ஆகஸ்ட்
12, 1904.
அன்புள்ள
கப்பஸ்,
நான்
பேசும் விஷயங்கள் உங்களுக்கு எவ்வகையிலும் உதவி புரியாது என்றபோதும், உங்களுடன் இன்னும்
சிறிது நேரம் பேச விரும்புகிறேன். உங்களுக்கு உதவக் கூடிய சொற்களை கண்டெடுக்க என்னால்
முடியவில்லை. உங்களுக்கு பல துயரங்கள் உள்ளன, உங்களை விலகி சென்றுவிட்ட பெரும் துயரங்கள். சமீபத்தில் உங்களை கடந்து சென்ற
மனத்துயரம் மிகுந்த கடினமாக இருந்ததாக கூறியிருந்தீர்கள். தயவு கூர்ந்து, உங்களிடமே
கேட்டுப் பாருங்கள், இத்தகைய பெரும் சோகங்கள் கூட உங்களினூடே கடந்து போய் விட்டன அல்லவா?
உங்களுக்குள்ளே பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம்; எங்கோ, உங்கள் இருப்பின் ஆழங்களில்
சோகத்துடன் இருந்த சமயங்களில் முக்கியமான மாறுதல்களை நீங்கள் அடைந்திருக்கக்கூடும்.
சோகங்களிலே மிகவும் அபாயமானவை, பொதுவெளியில் நாம் சுமந்து செல்லும் துயரங்களே. புறத்தில்
உள்ள கூச்சலில் மூழ்கடிப்பதற்காக நாம் கொண்டு அலையும் மனத் துயரங்கள், முட்டாள்தனமாகவும்,
மேம்போக்காகவும் சிகிழ்ச்சையளிக்கப் பட்ட நோயை போன்றவையாகும்; சிறிது காலத்திற்கு பின்வாங்கிக்
கொண்டு பிறகு அதிக கொடூரத்துடன் கட்டவிழ்த்து வெளிவரும்; நமக்குளே சேகரம் ஆகி, நம்
வாழ்க்கையாகி விடும் – நாம் வாழ இயலா வாழ்க்கை, நிராகரிக்கப் பட்ட, இழக்கப்பட்ட, மரணத்தை
கொண்டு சேர்க்கும் வாழ்க்கை. நம் அறிவின் எல்லைகளுக்கு அப்பால் பார்க்க முடிந்தால்,
நம் முன்னெண்ணங்களின் வெளிக் கட்டுமானங்களைத் தாண்டி அறிய முடிந்தால், துயரங்களை, மகிழ்ச்சியான
பொழுதுகளை விட அதிக நம்பிக்கையுடன் தாங்கிக் கொண்டு இருந்திருக்கலாம். ஏனென்றால் துயரத்தின்
பொழுதுகளில் தான் நாமறியா ஒன்று நம்முள் நுழைகிறது; நமது உணர்ச்சிகள் , சங்கோஜத்துடன்
மௌனமாகின்றன, நம்முள்ளே உள்ள அத்தனையும் பின்வாங்குகின்றன, அமைதி எழுகிறது, புதியதொரு
அனுபவம், யாரும் அறிந்திராத அனுபவம், எல்லாவற்றிற்கும் நடுவில் ஒன்றுமே கூறாமல் நிற்கிறது.