Sunday, November 21, 2010

ஜெயமோகனின் லங்காதகனம்

எந்த செயலும் பல மனநிலைகளில் செய்ய சாத்தியப்படும். வாழ்கையில் நாம் செயல்படும் வேலைகள் பெரும்பாலும் பலமுறை தொடர்ந்து செய்யப்படுவதால் பழக்கமாகிவிடுகின்றன. பழக்கப்பட்ட விஷயங்களில் புதுமையை கண்டடைய நாம் விழைவதில்லை. அலுவலக வேலை முதல் தினசரி வாழ்கையை நடத்த செய்யும் அலுவல்கள் அனைத்தும் சில நாட்களில் ஆர்வமில்லாமல் வெறும் "கடமைக்காக" நிகழ்த்தப்படுவது இதனால்தான். இது எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும் பொதுப் போக்கு. கலை இலக்கியங்களில் செயல்படுபவர்களும் சில காலங்க்களில் நீர்த்துப் போவதற்கு இம்மனநிலையும் ஒரு காரணம். எந்த ஒரு துறையிலும் மறுக்கமுடியாத ஆளுமையை அடைந்தவர் - பரவலாக அறியப்பட்டவர் என்றிருக்க வேண்டியதில்லை - எல்லோரும் தான் செய்யும் செயலில் ஒவ்வொரு முறையும் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள முனைபவர்களாக இருப்பதை காணலாம். திரும்பத் திரும்ப செய்ய வேண்டிவரும் செயலாக இருப்பினும் அதில் மேற்கொண்டு மேன்மையை அடைய முயற்ச்சிதுக் கொண்டே இருப்பதையும், அதன் வழியே தன்னையே சுயபரிசோதனைக்குள்ளாக்கிக் கொள்வதையும் சிறிது நேரம் நாம் அவதானித்தாலேயே உணரமுடியும்.

நாம் ஒவ்வொருவரும் அப்படி ஒரு நிலையை ஒரு சில கணங்களாவது அனுபவித்திருப்போம். ஏதோ ஒரு காரியத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி புத்தி, மனம் எல்லாவற்றையும் கொண்டு செய்து கொண்டு நிமிர்ந்து உணரும் பொழுது மிகுந்த நேரம் கடந்துவிட்டதைப் போலவோ அல்லது நேரம் ஸ்தம்பித்து நின்றதைப் போலவோ உணர்ந்திருப்போம். அத்தருணத்தில் மனம் சதா அதன் முன் விழுந்து கிடக்கும் 'காலம்' என்ற திரையை விலக்கி பார்த்துவிட்டு மறுபடியும் அதன் பின்னால் வந்து அடங்கியபின் மிச்சமிருக்கும் அக்கணநேர விடுதலையின் ஞாபகமே அது. காலத்தை உத்றி சஞ்சரிக்கும் அத்தருணங்களில் மனதின் எல்லைகளை அப்பாற்பட்ட சில விஷயங்கள் மனதால் அறியப்படுவதுண்டு. இக்கூற்று வெறும் தத்துவ தளத்தில் சொல்லப்படுபவை என்றில்லாமல் நடைமுறையிலும் சாத்தியப்படுகிறது.