Sunday, November 21, 2010

ஜெயமோகனின் லங்காதகனம்

எந்த செயலும் பல மனநிலைகளில் செய்ய சாத்தியப்படும். வாழ்கையில் நாம் செயல்படும் வேலைகள் பெரும்பாலும் பலமுறை தொடர்ந்து செய்யப்படுவதால் பழக்கமாகிவிடுகின்றன. பழக்கப்பட்ட விஷயங்களில் புதுமையை கண்டடைய நாம் விழைவதில்லை. அலுவலக வேலை முதல் தினசரி வாழ்கையை நடத்த செய்யும் அலுவல்கள் அனைத்தும் சில நாட்களில் ஆர்வமில்லாமல் வெறும் "கடமைக்காக" நிகழ்த்தப்படுவது இதனால்தான். இது எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும் பொதுப் போக்கு. கலை இலக்கியங்களில் செயல்படுபவர்களும் சில காலங்க்களில் நீர்த்துப் போவதற்கு இம்மனநிலையும் ஒரு காரணம். எந்த ஒரு துறையிலும் மறுக்கமுடியாத ஆளுமையை அடைந்தவர் - பரவலாக அறியப்பட்டவர் என்றிருக்க வேண்டியதில்லை - எல்லோரும் தான் செய்யும் செயலில் ஒவ்வொரு முறையும் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள முனைபவர்களாக இருப்பதை காணலாம். திரும்பத் திரும்ப செய்ய வேண்டிவரும் செயலாக இருப்பினும் அதில் மேற்கொண்டு மேன்மையை அடைய முயற்ச்சிதுக் கொண்டே இருப்பதையும், அதன் வழியே தன்னையே சுயபரிசோதனைக்குள்ளாக்கிக் கொள்வதையும் சிறிது நேரம் நாம் அவதானித்தாலேயே உணரமுடியும்.

நாம் ஒவ்வொருவரும் அப்படி ஒரு நிலையை ஒரு சில கணங்களாவது அனுபவித்திருப்போம். ஏதோ ஒரு காரியத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி புத்தி, மனம் எல்லாவற்றையும் கொண்டு செய்து கொண்டு நிமிர்ந்து உணரும் பொழுது மிகுந்த நேரம் கடந்துவிட்டதைப் போலவோ அல்லது நேரம் ஸ்தம்பித்து நின்றதைப் போலவோ உணர்ந்திருப்போம். அத்தருணத்தில் மனம் சதா அதன் முன் விழுந்து கிடக்கும் 'காலம்' என்ற திரையை விலக்கி பார்த்துவிட்டு மறுபடியும் அதன் பின்னால் வந்து அடங்கியபின் மிச்சமிருக்கும் அக்கணநேர விடுதலையின் ஞாபகமே அது. காலத்தை உத்றி சஞ்சரிக்கும் அத்தருணங்களில் மனதின் எல்லைகளை அப்பாற்பட்ட சில விஷயங்கள் மனதால் அறியப்படுவதுண்டு. இக்கூற்று வெறும் தத்துவ தளத்தில் சொல்லப்படுபவை என்றில்லாமல் நடைமுறையிலும் சாத்தியப்படுகிறது.

Wednesday, October 20, 2010

ஒற்றை செறுப்பு

திசைகள் சங்கமிக்கும்
இடத்தில் கிடந்தது
தனிமையில் குழந்தையின்
ஒற்றை செறுப்பு

கால்களை தொலைத்து
துணையை பிரிந்து
யாரோ வரும் வழி நோக்கி
சுணங்கியபடியே

மலரா பாதங்களின் வெம்மை
ஒன்றையே அறிந்தவனுக்கு
இனி
காலி வீட்டின் முன் நாளிதழ்
புல் மண்டிய கல்லரையின் பெயர் தூண்
என்ற
சொந்தங்களின் வழியே அறிவான்
தன் மறு பிரதிபலிப்பை

தினசரி கடந்து போகிறேன்
நம்பிக்கையுடன்
காணாமல் போய் விடுவான் என
நேற்று இன்று நாளை ...

Tuesday, October 5, 2010

மரணமெனும் சிறுவன்





ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது வந்த தீபாவளிமுந்திய நாள் ஆரம்பித்துஅடுத்த நாள் இரவு மிக ஆரவாரமாக போய்க் கொண்டிருந்ததுஎனக்கு அப்பா நூறு அல்லது இருநூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கித் தருவார்மத்தாப்புபுஸ்வாணம், சங்கு சக்கரம் சகிதம்பொன்னை செலவழிப்பது போல பட்டாசு கொளுத்துவேன்சில நாட்கள் கழித்து வரும் திருக்கார்த்திகைக்கும் இதில் மிஞ்சியதை வைத்து தான் சரி கட்டவேண்டும்

'ப்ளாக் வீடுகளின் சிறுவர்கள் விடும் ராக்கெட் ரகங்கள்  'பிப்ளாக்கில் இருந்த எனக்கு வாங்கித் தரப்படவில்லைஇன்னும் ஒரு பாக்கெட் ஆட்டம் பாம்ப்ஒரு பாக்கெட் சீனி வெடி, 2 பாக்கெட் லட்சுமி வெடி,, 4 டப்பா மத்தாப்புஒவ்வொரு பாக்கெட் புஸ்வாணமும்சக்கரமும் மீதமிருந்தது (சீனி வெடி தவிர மற்றவைகளில் பாதி கார்த்திகைக்கு வைப்பு நிதியாக்க வேண்டியிருந்தது). 

மாலை தூர்தர்ஷன் தமிழ் சிறப்பு படம்தெவிட்டும் இனிப்புகளுடன் முடித்துவிட்டு கடைசி ரவுண்ட் வெடிவைப்புக்கு பால்கனியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன்பத்து அடி இடைவெளி விட்டு குவாட்டர்ஸ் முற்றத்தில் அரை ட்ரவுசர் போட்ட சிறுவன் நின்று கொண்டிருந்தான்புது உடுப்பு என சொல்வதற்கில்லைகிழிசல் இல்லைடம்டமால் என்று சத்தமும்பல வண்ணங்களில் ஒளிர்ந்து அணைந்து கொண்டிருக்கும் வாணவேடிக்கைகளுக்கு நடுவே அவன் அசைவே இல்லாமல் என்னை பார்த்துக் கொண்டிருந்தான்எதற்காக வந்திருக்கிறான் என தெரியும்சீனி வெடி பாக்கெட்பால்கனியிலிருந்து குதித்து வெளியேறினால் அவனை கடந்து தான் அடுத்த ப்ளாக் நண்பர்களை அடைய முடியும்பார்வையை தவிர்த்து பட்டசுகளை கலைத்து அடுக்கிக் கொண்டிருந்தேன்போய் தொலைவான் என நினைத்தேன்.

Monday, September 20, 2010

ஊமை சாட்சி

இரவு தொடங்கிய நேற்று
புரை படிந்த பூனையின் ஒற்றை கண்ணை
போல் நிலா
என் நெற்றியின் மேல்  மிதந்தது
என் வீதியின் தனிமையை போக்க
யார் முதலில் கண் சிமிட்டுவார்
என்று அதனிடம் விளையாடிக் கொண்டே நடந்தேன்
என் கண்கள் அசைந்தாலும் சிமிட்டவில்லை
நிலவின் பார்வையில்
அசைவில்லை சலனமில்லை
வெறும் ஒரு பார்வை
தோற்பேனோ என நினைத்து
கண்ணை குறுக்கி ஆழ்ந்து நோக்க
நிலவின் உள்ளே
கசடுகளை தாண்டி
ஒரு குழியில்
தலையை உயர்த்தி ஒருவன்
என்னையே பார்த்திருந்தான்,
கண்களை விலக்கி
நெஞ்சு விம்ம வீட்டுள் ஓடி
தாழிட்டுக் கொண்டேன்
அன்றிரவு என் சுவரில்
நிலவொளியுடன் சேர்ந்து
அவன் பார்வையும்
படர்ந்து கிடந்தது.

Friday, August 20, 2010

இளம் கவிஞனுக்கான கடிதம் - 1

ரெய்னர் மரியா ரில்கே 1875 முதல் 1926 வாழ்ந்த ஜெர்மன் கவிஞர். அவருடைய பல நூறு படைப்புகளாகிய கவிதைகளை போல அவர் பிறருக்கு எழுதிய கடிதங்களும் சிறப்புப் பெற்றவை. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது, 1902 முதன் 1908 வரை ஃப்ரான்ஸ் கப்பஸ் என்ற 19 வயது நிரம்பிய 'வியென்னா இராணுவ கல்லூரியின்' மாணவருக்கும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவரான ரில்கே எழுதிய கடிதங்களாகும். இக்கடிதங்கள் பதட்டத்துடன் வாழ்கையை எதிர்நோக்கும் ஒரு மாணவனுக்கு ஒரு ஆசிரியருமாகிய நண்பர் கூறும் அறிவுரையை போல அமைந்துள்ளன.
1929இல், ரில்கேயின் மரணத்திற்கு பின் மூன்று வருடங்கள் கழித்து கப்பஸால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இனி வருவது அக்கடிதங்ககளின் ஸ்டீபன் மிட்செல்லின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு.

முதல் கடிதம்

பாரீஸ்,
பிப்ரவரி 17, 1903

அன்புள்ள ஐயா,
உங்கள் கடிதம் சில நாட்களுக்கு முன் வந்து சேர்ந்தது. நீங்கள் என் மேல் வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவ்வளவே என்னால் செய்ய இயலும். உங்களுடைய கவிதை வரிகளை விவாதிக்க எடுக்கப்படும் எவ்வித எத்தனிப்பும் எனக்கு அன்னியமானது. விமர்சனங்களை போல் ஒரு கலைப்படைப்பை பிக குறைவாக தொட்டுச் செல்வது வேறொன்றுமில்லை: [அவை எப்பொழுதும் இறுதியில் தவறான புரிதல்களில் போய் முடிந்து விடுகின்றன.] காரியங்கள் எளிதில் உணரக்கூடியதாகவோ அல்லது விளக்கி சொல்லிவிடக்கூடியதாகவோ இருக்கும் என நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற மற்றவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அவை அப்படி இருப்பதில்லை; பெரும்பான்மையான அனுபவங்கள் விளக்க முடியாதவை, அவை எந்த சொல்லும் நுழைந்திராத வெளியில் ஏற்படுபவை, மற்றும் மற்ற எல்லாவற்றையும் விட விளக்க முடியாதென்பது, நமது சிறியதும், துரிதமாக கடந்து போகும் வாழ்கையை தாண்டி, ஒரு வாழ்கையை தாங்கிக் கொண்டிருக்கும், புதிர் மிகுந்த இருப்புகளாகிய, கலைப் படைப்புகளேயாகும்.

Sunday, August 8, 2010

தொலைந்தது

உறங்காமல் தூங்கி
விழிக்காமல் எழுந்து
உண்ணாமல் தின்று
பேருந்தின் உபரியாய்
பயணித்து
இயந்திரமாய் உழைத்து
என
ஜன்னலை திறக்க
நான்கு மாதமாயிற்று...
அதனடியில்
முழு நிறத்துடன்
இரு இதழ்களை வைத்துவிட்டு
இயற்கையாய் மரணித்திருந்தது
என் தொட்டிச் செடி

Saturday, February 27, 2010

காபி கடை

ஒரு அமெரிக்க மழை நாள் மாலை நேரம் காபி கடையில் உட்கார்ந்திருந்தேன்.
ஆள் நடமாட்டம் அதிகம். அம்புகளை போல காதிற்குள் குத்தி இறங்கியது சுற்றுப்புற பேச்சு சத்தம்.
"என்னிடம் அப்படி பேசிட்டான் அந்த 'அவனுக்கு' பொறந்தவன்...", டீ ஷர்ட், ஜீன்ஸ், முட்டி வரை பூட்ஸ் அணிந்து மிக நவநாகரிகமாக உட்கார்ந்திருந்த வலது மேஜை பெண், தொப்பி போட்டிருந்த இன்னொரு பெண்ணிடம்.

"அப்படியா நினைக்குற??? எனக்கென்னவோ நாளை மறுநாள் வரை காத்திருக்கலாம்னு தோணுது. தேவையானது கிடைச்சாச்சு. அப்போ ஒண்ணு பண்ணலாம். என்னது??? ஹா ஹா ஹா...." மூன்று ஃபைல்களுடன் ஒரு வெள்ளெழுத்து கண்ணாடி செல்போனில்.

"நிறைய காசு பார்த்தேன், முக்கால்வாசி தண்ணிலயே செலவு செய்திட்டேன், ஆனா ஜாலியா இருந்துச்சு..." பின் மேஜை மாணவன்.
இதற்கிடையில் ஒலிபெருக்கியில் 'ஜாஸ்' இசை வேறு.