுகளோ தான். கலைப் படைப்புகள் முடிவில்லா தனிமையை கொண்டவை; அவற்றை அணுகுவதற்கு விமர்சனத்தை போல பயனற்ற வழி வேறெதும் இல்லை. அன்பு மட்டுமே அவற்றை தீண்டி, தாங்கி, பாரபட்சமற்று இருக்க முடியும். விவாதங்களும், கலந்தாலோசனைகளும் அல்லது அவற்றை போன்றவைகளை விட, உங்கள் மீதும், உங்களுடைய உணர்வுகள் மீதும் நம்பிக்கை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பார்வையில் தவறு இருந்தால், உங்கள் அக வாழ்வின் இயல்பான வளர்ச்சி உங்களை வேறு உள்ளார்ந்த பார்வைகளுக்கு இட்டுச் செல்லும். உங்கள் முடிவுகளை அவற்றிற்கே உரிய தனிமையில், தடங்கலில்லாமல் வளர்ச்சியடைய அனுமதியுங்கள். அவைகளும் மற்ற எல்லா வளர்ச்சிகளைப் போலவே ஆழங்களிலிருந்து வெளி வர வேண்டும்; வற்புறுத்தலோ, துரிதப்படுத்துதலோ இல்லாமல். எல்லா விஷயங்களுமே முதலில் கருக்கொண்டு பிறகு பிறந்து வருகிறது. ஒவ்வொரு உணர்வின் கருவையும் முழுமையாக்கிக் கொள்ளும் – இருளில், பிரக்ஞயற்ற, சொல்லயியலா நிலையில், நம் புரிதல்கள் சென்று அடைய முடியா தொலைவில் பொறுமையுடனும், மிகுந்த தன்னடக்கத்துடனும் –அந்த கணத்திற்காக காத்திருப்பதே, ஒரு கலைஞனாக வாழ்வதற்கான பொருள் ஆகும்: படைத்தலுக்கு நிகரான புரிதலும் கொண்டவனாக.

இதை கடக்கும் நேரத்தை வைத்து கணக்கிட முடியாது, ஒரு வருடம் என்பது ஒரு பொருட்டில்லை, பத்து வருட காலம் என்பது ஒன்றுமில்லை. கலைஞனாக இருப்பது: எண்ணிக்கையிடுவதோ, கணிப்பதோ அல்ல, ஆனால் மரத்தை போல் முதிர்வுறுவதாகும். அது தன் மரச்சாறை வற்புறுத்துவதில்லை, மேலும் பிற்பாடு வேனிற்காலம் வராமல் போய்விடுமோ என அஞ்சாமல், வசந்தகால புயலில் நம்பிக்கையுடன் நிற்கிறது. வேனிற்காலம் வருகிறது. ஆனால் அது, தம்முன் முடிவற்ற காலம் விரிந்து கிடப்பதைப் போல மௌனத்தோடும் விசாலத்தோடும், காத்திருப்பவர்களை மட்டுமே வந்தடைகிறது. ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் அதையே கற்றுக் கொள்கிறேன், வலியுடன் அதை கற்றுக் கொள்வதற்காக நன்றியோடிருக்கிறேன்: பொறுமையில் தான் சகலமும் உள்ளது.

ரிச்சர்ட்டெஹ்மல்: அவருடைய புத்தகங்களில் இருந்து கிடைத்த அனுபவத்தை வைத்து (அந்த மனிதனிடமும் தனிப்பட்ட முறையில் சிறிது காலம் பழக கிடைத்த அனுபவத்திலும்) சொல்வது என்னவென்றால், எப்பொழுதெல்லாம் அவருடைய மிக அழகாக எழுதப்பட்ட பக்கத்தை வாசிக்கிறேனோ, அதற்கு அடுத்த பக்கத்திலேயே மொத்த உணர்வையும் அழித்து அந்த மேன்மையை தகுதியற்றதாக மாற்றிவிடுவாரோ என அஞ்சுவேன். அவருடைய இயல்பை நீங்கள் மிக சரியான சொற்றொடர் கொண்டு குறிப்பிட்டீர்கள்; “விரக தாபத்திலேயே வாழும், எழுதும் மனிதர்”. உண்மையில் அந்த எழுத்தாளரின் அனுபவங்களும் நம்பமுடியாத அளவிற்கு காமத்திற்கு, அதன் வலிகளுக்கும், இன்பத்திற்கும்,  அருகாமையில் உள்ளது. அவ்விரு கூறுகளும் ஏக்கத்தின் மற்றும் பேரின்பத்தின் வேறு வடிவங்களே. “விரக தாபம்”என்பதற்கு பதிலாக “காமம்”என்று ஒருவர் குறிப்பிடுவாறென்றால் – அந்த வார்த்தையின் தூய, மகத்தான பொருளில், மதம் இணைத்து வைத்த பாவம் இல்லாமல் – அவருடைய கலை மிக சிறப்பானதாகவும், முடிவற்றதாகவும் இருக்கும். அவருடைய கவித்திறமை சிறப்பானது, ஆதாரமான இயல்புணர்வைப் போல வலிமையானது. அது தனக்கேயான தணியாத தாளத்துடன் அவருள் இருந்து எரிமலையைப் போல வெடித்து வெளி வருகிறது.

ஆனால் அவருடைய ஆற்றல் எப்பொழுதும் நேரடியாகவும், பாவனையற்றும் இருப்பது போல் தோன்றவில்லை. (ஆனால் அது தான் ஒரு படைப்பாளி நேரிடும் மிகவும் கடினமான பரீட்சை: அவன் சகல நேரங்களிலும் தன்னுடைய சிறந்த பண்புகளைப் பற்றிய பிரக்ஞை யற்றவனாக இருத்தல் வேண்டும், அவற்றின் சார்பற்ற தன்மையையும், களங்கமின்மையையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால்!). இறுதியில் அவருள் இருந்து வெடித்து வெளிவந்து காமத்தை அடைகையில், அதன் தேவைக்கு குறைவான தூயத்தன்மை உடைய ஒருவனை அவரில் கண்டடைகிறது. முதிர்ந்த, அப்பழுக்கற்ற காமத்திற்கு பதிலாக, அது மனிதத்தால் உருவாகாமல், வெறும் ஆணால் உருவான உலகை காண்கிறது. அவ்வுலகில் புணர்ச்சிக்கான எத்தனிப்பும், இடியோசைகளும், அமைதியின்மையும் கொண்டு, ஆணின் முன்முடிவுகளாலும், அகங்காரத்தாலும் உருச்சிதைக்கப்பட்ட, பாரம் கொண்ட அன்பே உள்ளது. அவர் மனிதனாக இல்லாமல் வெறும் ஆணாக மட்டுமே அன்பு செலுத்துவதால், அவருடைய காம உணர்வுகளில், வன்மம் கொண்ட, கட்டற்ற, காலத்திற்குட்பட்ட, நித்தியத்தன்மையற்ற ஏதோவொறு குறுகிய தன்மை, படைப்புகளை குறுக்கி தீர்க்கமற்றதாகவும், ஐயமுடையதாகவும் மாற்றி விடுகிறது. இருந்தாலும் கூட, அதில் சிறப்பானவைகளை ஒருவர் ஆழ்ந்து வாசித்து மகிழலாம். டெஹ்மலின் எல்லையற்ற பயமும், குழப்பமும், ஒழுக்கக்கேடும் நிறைந்த உலகத்தை பற்றிக் கொண்டு, அதில் தன்னை தொலைத்து விடக் கூடாது. அவை - ஒருவரை காலத்திற்குட்பட்ட ஆசைகளை விட பல மடங்கு அலைக்கழித்து ஆனால் மகத்துவத்துவத்தை அடையும் வாய்ப்பையும், என்றைக்குமான தைரியத்தையும் அளிக்கும் - யதார்த்த விதிகளை போன்றவை அல்ல.

இறுதியாக நான் எழுதிய புத்தகங்களை நீங்கள் வாசித்து இன்புறுவதற்காக அனுப்ப மிகவும் ஆசைப் படுகிறேன். ஆனால் நான் ஒரு ஏழை மற்றும் என் புத்தகங்கள் பதிப்பிக்கப் பட்ட உடனேயே அவை என்னுடையவை அல்ல. அவற்றை எனக்காக வாங்கி , ஆசைப்பட்டபடி அதை கருணையுடன் வாசிப்பவர்களுக்கு கொடுப்பதற்கு கூட என்னால் முடிவதில்லை.

அதனால், இன்னொரு துண்டு காகிதத்தில், என் சமீபத்திய புத்தகங்களின் தலைப்புகளையும் (அதன் பதிப்பாளர்களையும்) உங்களுக்கு எழுதி அனுப்புகிறேன் (புதிதாக – மொத்தத்தில் 12 அல்லது 13 புத்தகங்கள் பதித்திருப்பேன் என எண்ணுகிறேன்). நீங்களே அதில் ஒன்றோ, இரண்டோ இயன்ற பொழுது வாங்கிக் கொள்ளுங்கள் என விட்டு விடுகிறேன்.

உங்கள் கைகளில் என் புத்தகங்கள் வந்து சேரும் என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.

No comments: