முதலில் இந்த தலைப்பின்
இறுதியில் உள்ள வினவும் தன்மையை குறிப்பிட்டு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதற்கான
பதிலை நான் அடைந்தாலும், அந்த பதில் எனக்கு மட்டுமே பொருந்தும், உங்களுக்கு அல்ல. மற்றெவருடைய
அறிவுரையையும் ஏற்காமல், தன்னுடைய உள்ளுணர்வை தொடர்ந்து சென்று, தன்னுடைய தர்க்கத்தை
உபயோகித்து, தனக்கான முடிவுகளை அடைய வேண்டுமென்பதே வாசிப்பதற்கான அறிவுரையாக ஒருவர்
மற்றொருவருக்கு தர முடியும். நமக்குள் இந்த கருத்து சம்மதமென்றால் நான் என்னுடைய கருத்துகளையும்,
பார்வைகளையும் உங்கள் முன் வைப்பேன், ஏனென்றால் அவை, ஒரு வாசகன் கொள்ள வேண்டிய முக்கிய
குணமான, உங்கள் வாசிப்பு சுதந்திரத்தை தடுப்பதற்கு
அனுமதிக்க மாட்டீர்கள். புத்தகங்களைப் பற்றி அப்படி சட்டங்கள் வகுத்திட முடியுமா என்ன?
வாட்டர்லூவின்
யுத்தம் நிச்சயமாக குறிப்பிட்ட ஒரு நாளில் தான் போரிடப்பட்டது: ஆனால் ஹாம்லெட் லியரை
விட சிறப்பான நாடகமா? யாராலும் முடிவாக சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரும் அதற்கான முடிவை
அவர்களே அடைய வேண்டும்.
எத்தனை உயர்ந்த
அதிகாரம் படைத்தவராயிருப்பினும், நமது நூலகங்களில் அவர்களை அனுமதித்து, நாம் எதை வாசிப்பது,
எப்படி வாசிப்பது, நாம் வாசித்த புத்தகங்களின் மதிப்பு எவ்வளவு என்பன போன்றவைகளை முடிவெடுக்க
அனுமதிப்பது, அவ்விடத்தின் உயிர்மூச்சாகிய சுதந்திர உணர்வை அழிப்பதற்கு சமமாகும். மற்ற
எல்லா இடங்களில் நாம் சட்டங்களாலும், பொதுப்போக்காலும் கட்டுப்பட்டிருக்கலாம் – இங்கே
அவை எதுவும் கிடையாது.
ஆனால், அச்சுதந்திரத்தை
அனுபவிப்பதற்கு, தேய்வழக்கு மன்னிக்கப்படுமெனில், நம்மையே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம்மிடம் உள்ள உத்வேகத்தை பொறுப்பில்லாமல், ஒரு ரோஜா செடிக்கு நீரூற்ற வீட்டின் பாதியில்
தண்ணீர் சிந்துவது போல, வீணாக்குதல் கூடாது. நாம் அதை மிக சரியாகவும், வலுவோடும் இந்த
இடத்திலேயே பழக்கப்படுத்த வேண்டும்.
இதுவே, ஒரு நூலகத்தில்,
நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முதலாவதாக இருக்கக் கூடும். ‘இந்த இடம்’ என்பது எப்படி
இருக்கும்? அது பலதரப்பட்டவைகளின் கலவையாகவும், குழப்பங்களின் சங்கமமாகவும் அன்றி வேறொன்றும்
இல்லை என தோன்றலாம். கவிதைகள், நாவல்கள், ஞாபகக் குறிப்புகள், வரலாறுகள், அகராதிகள்,
முக்கியமானவைகளின் பட்டியல்கள் என வெவ்வேறு குணாம்சத்திலும், இனத்திலும், வயதிலும்
உள்ள ஆண்களாலும், பெண்களாலும், எல்லா மொழிகளிலும் எழுதப்பட்ட புத்தகங்கள் அடுக்குகளில்
நெருக்கிக் கொண்டும், இடித்துக் கொண்டும் இருக்கும்.
வெளியே கழுதை
கனைத்துக் கொண்டும், பெண்கள் புலியை பற்றி வதந்தி பேசிக்கொண்டும், புல்வெளிகளில் குதிரைகள்
ஓடிக் கொண்டுமிருக்கும். எங்கிருந்து நாம் ஆரம்பிப்பது? இங்கிருக்கும் பலத்தரப்பட்ட
குழப்பங்களை ஒழுங்குபடுத்துதன் வழியே, நாம் வாசிப்பவைகளிலிருந்து ஆழ்ந்த பரந்த இன்பத்தை
எப்படி அடைய போகிறோம்? எளிமையாக கூற வேண்டுமென்றால், புத்தகங்களை – புனைவு, சுயசரிதம்,
கவிதை – என பிரித்துக் கொண்டு நாமும் அவை ஒவ்வொன்றிலிருந்தும் நமக்கு சரியானதை எது
கொடுக்கிறதோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும். இருந்தும், மிகச் சிலரே, “புத்தகங்கள் நமக்கு
என்ன கொடுக்கும்?” என்ற கேள்வியை கேட்கிறார்கள். பெரும்பாலும் நாம் கலங்கிய, சலனப்பட்ட
மனத்துடன் புத்தகங்களை அணுகி, புனைவில் நிஜத்தையும், கவிதையில் பொய்யையும், சரிதையில்
புகழ்ச்சியையும், வரலாறில் நம் முன்முடிவுகளையும் ஏற்றுமாறு கேட்கிறோம். இத்தரப்பட்ட
முன் எண்ணங்களை நாம் வாசிக்கும் பொழுது விட்டொழித்தோமென்றால் அது போற்றத்தக்க ஆரம்பமாக
இருக்கும். எழுத்தாளனுக்கு ஆணையிடாதீர்கள், நீங்கள் அவனாக மாற முயற்சி செய்யுங்கள்.
அவனுடைய சக படைப்பளியாகவும் கூட்டாளியாகவும் மாறுங்கள். முதலிலேயே ஈடுபாடற்று வெறும்
விமர்சனம் செய்வீர்களென்றால், எதை வாசிக்கிறீர்களோ அதில் கிடைக்கக் கூடிய முழுமையான
இன்பத்தை அடைவதை தடுப்பவராக இருப்பீர்கள்.
ஆனால் உங்களுடைய
மனதை இயன்றவரை விசாலமாக விரித்தீர்களென்றால், அந்த முதல் வாக்கியங்களின் நெளிவுகளிலிருந்து
வெளிப்படும் தொட்டுணரமுடியா நுண்மையுடைய குறிப்புகளும், குறியீடுகளும் இதற்குமுன் நீங்கள்
கண்டிறாத மனிதன் முன் கொண்டு நிறுத்தும். அதில் உங்களை திளைக்கவிட்டு பரிச்சயப்படுத்திக்
கொண்டீர்களென்றால் விரைவிலேயே அந்த எழுத்தாளன் நீங்கள் எதிர்பார்த்ததை விட தீர்க்கமான
ஒன்றை அளிக்க விரும்புகிறான் என்பதை கண்டு கொள்வீர்கள். ஒரு நாவலை படிப்பது எப்படி
என சிந்தித்தோமென்றால், அதன் முப்பது அத்தியாயங்கள் என்பது, ஒரு கட்டிடத்தை போல திடமான,
தீர்க்கமான ஒன்றை உருவக்குவதற்கான முயற்சியாகும். ஆனால் சொற்கள் கற்களை போலன்றி தொட்டுணர
முடியாதவை; வாசித்தல் என்பது காண்பதை விட சிக்கலானதும், கூடுதல் அவகாசம் எடுத்துக்
கொள்ளும் செயலாகும். ஒரு நாவலாசிரியன் செயல்படும் விதத்தை விரைவாக புரிந்து கொள்ள சிறந்த
வழி வாசிப்பதைக் காட்டிலும் அதை எழுதிப் பார்ப்பதே எனத் தோன்றுகிறது; எழுதும் போது
நேரிடும் சறுக்கல்களையும், சிரமங்களையும் வைத்து நீங்களே செய்து பார்க்கும் ஒரு ஆராய்ச்சி.
உங்களுடைய மனதில்
பாதிப்பு ஏற்படுத்திய ஒரு சம்பவத்தை நினைவிலிருந்து மீட்டெடுங்கள். தெருவின் ஓரத்தில்
இருவர் பேசிக் கொண்டிருக்கையில் நீங்கள் அவர்களை கடந்து சென்றீர்கள். மரம் ஒன்று அதிர்ந்தது;
மின் கம்பத்தின் விளக்கு ஆடியது; அவர்களின் பேச்சு கேட்பதற்கு சிரிப்பை வரவழைப்பதாக
இருந்தது, ஆனால் துயரமிக்கதாகவும் இருந்தது; ஒரு முழு காட்சி; ஒரு முழு பார்வை கோணம்
அந்த கணத்தில் உள்ளடங்கி இருந்தது என தோன்றியது.
ஆனால் அதை சொற்களால்
மறுகட்டமைப்பு செய்ய முயலுகையில் அது ஆயிரம் முரண்பட்ட காட்சிகளாக உடைந்து போவதை உணர்வீர்கள்.
அங்கு நடந்ததில் சிலவற்றை விட்டுவிட வேண்டும், வேறு சிலவற்றை அழுத்தமாக சொல்ல வேண்டும்;
அந்த முயற்சியின் இறுதியில் அக்கணத்தின் உணர்ச்சியை தொலைத்து விட்டிருப்பீர்கள். உங்களுடைய
தெளிவற்ற சிதறிய பக்கங்களிலிருந்து சிறந்த நாவலாசிரியர் ஒருவரின் – டாஃபோ, ஜேன் ஆஸ்டன்,
தாமஸ் ஆர்டி – ஆரம்ப வரிகளை வாசித்து பாருங்கள். இப்போது உங்களால் அவர்களுடைய மேதைமையை
புரிந்து கொள்ள முடியும். முற்றிலும் மாறுபட்ட ஆளுமையின் முன் நின்று கொண்டிருக்கிறோம்
என்பதை தாண்டி வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்போம்.
நாவல் வாசித்தல்
சிரமமான, சிக்கலான கலையாகும். சிறந்த நாவலாசிரியர் அளிக்கும் முழுவதையும் பெற்று உபயோகப்படுத்திக்
கொள்ள உங்களுக்கு நுண்மையான பலதரப்பட்ட பார்வைக் கோணங்களை ஏற்படுத்திக் கொள்ளும் திறமையும்,
திடமான கற்பனை வளமும் இருக்க வேண்டும்.
“நம்மால் ஒப்பு
நோக்கி பார்க்கவே முடியும்” என்ற சொற்றொடர் மூலம் வாசிப்பின் ரகசியமும் அதன் சிக்கல்களும்
ஒத்துக் கொள்ளப்பட்டு விட்டது.
வாசித்தலின் முதல்
நிலையான – காட்சிகளை இயன்ற வரை புரிதலுடன் உள்வாங்கிக் கொள்வதென்பது ஒரு பகுதி மட்டுமே;
வாசித்தலின் முழுமையான இன்பத்தை அடைய வேண்டுமெனில் அதனுடன் மற்றொன்றையும் இணைக்க வேண்டும்.
அது, அந்த எண்ணிலடங்க காட்சிகளின் மேல் நமது ஒட்டு மொத்த பார்வையை வைத்து மதிப்பிட
வெண்டும்; நினைவில் கடந்து சென்று கொண்டிருக்கும் காட்சிகளை கொண்டு நிலையான ஒன்றை உருவகிக்க
வேண்டும் ஆனால் உடனடியாக அல்ல. வாசித்ததற்கு பின்னால் அதன் பரபரப்பு அடங்க காத்திருங்கள்;
மனதில் உருவான முரண்களும் கேள்விகளும் மடியட்டும்; நடந்து, உறங்கி, ரோஜாவின் இதழ்களை
கிள்ளி எறிந்து கொண்டோ நேரத்தை கடத்தி காத்திருங்கள். திடீரென நாம் முயலாமலேயே – இத்தரப்பட்ட
மாறுதல்களை இயற்கை இவ்விதத்தில் தான் நிகழ்த்தும் – அந்த புத்தகம் நம்மிடன் திரும்பி
வரும்; ஆனால் வேறு வடிவில்.
நம் மனதின் பரப்பில்
முழு உருவுடன் மிதந்து செல்லும். சொற்றொடர்களாக சேர்த்து வாசித்த புத்தகத்தை விட மிதந்து
செல்லும் இந்த புத்தகம் வித்தியாசப்பட்டது. தகவல்கள் தாமாகவே அவற்றின் இடங்களில் பொருந்திக்
கொள்ளும். ஆரம்பம் முதல் இறுதி வரை அதன் வடிவத்தை – தொழுவமா, பன்றிக் கொட்டகையா அல்லது
தேவாலயமா என - முழுதாக நாம் கண்டு கொள்வோம். இப்பொது அந்த கட்டடத்தை அதை ஒத்த இன்னொன்றுடன்
ஒப்பு நோக்க முடியும். ஆனால் இப்படி ஒப்பு நோக்கையில் நம் பார்வை மாறி விடுகிறது. நாம்
இனிமேலும் அந்த எழுத்தாளனின் நண்பனல்ல. அவனுடைய மதிப்பீட்டாளர்கள். நாம் எந்த அளவிற்கு
நண்பனைப் போல அவர் மேல் இரக்கம் காட்ட இயலாதோ அதே போல் ஒரு நீதிபதியாக தாட்சணியமற்றும்
இருக்க இயலாது. அப்படியென்றால் நம் நேரத்தையும், இரக்கத்தையும் வீணடித்த புத்தகங்கள்
குற்றவாளி இல்லையென்றாகி விடுமா? நோய்மையையும், சுற்றத்தில் அழுகலையும், பொய்யும்,
பகட்டும் நிறைந்த புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்கள் சமூகத்தை கெடுக்க வந்த விரோதிகள்
இல்லையா? அவ்வாறே இருக்குமென்றால் நமது மதிப்பீடுகளில் மிகவும் கடுமையாக இருப்போம்.
ஒவ்வொரு புத்தகத்தையும் அதன் துறையின் ஆகச் சிறந்த புத்தகத்துடன் வைத்து மதிப்பிடுவோம்
– மிக சமீபத்தியதும், மோசாமானதுமான நாவல்கள் கூட சிறந்த ஆக்கங்களுடன் வைத்து மதிப்பிட
வேண்டிய உரிமையை கொண்டுள்ளன.
வாசகனின் கடமையாகிய
இந்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க தேவைப்படும் கற்பனை வளமும், நுண்ணறிவும், கல்விப்புலத்தின்
அளவு எவ்வளவு பெரியது என்றால், அதை ஒரு மனதால் முழுதும் அடைந்திட சாத்தியமல்ல என்றே
தோன்றுகிறது.
அது உண்மை என்றால்,
அதாவது புத்தகத்தை சரியாக வாசிக்க அரிதாகவே அமையக்கூடிய கற்பனை திறனும், உள்ளார்ந்த
பார்வையும், மதிப்பிடும் தன்மையும் கோரப்படுமெனில், இலக்கியம் மிகவும் சிரமமான கலையென்றும்,
வாழ்நாள் முழுவதும் வாசித்தோமென்றாலும் கூட விமர்சனப் பரப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை
நம்மால் அளிக்க முடியாமல் போகலாம் என உங்களுக்கு புரிய வரலாம். நாம் வாசகர்களாக மட்டுமே
இருந்து விட வேண்டும். விமர்சகர்கள் என்ற அரிதானவர்களுக்கு உரிய பெருமையை நாம் உடுத்திக்
கொள்ளக் கூடாது. ஆனால், வாசகர்களாக நமக்கே உரிய கடமைகளும், முக்கியத்துவமும் இருக்கின்றன.
நாம் உயர்த்தி பிடிக்கும் மதிப்பீடுகளும், தர நிர்ணயங்களும் காற்றில் நழுவிச் சென்று
எழுத்தாளர்களின் படைப்புச் சூழலான உயிர் மூச்சின் ஒரு பகுதியாக கலந்து விடும்.
அச்சில் வெளிவராவிட்டாலும்
அதன் பாதிப்பை அவர்களால் உணர முடியும். அது நேர்மையான, தீவிரமான, தனிப்பட்ட முறையில்,
உண்மையான தாக்கமாக இருக்குமெனில், சரியான விமர்சனம் வருவதற்கு காத்திருக்கும் இடைப்பட்ட
வேளையில், அவை மிகுந்த மதிப்புடையதாக இருக்கும். களத்தில் சுடப்படுவதற்காக நடத்திச்
செல்லப்படும் விலங்குகளைப் போல புத்தகங்கள் வரிசையாக விமர்சனத்திற்கு வருகையில், ஒரு
விமர்சகனுக்கு வெடி மருந்தை அடைத்து, குறி வைத்து சுடுவதற்கு ஒரு வினாடி நேரமே உள்ளது
என்ற நிலையில், அவன் புலிகளை முயல்களென்றும், வல்லூறுகளை வீட்டுக் கோழிகளென்றும் முடிவெடுத்தாலோ
அல்லது மொத்தமாக குறி தவறி தூரத்து வயலில் அமைதியாக மேய்ந்து கொண்டிருக்கும் பசுவில்
தன் தோட்டாவை வீணடித்த விட்டாலோ கூட அவனை மன்னித்து விடலாம். இதைப் போல, பத்திரிக்கைகளில்
தவறாக சொல்லப்படும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஒரு எழுத்தாளன் வாசிப்பின்பத்திற்காக
மெதுவாகவும், தொழில் முறையாக இல்லாமல் அதே நேரம் தீவிரத்துடனும் வாசிக்கும் மக்களின்
தாக்கத்தை உணர்வானென்றால் அது அவனுடைய படைப்பின் தரத்தை உயர்த்தாதா என்ன? இப்படி நம்
வழியே புத்தகங்கள் மேலும் வலுவும், செம்மையும், விரிவும் அடையும் என்றால் அதுவே நாம்
அடையத்தக்க இலக்காகும்.
நான் சில நேரங்களில்
கனவு காண்பதுண்டு, நம் வாழ்க்கையின் தீர்ப்பு உரைக்கும் நாள் விடிகையில், பேரரசர்களும்,
ஆளுமைகளும், அறிஞர்களும் தங்களுடைய பரிசுகளை – கிரீடங்களும், புகழணிகளும், பெயர் பொறிக்கப்பட்ட
பளிங்கு கற்களும் – பெற்றுக் கொள்ள வருகையில், இறைவன் அசூயையுடன் நாம் வருவதைக் கண்டு
உரைப்பார், “இதோ பாருங்கள், இவர்களுக்கு பரிசு எதுவும் தேவையில்லை. அவர்களுக்கு தருவதற்கு
நம்மிடம் இங்கே எதுவுமே இல்லை. அவர்கள் வாசிப்பதை நேசித்தவர்கள்.”
No comments:
Post a Comment