இரவு தொடங்கிய நேற்று
புரை படிந்த பூனையின் ஒற்றை கண்ணை
போல் நிலா
என் நெற்றியின் மேல் மிதந்தது
என் வீதியின் தனிமையை போக்க
யார் முதலில் கண் சிமிட்டுவார்
என்று அதனிடம் விளையாடிக் கொண்டே நடந்தேன்
என் கண்கள் அசைந்தாலும் சிமிட்டவில்லை
நிலவின் பார்வையில்
அசைவில்லை சலனமில்லை
வெறும் ஒரு பார்வை
தோற்பேனோ என நினைத்து
கண்ணை குறுக்கி ஆழ்ந்து நோக்க
நிலவின் உள்ளே
கசடுகளை தாண்டி
ஒரு குழியில்
தலையை உயர்த்தி ஒருவன்
என்னையே பார்த்திருந்தான்,
கண்களை விலக்கி
நெஞ்சு விம்ம வீட்டுள் ஓடி
தாழிட்டுக் கொண்டேன்
அன்றிரவு என் சுவரில்
நிலவொளியுடன் சேர்ந்து
அவன் பார்வையும்
படர்ந்து கிடந்தது.
No comments:
Post a Comment