Thursday, July 26, 2012

பெய்யெனப் பெய்யும் இரவு


பல்லாயிரம் இரவுகள் தாண்டி இன்னும் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பு சில நேரங்களில் ஒரு மர்ம பிரபஞ்ச செயல் போல மனதிற்குள் தோன்றுகிறது. அத்தனை இரவுகளையும் ஒன்று சேர்த்து அடுக்கினால் அவை தம்முள் கலந்து ஒரே இரவாக, இனிவரும் எல்லா இரவுகளின் ஆரம்பக் கண்ணியாக மாறித் தெரிகிறது. பகல்கள் எப்போதும் அத்தன்மையை கொண்டிருப்பதில்லை. அதிகபட்சம் அவை, பிரதி எடுக்கப்பட்ட ஆயிரம் பகல்களாக வெளிறி நிற்குமேயன்றி அவை ஒன்று கூடுவதேயில்லை.

இரவு ஆரம்பிப்பது இருட்டு கூடும் பொழுது என தோன்றவில்லை. யதார்த்தத்தில் ஒவ்வொரு இரவும் ஏதொவொரு எதிர்பாரா புள்ளியில் ஆரம்பமாகிறது. பெரும்பாலான இரவுகள் தொடங்கும் முன் உறங்கி விடுகிறோம். மனதின் அடி ஆழத்தில் உள்ள மனதொன்று, அவ்வுறக்கத்திலும் அப்புள்ளியை குறித்து வைத்துக் கொண்டு, விழித்திருக்கும் இரவுகளில் மறுபடியும் ஞாபகப்படுத்துகிறது.

Tuesday, July 10, 2012

நாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும் …


நாஞ்சில் நாடன் என்ற ஆளுமையுடன் பழக பல மணிக்கூறுகள் – மூன்று தினங்கள் அவர் உரையாற்ற கேட்டும், ஒரு நாள் முழுவதும் அவருடன் ஊர் சுற்றிக் கொண்டும் - அமெரிக்காவில் வாய்ப்பு கிடைத்தது.

நாஞ்சில் நாடன் எதை போல் நேர்ப் பழக்கத்தில் தோற்றமளிக்கிறார்? அவருடைய கதைகளை போலவா? கட்டுரைகளைப் போலவா? சராசரி பயணியாகவா? அல்லது இவையெல்லாமில்லாத வேறொரு ஆளுமையாகவா?

ஃப்ரீமான்ட் (Fremont) நகரத்தில் முதல் நாள் கம்பராமாயணம் கலந்துரையாடலுக்கு அவர் வீட்டினுள் நுழையக் கண்ட பொழுது, மிக தயக்கத்துடன் புதியவர்களை கண்டு வணக்கம் சொல்லும் ஒரு எளிய மனிதராகத் தான் தோன்றினார். தன்னிடம் கேட்கப் படாத கேள்விகளுக்கு வலிய சென்று அவர் பதிலுரைத்து நான் காணவேயில்லை. சின்ன தகவல் முதற்கொண்டு எல்லாவற்றையும் சிறு தயக்கமின்றி அடுத்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். வெளியிடங்களில் தான் காண்பதை உள்வாங்கிக் கொண்டே, சில நேரங்களில் பாக்கெட்டில் வைத்திருந்த கனக்கச்சிதமான ஒரு நோட்டு புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார்.