Friday, August 20, 2010

இளம் கவிஞனுக்கான கடிதம் - 1

ரெய்னர் மரியா ரில்கே 1875 முதல் 1926 வாழ்ந்த ஜெர்மன் கவிஞர். அவருடைய பல நூறு படைப்புகளாகிய கவிதைகளை போல அவர் பிறருக்கு எழுதிய கடிதங்களும் சிறப்புப் பெற்றவை. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது, 1902 முதன் 1908 வரை ஃப்ரான்ஸ் கப்பஸ் என்ற 19 வயது நிரம்பிய 'வியென்னா இராணுவ கல்லூரியின்' மாணவருக்கும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவரான ரில்கே எழுதிய கடிதங்களாகும். இக்கடிதங்கள் பதட்டத்துடன் வாழ்கையை எதிர்நோக்கும் ஒரு மாணவனுக்கு ஒரு ஆசிரியருமாகிய நண்பர் கூறும் அறிவுரையை போல அமைந்துள்ளன.
1929இல், ரில்கேயின் மரணத்திற்கு பின் மூன்று வருடங்கள் கழித்து கப்பஸால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இனி வருவது அக்கடிதங்ககளின் ஸ்டீபன் மிட்செல்லின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு.

முதல் கடிதம்

பாரீஸ்,
பிப்ரவரி 17, 1903

அன்புள்ள ஐயா,
உங்கள் கடிதம் சில நாட்களுக்கு முன் வந்து சேர்ந்தது. நீங்கள் என் மேல் வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவ்வளவே என்னால் செய்ய இயலும். உங்களுடைய கவிதை வரிகளை விவாதிக்க எடுக்கப்படும் எவ்வித எத்தனிப்பும் எனக்கு அன்னியமானது. விமர்சனங்களை போல் ஒரு கலைப்படைப்பை பிக குறைவாக தொட்டுச் செல்வது வேறொன்றுமில்லை: [அவை எப்பொழுதும் இறுதியில் தவறான புரிதல்களில் போய் முடிந்து விடுகின்றன.] காரியங்கள் எளிதில் உணரக்கூடியதாகவோ அல்லது விளக்கி சொல்லிவிடக்கூடியதாகவோ இருக்கும் என நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற மற்றவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அவை அப்படி இருப்பதில்லை; பெரும்பான்மையான அனுபவங்கள் விளக்க முடியாதவை, அவை எந்த சொல்லும் நுழைந்திராத வெளியில் ஏற்படுபவை, மற்றும் மற்ற எல்லாவற்றையும் விட விளக்க முடியாதென்பது, நமது சிறியதும், துரிதமாக கடந்து போகும் வாழ்கையை தாண்டி, ஒரு வாழ்கையை தாங்கிக் கொண்டிருக்கும், புதிர் மிகுந்த இருப்புகளாகிய, கலைப் படைப்புகளேயாகும்.

Sunday, August 8, 2010

தொலைந்தது

உறங்காமல் தூங்கி
விழிக்காமல் எழுந்து
உண்ணாமல் தின்று
பேருந்தின் உபரியாய்
பயணித்து
இயந்திரமாய் உழைத்து
என
ஜன்னலை திறக்க
நான்கு மாதமாயிற்று...
அதனடியில்
முழு நிறத்துடன்
இரு இதழ்களை வைத்துவிட்டு
இயற்கையாய் மரணித்திருந்தது
என் தொட்டிச் செடி