Friday, November 2, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 6

ரோம்,
டிசெம்பர் 23, 1903

என் அன்பிற்குரிய கப்பஸ்,
என்னிடமிருந்து வாழ்த்துச் செய்தி இல்லாமல் உங்களுடைய கிறுஸ்துமஸ் நாள் அமைவதில் எனக்கு விருப்பமில்லை. அதுவும் இந்த விடுமுறை தினங்களின் மத்தியில் தனிமையை கூடுதல் பாரத்துடன் நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில். ஆனால் அந்த தனிமை மிகுந்த விரிவை உடையது என்பதை நீங்கள் கண்டு கொண்டால் மகிழ்ச்சியடைவீர்கள். (நீங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டியது) இத்தனை விரிவை அடையாத தனிமை உண்டென்றால் அது என்ன; இங்கிருப்பது ஒரே ஒரு தனிமை தான், அது மிகவும் விசாலமானது, சுமப்பதற்கு மிகவும் சிரமானதும் கூட. ஏறத்தாழ அனைவருமே, தங்களுடைய வாழ்க்கையில் சில மணி நேரங்களாவது மனமுவந்து சக மனிதர்களுடன் கூடிப் பழகுவதற்கும் – அது எத்தனை அற்பமான, மதிப்பற்ற விஷயமாக இருந்தாலும் – அடுத்தவரிடம் வெளிப்படையாக சிறு வகையிலாவது ஒத்துப் போவதற்கும் விரும்புவான். ஆனால் இந்த சில மணி நேரங்கள் தான் தனிமை நம்முள்ளே பெரிதாக நிறையும் பொழுதுகளாக இருக்கலாம்; ஏனென்றால் தனிமையின் வளர்ச்சி, சிறுவர்களின் வளர்ச்சியைப் போலவும் அல்லது வசந்த காலத்தின் தொடக்கத்தைப் போலவும் மிகவும் துயரமானதாகும். ஆனால் அது உங்களை குழப்பிவிடக் கூடாது. இறுதியில், அவசியமானது என்பது இது தான்: ஏகாந்தம், மிகவும் விசாலமடைந்த ஏகாந்தம். உங்களுக்குளே பல மணி நேரங்கள் யாரையும் கண்டடையாமல் தனியாக நடத்தல் – அது தான் நீங்கள் அடைய வேண்டியது. குழந்தையாக இருந்த போது மூத்தவர்கள் உங்களைச் சுற்றி அவர்களுக்கே உரிய பெரியதும், முக்கியமானதுமாகிய விஷயங்களில் ஆழ்ந்து வலம் வந்து கொண்டிருக்கையில், அவர்கள் செய்யும் காரியங்கள் எதையும் விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்திருப்பீர்கள். இன்று நீங்கள் அடைய வேண்டியது அந்த குழந்தையின் தனிமையையே.


அவர்களுடைய செயலகள் அலங்கோலமானது, தொழில்கள் கல்லாக இறுகிப்  போய் வாழ்க்கையுடன் எவ்வகையிலும் தொடர்பற்று போனவை என்று நீங்கள் உணர்ந்து விட்டீர்கள் என்றால், அவைகளை ஒரு குழந்தையின் பார்வையில், பரிச்சயமில்லாத ஒன்றைப் பார்ப்பதைப் போல, உங்கள் ஏகாந்தத்தின் ஆழங்களிலிருந்து தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? ஒரு குழந்தையின் ‘அறிவுபூர்வமான விளங்கிக் கொள்ளாமை’ என்ற குணாதசியத்தை கொடுத்து அதற்கு பதிலாக பாதுகாப்பின்மையையும், வெறுப்பையும் எடுத்துக் கொள்ள ஏன் விழைகிறீர்கள்?  ‘விளங்கிக் கொள்ளாமை’ என்ற பண்பே ஒரு வகையில் தனிமையில் இருப்பதைப் போன்றது மற்றும் வெறுப்பும், ஏதிர்ப்பும் நீங்கள் எதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என எண்ணுகிறீர்களோ அதில் மீண்டும் ஈடுபடுவதால் உண்டாவது தானே.

சிந்தித்து பாருங்கள் ஐயா, நீங்கள் உங்களுக்குளே சுமந்து அலையும் உலகத்தை பற்றி.  அந்த சிந்தனைகளுக்கு எப்படி வேண்டுமென்றாலும் பெயரிட்டுக் கொள்ளுங்கள்: பால்யகால ஞாபகங்கள் என்றோ அல்லது எதிர்காலத்தை நோக்கிய ஏக்கம் என்றோ – உங்கள் மனதிற்குள் என்ன எழுகிறதோ அதை கருத்துடன் அவதானித்தால் போதும்; மேலும் அதை நீங்கள் கவனித்தவைகளில் எல்லாவற்றிலும் மேலானதாக உங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அகத்தின் ஆழங்களில் நடைபெறும் எல்லாமே உங்களுடைய முழு அன்பை பெறும் தகுதி உடையவையாகும்; அந்த எண்ணங்களை ஏதோ ஒரு வழியில் அடைந்து அவற்றில் செயல்படவும் மற்றும்  மற்றவர்களின் மீது நீங்கள் வைத்திருக்கும் மனப்பான்மையை அவர்களுக்கு தெளிவுபடுத்த அதிக நேரத்தையும், தைரியத்தையும் விரயம் செய்யாமலிருக்கவும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கென ஒரு மனப்போக்கு உள்ளதென சொன்னது யார்? உங்களுடைய உத்தியோகம் கடுமையானது என்றும், நீங்கள் மறுக்கும் பல காரியங்களை உள்ளடக்கியது என்றும் நான் அறிவேன். உங்களுடைய இந்த புலம்பல்களை நான் முன்னரே எதிர்பார்த்திருந்தேன். இப்பொது அது நடந்து விட்டமையால், இனி நான் உங்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு எதுவும் இல்லை. வேண்டுமென்றால், மற்ற தொழிலகளும் இத்தகைய இயல்புகளைக் கொண்டவை தான் – தனிமனிதன் மேல் கோரிக்கைகளையும், துவேஷத்தையும் வீசி – புத்தியை மந்தமாக்கும் அலுவல்களை தொடர்ந்து செய்து தன்னையே ஊமையாகவும், முசுடாகவும் மாற்றிக் கொண்டவர்களின் வெறுப்பில் ஊறிய தொழில்கள்தான். 

நீங்கள் வாழும் சூழ்நிலை மற்றவைகளை விட எவ்வகையிலும் அதிகம் மரபொழுங்குகளையும், முன்முடிவுகளையும், பிழை புரிதல்களையும் கொண்டதல்ல. அப்படி இன்றிருப்பதை விட அதிக சுதந்திரத்தை வேறு ஒரு சூழ்நிலை தருவதாக உரிமை கோரினால், நினைவில் வைத்துக் கொள்க, மெய்ம்மையில் மட்டுமே உண்மையான வாழ்க்கை உள்ளது. தன்னுள்ளே தனிமையில் உள்ள மனிதன் மட்டுமே மெய்ம்மையின் ஆழ்ந்த விதிகளுக்குள் வசிக்கிறான். அம்மனிதன் சூரிய உதயத்திற்கு முன் நின்று கொண்டோ அல்லது பரபரப்பான ஒரு மாலைப் பொழுதை பார்த்துக் கொண்டோ, அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உள்ளூர உணரும் பொழுது, தூய வாழ்க்கையின் மத்தியில் இருக்கும் பொழுதே மற்ற எல்லா சம்பவங்களும், விஷயங்களும் சடலத்திலிருந்து பிரிவது போல அவனிடமிருந்து உதிர்ந்துவிடும்.

கப்பஸ், ஒரு அதிகாரியாக நேர் கொள்ளும் அனுபவங்களை, இங்கு நிலைநாட்டப் பட்டுள்ள எந்தவொரு தொழிலிலும் உணர்ந்திருப்பீர்கள்; ஆம், வெளியில் சமூகத்துடன் எளிதான, சுதந்திரமான தொடர்புடைய தொழில் என்றாலும் கூட, முடக்கப்படும் உணர்விலிருந்து நீங்கள் தப்பியிருக்க முடியாது. எல்லா இடங்களும் இதைப் போலத்தான் உள்ளன; அதற்காக பதட்டமும், துயரமும் கொள்ள வேண்டியதில்லை; மற்றவர்களிடம் பகிர்வதற்கு ஒன்றுமில்லை என்றால் இயற்கைக்கு அருகில் இருங்கள். இயற்கையும், மிருகங்களுக்கும் இடையில் சதா ஏதோவொன்று நடை பெற்றுக் கொண்டேதான் இருக்கிறது. அதில் நீங்கள் பங்கு பெறலாம்; குழந்தைகள் இன்னும் நீங்கள் குழந்தையாக இருந்ததைப் போலத் தான் மகிழ்ச்சியுடனும், சோகத்துடனும் இருக்கிறார்கள். உங்களுடைய பால்ய பருவத்தை ஞாபகப்படுத்திக் கொண்டால், அவர்களுக்கு மத்தியில் நீங்களும் வாழலாம். பெரியவர்களுக்கு என்று எதுவுமில்லை, அவர்களுடைய கௌரவத்திற்கு மதிப்பு கிடையாது.

பால்ய காலங்களின் அமைதியிலும், எளிமையிலும் எப்போதும் கூட இருந்த இறைவன் மீது இன்று நம்பிக்கை இழந்து விட்டதால், அக்காலங்களை பற்றி நினைப்பதற்கே அச்சப்படுகிறீர்கள் என்றால்; அன்புள்ள கப்பஸ்  உண்மையிலேயே இறைவனை நீங்கள் இழந்து விட்டீர்களா என்பதே நீங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியாகும். இன்று வரை நீங்கள் இறைவனை உங்கள் உள்ளே வைத்திருக்கவில்லை என்பது தானே மேலான உண்மையாக இருக்க முடியும்? மாறாக இறைவன் எப்போது உங்களுடன் இருந்திருக்கிறான் என நினைக்கிறீர்கள்? குழந்தைப் பருவத்திலா? ஒரு குழந்தையால் இறைவனை தாங்கிக் கொள்ள இயலுமா, பெரியவர்களே மிகவும் சிரமப்பட்டு , தம்மை அழுத்தும் அவனுடைய பெரும் பாரத்தை சுமக்கையில்? உண்மையில் இறைவனை தன்னுளே குடிவைத்திருப்பவர் ஒரு சிறு கல்லைப் போல அதை தொலைத்துவிட முடியும் என எண்ணுகிறீர்களா? இறைவன் குடியிருக்கும் ஒருவரை இறைவனால் மட்டுமே தொலைக்க முடியும் என உங்களுக்கு தோன்றவில்லையா? அப்படி இல்லாமல், உங்கள் பால்யத்திலும்,  இதற்கு முன் எப்பொழுதும் இறைவன் இருந்திருக்கவே இல்லை என்று நினைத்தால், கிறுஸ்து தன் ஏக்கத்தாலும், முகமது தன் கர்வத்தாலும் ஏமாற்றப்பட்டார்கள் என நீங்கள் சந்தேகித்தால் – மற்றும் நாம் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் இந்த கணத்தில் கூட இறைவன் கிடையாது என்ற எண்ணம் உங்களை அச்சுறுத்துகிறது என்றால் – அப்படி என்றுமே இல்லாத இறைவனை தொலைந்து போன ஒன்றாக நீங்கள் தேடுவதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?

இறைவனை, நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒருவராக ஏன் நீங்கள் நினைத்து கொள்ளக் கூடாது? நாமெல்லாம் இலைகளாக இருக்கும் மரத்தின் முழு முற்றான கனியாக,  நம்மை நோக்கி முடிவிலியின் எல்லா திசைகளிலிருந்தும் சதா வந்து கொண்டிருக்கும் ஒருவராக, என்றோ ஒரு நாள் நம்மை வந்தடைவராக ஏன் உருவகித்துக் கொள்ளக் கூடாது? அவருடைய பிறப்பு இனி வரும் யுகங்களில் நிகழப் போவதாகவும், அது நடைபெறுவதற்கு முன்பான வரலாற்றின் உன்னதமான  கர்ப்ப காலங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும்,  நினைத்துக் கொள்வதற்கு எது தடையாக உள்ளது? இங்கு திரும்பத் திரும்ப நடைபெறும் எல்லாமே ஒரு தொடக்கம் என்று உணரவில்லையா?  அது அவருடைய தொடக்கம், ஏனென்றால் எல்லா தொடக்கங்களும் அதனளவில் அழகானவை. இறைவனே பூரணமானவன் என்றால், அதற்கு முன் வருவபவை எல்லாம் அதிலிருந்து சிறிதேனும் குறைபட்டவையாக தானே இருக்க முடியும்? இறுதியில் இவை அனைத்தையும் உள்ளடக்கி வருபவன் என்பதால் அவருடைய வரவு கடைசியில் தானே நிகழ முடியும்? நாம் தேடிக் கொண்டிருப்பவன் ஏற்கனவே இங்கிருக்கிறான் என்றால் நமது இருத்தலுக்குத் தான் பொருள் என்ன?

வண்டுகள் தேனைச் சேகரிப்பதைப் போல நாமும் இங்கிருப்பவைகளிலிருந்து இனிமையானதை சேகரித்து அவரை உருவாக்குவோம். முக்கியமற்ற, அற்பமானவைகளிலிருந்து (அன்பினால் உருவாக்கப்பட்டால்) நாம் தொடங்கி, உழைத்து, அதன் பிறகு கிடைக்கும் இளைப்பாறல் எல்லாவற்றையும் கொண்டு, அமைதியுடனும், ஏகாந்தத்தின் மகிழ்வுடனும் நாம் அவரை உருவாக்குவோம். அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்காமல், தனியனாக, நாம் கண்களால் வருங்காலத்தில் காண இயலாத இறைவனை உருவாக்க ஆரம்பிப்போம்; தம் வாழ்நாளில் கண் கொண்டு காணாமல் நம்மை இன்று உருவாக்கிய முன்னோர்களைப் போல. இருந்தும், பல காலங்களுக்கு முன் இறந்து போன முன்னோர்கள், நம் விதியின் பாரமாக, முனங்கும் குருதியாக, நம்முள்ளே காலத்தின் ஆழங்களில் இருந்து எழுந்து வரும் குறிப்புணர்வாக, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என்றோ ஒரு நாள் அவருக்குளே உறைந்திருப்பீர்கள் என நீங்கள் நம்பிக்கை கொள்வதை வேண்டாம் என எது தடுக்கிறது?

அன்புள்ள, திரு கப்பஸ், கிறுஸ்துமஸை இந்த பக்தியுடன் கொண்டாடுங்கள். நீங்கள் அடையும் துயரம் அவருக்கு தேவை என்றிருக்கலாம்; நிலைமாற்றத்தின் இந்த காலங்களில் தான் உங்களுக்குள்ளே உள்ள அனைத்தும் அவரை நோக்கி திரும்பியிருக்கலாம், எப்படி பிள்ளைப் பருவங்களில் இருந்ததோ அது போல. பொறுமையுடனும், வெறுப்பற்றும் இருக்கவும். குறைந்தபட்சம் நாம் செய்யக் கூடியது, அவர் நம்முள் உருவாவதை -  பூமி வசந்த காலம் வர நினைக்கையில் அது நடந்தேற சிரமப்படுத்துவதை விட அதிகமாக – கடினமாக்காமல் இருப்பதே.

மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் இருங்கள்.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.

No comments: