Monday, November 19, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 7

ரோம்,
மே 14, 1904

அன்புள்ள திரு. கப்பஸ்,
கடைசியாக நீங்கள் அனுப்பிய கடிதம் எனக்கு கிடைக்கப் பெற்று பல நாட்கள் கழிந்து விட்டன. அதற்கு பதிலளிக்காததற்காக என் மீது வருத்தம் கொள்ளாதீர்கள். முதலில் வேலைப் பளு, பிறகு பல இடைஞல்கள், இறுதியாக தொடர்ந்து கொண்டேயிருக்கும் உடல் நலக்குறைவு எல்லாம் சேர்ந்து என்னை பதிலளிக்க விடவில்லை: ஏனென்றால் என் பதிலகள் அமைதியுடன் கூடிய மகிழ்ச்சியான நாட்களில் இருந்து உங்களை அடைய வேண்டும் என விரும்பினேன். இப்போது உடல் நிலை மறுபடியும் சீரடைந்தது போல உணருகிறேன் ( வசந்த காலத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் சீதோஷண நிலைமாற்றங்களை இங்கும் தாங்கிக் கொள்ள கடினமாக உள்ளது). திரு. கப்பஸ் மறுபடியும் என் வாழ்த்துக்களை சொல்லி உங்களுடன் அதைப் பற்றியும், உங்களுடைய கடிதத்திற்கான பதிலையும் என்னால் இயன்ற வரை பேச முயற்சிக்கிறேன்.

நீங்கள் அனுப்பிய பாடலை பிரதி எடுத்துள்ளேன் ஏனென்றால் அது அற்புதமானதாகவும், எளிமையுடன் மனதிற்குள் நுழைய கூடியதுமாக இருந்தது. நீங்கள் எனக்கு வாசிக்க அனுப்பிய கவிதைகளில் அதுவே மிகச் சிறந்த கவிதையாகும். இப்போது நான் எடுத்த பிரதியை உங்களுக்கு அனுப்புகிறேன் ஏனென்றால் மற்றவருடைய கையெழுத்தில் தன்னுடைய படைப்பை வாசிப்பதால் கிடைக்கும் புதிய அனுபவங்கள் மிகவும் முக்கியமானது என நான் அறிவேன். இந்த கவிதையை இதற்கு முன் அறிந்திராதது போல வாசித்துப் பாருங்கள்; உங்கள் மனதின் ஆழத்தில் அக்கவிதை உங்களுக்கேயானது என உணர்வீர்கள்.


இந்த பாடலையும், அதோடு உங்கள் கடிதத்தையும் வாசித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அதற்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

ஏதோ ஒன்று  நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கும் தனிமையிலிருந்து உங்களை வெளியில் தள்ளுவதைப் போன்று உருவாகும் உணர்வை நினைத்து குழம்பிவிடாதீர்கள். அந்த உணர்வையே  பொறுமையுடனும், விவேகத்துடனும் உபயோகித்தால் உங்கள் ஏகாந்தத்தை இன்னும் பல தொலைவிற்கு நீட்டிக் கொள்ள இயலும். பெரும்பான்மையான மனிதர்கள் (பாரம்பரியத்தின் வழியே) தங்களுக்கான பதில்களை ஏளிமையிலும் எளிமையான தீர்வை நோக்கி திருப்பியிருக்கிறார்கள். ஆனால் எது கடினமானதோ அதன் மேல் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். உயிருள்ளவை அனைத்தும் அதன் மேல் நம்பிக்கை கொண்டுள்ளன; இயற்கையில் உள்ள சகலமும் வளர்ந்து தன்னையே இயன்ற வரை பாதுகாத்துக் கொள்கின்றன, அதே நேரம் தன்னுடைய இயல்பை மாற்றாமல் எல்லா எதிர்ப்புகளையும் தாங்கிக் கொண்டு தொடர்கின்றன. தனிமையில் இருப்பது நல்லது ஏனென்றால் தனிமை கடினமானது; ஒன்று கடினமானது என்பதே அதை மேற்கொள்வதற்கான இன்னொரு காரணமாகும்.

அன்பு செலுத்துதல் சிறந்தது; காரணம், அதுவும் கடினமானது. ஒரு மனிதன் சகமனிதன் மேல் கொள்ளும் அன்பு என்பது – நமக்கு கொடுக்கப்பட்டவைகளில் மிகவும் கடினமான செயலாகும் - இறுதியான பரீட்சை மற்றும் நிரூபணம் – மற்ற எல்லா செயல்களும் அந்த கடின செயலுக்கான முன்னேற்பாடுகளே. அந்த காரணத்தினாலேயே, இளையவர்கள் - எல்லா விஷயங்களிலும் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் -  அன்பு செலுத்தும் திறனற்று இருக்கிறார்கள்; அது அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் கற்றுக் கொள்ளும் காலம் என்பது நீண்ட, தனிமை மிகுந்த, வாழ்க்கையில் வெகு தூரம் உள்ளே செல்லும் பயணமாகும். நேசித்தல் என்பது தொடக்கத்திலேயே ஒன்று சேர்ந்து, சரணடைந்து, மற்றவருடன் ஒன்று கலப்பதன்று ( தெளிவற்று, முழுமையடையாமல், பொருந்தாமல் தொடர்வதாக இருந்தால், அவ்விருவர் சேர்ந்ததனால் தான் என்ன பயன்?). தன்னுடைய நேசம் தனிமனிதன் கனிவதற்கும், தனக்குள்ளேயே மற்றொன்றாக மாறுவதற்கும், தன் அன்பு செலுத்தும் மனிதருக்காக தன்னுள்ளே இன்னொரு உலகமாக மாறுவதற்கும் தூண்டுதலாக அமைய வேண்டும். அவனிடத்தில் கோரப்படும் மிகப்பெரிய கோரிக்கையாகும், அவனை தேர்வு செய்ததன் மூலம் அது அவனை பல தொலைவுகளுக்கு இட்டுச் செல்லும். தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற இந்த உணர்வின் மூலமே (எப்போதும் கூர்ந்து கேட்டுக் கொண்டே, இரவு பகலாக தன்னையே செதுக்கி) இளையவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேண்டும்; அதை நிகழ்த்தி முடிப்பதற்கான அளவிற்கு மட்டும் தான் நமது வாழ்க்கை பெரியதாக உள்ளது போலும்.

ஆனால் இதே விஷயத்தில் தான் இளையவர்கள் மிக மோசமாக தவறு செய்கிறார்கள் (அவர்களுக்குரிய இயல்பான பொறுமையின்மையால்) . காதலில் ஒருவரின் மேல் மற்றொருவர் பாய்ந்து, தமக்கே உரிய ஒழுங்கின்மையாலும், பதட்டத்தாலும், சீரற்ற இயல்பாலும், தம்மையே சிதறடிக்கிறார்கள்: பிறகு நடப்பது என்ன?  தங்களுடைய கூடல் என பாதி உடைந்து போனவைகளையும், அதனால வரக்கூடிய மகிழ்ச்சியையும், எதிர்காலங்களையும் வைத்து வாழ்க்கையால் என்ன செய்ய இயலும்? இப்படியாக மற்றவருக்காக ஒருவர் தன்னயே இழந்து, அடுத்து வருபவரையும் இழந்து, அதற்கடுத்து வருபவரையும் இழக்கிறார். எந்தவொரு நன்மையும் கொடுக்க  முடியாத  பயனற்ற இந்த குழப்பங்களுக்கு மாற்றாக பலஇதமான நுண்ணுணர்வுகளைக்  கொண்ட விஷயங்களை பரிமாற்றம் செய்கிறார்கள். அவர்களுக்கு இறுதியில் எஞ்சுவது கொஞ்சம் அருவருப்பும், ஏமாற்றமும், அகத்தின் ஏழ்மையுமே - பிறகு அவைகளிலிருந்து தப்பி அபாயமான இந்த சாலையில் கட்டப்பட்டிருக்கும் பொதுக் கூடங்கள் போன்ற மரபுகளின் உள்ளே அடைந்து விடுவார்கள். மனித அனுபவத்தின் மற்ற எந்த பரப்பை விடவும் இதில் மட்டுமே அதிகமான பொது மரபுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்டும், உயிர்ப்புடனும் பலவிதமான கண்டுபிடிப்புகள், படகுகள், நீர்த்துறைகள் என இதற்கு உண்டு; சமூகம் இவ்விஷயத்தில் எல்லா வகையான அகதி முகாம்களை உருவாக்கி வைத்துள்ளது, ஏனென்றால் காதல் வாழ்வை ஒரு கேளிக்கையாக உருவகித்து வைத்திருப்பதால், அதற்கு எளிமையான, மலிவான, பாதுகாப்பு மிகுந்த சூழ்நிலையை அளிக்க வேண்டியுள்ளது.

பல இளைஞர்கள் தவறாக காதலில் விழுந்து - அதாவது, தங்களுடைய தனிமையை விட்டுக் கொடுத்து, முழுவதுமாக மற்றவரிடம் சரணடைந்து (சராசரி மனிதன் தொடர்ந்து அதையே செய்துக் கொண்டிருப்பான்) – பிறகு  தாம் ஒடுக்கப்பட்டதாக உணர்ந்து அந்த சூழ்நிலையையும் வாழத் தகுந்ததாக, பலனளிப்பதாக மாற்ற மிக அந்தரங்கமாக முயலுகிறார்கள் என்பது உண்மை. அவர்களுடைய தன்னியல்பு அவர்களுக்கு உரைப்பது என்னவென்றால் காதலில் உதிக்கும் கேள்விகள், எல்லாவற்றையும் விட முக்கியமான அந்த கேள்விகள், முன்னரே அறியப்பட்ட ஒப்பந்தங்கள் கொண்டு பொதுவெளியில் தீர்க்கப்பட முடியாது; அவை ஒரு மனிதனிலிருந்து மற்றவருக்கு செலுத்தப்படும் மிக அந்தரங்கமான கேள்விகளாகும், அவைகளுக்கு மிகவும் அந்தரங்கமான பதில்களே தேவைப்படுகிறது. ஆனால், தம்மையே மற்றவர் மீது வீசி எறிந்து ஒருவர் மற்றவருடைய எல்லைகோடு எதுவென்று பகுத்தறிய இயலாமல் இருப்பவர்கள், தமக்கென்று தனித்துவமாக எதுவும் இல்லாதவர்கள், எங்ஙனம் ஆழப் புதைந்து போன தனிமையிலிருந்து தம்மை வெளிக் கொண்டுவர இயலும்?

அவர்களின் செயல்பாடுகள் பரஸ்பர இயலாமையால் ஏற்படுகிறது, பிறகு நல்ல எண்ணங்களுடன் தங்களை நோக்கி வரும் சமூக மரபுகளிலிருந்து (உதாரணத்திற்கு திருமணம்) தப்பித்துக் கொள்ள, அதைவிட தெளிவற்ற மற்றொரு மரபு சார்ந்த தீர்வுகளின் பிடியில் போய் விழுந்து விடுகிறார்கள். அதன் பிறகு அவர்களை சுற்றி இருப்பது வெறும் மரபுகளே. எங்கெல்லாம் மனிதர்கள் முதிராமல் உருக்கி, கலங்கிய இணைதலைக் கொள்கிறார்களோ; அங்கு நடைபெறும் செயல்கள் யாவும் மரபானவையே; பிறகு அந்த உறவுகளின் குழப்பங்கள் அவற்றிற்கே உரிய மரபான தளைகளில் சென்று முடிகிறது. அவை எவ்வளவு அசாதாரணமாக தெரிந்தாலும்; அவர்களின் பிரிவு கூட வழக்கமான முறையில், தனிப்பட்டதாக இல்லாமல், உறுதியும், பலனுமற்ற தற்செயலான முடிவாகவே இருக்கும்.

ஆழ்ந்து நோக்கினால் மரணத்திற்கும், இப்படிப்பட்ட கடினமான அன்பிற்கும் எங்கேயும் சரியான தீர்வோ, தெளிவோ, பாதையின் குறிப்போ இல்லாதிருப்பதை புரிந்து கொள்ள முடியும்; ஏனென்றால் நமக்குள் பொதிந்து, அடுத்தவருக்கு அனுப்பிவிடும் இவ்விரண்டு காரியங்களுக்கும் எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட பொது விதிகள் என்று எதுவும் கிடையாது. ஆனால் எங்ஙனம் வாழ்க்கையை தனிமனிதராக சோதித்துப் பார்க்கிறோமோ அதைப் போலவே இவைகளும் தனிமனிதர்களாக நம் உள்ளே நெருக்கமாக சந்திக்கும். இவ்வகையான அன்பு கொள்வதால் நம்முடைய வளர்ச்சியில் அவை ஏற்படுத்தும் மாற்றங்கள் என்பது இவ்வாழ்க்கையையும் தாண்டிய விஷயங்களாகும்; தொடக்க நிலையில் உள்ள நாம் அதற்கெல்லாம் தகுதியானவர்கள் அல்ல. இருந்தாலும் கூட அதை தாங்கிக் கொண்டு, அன்பு செலுத்துதல் என்பதை கற்றுக் கொள்ளலாக கொண்டு, எளிமையான, அற்பமான விஷயங்களில் மற்றவர்களைப் போல நம்முடைய தனி இருப்பை தொலைத்து விடாமல் இருந்தோமென்றால் – நம்மைப் பின்தொடர்பவர்களுக்கு அதுவே ஒரு சிறு பாதையாகவும், முன்னேறிச் செல்வதற்கு ஒளியாகவும் இருக்கக் கூடும். அது போதுமானது.

நாம் இப்போதுதான் ஒரு மனிதனுக்கும் இரண்டாவது மனிதன் மீது உள்ள உறவைக் குறித்த பாரபட்சமற்று, முன்முடிவுகளற்று பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். அப்படிப்பட்ட உறவுகளில் வாழ்வதற்கான நமது முயற்சிகளுக்கு முன் உதரணங்கள் கிடையாது. இருந்தாலும் கூட காலத்தின் மாற்றங்கள் பல விஷயங்களை தொடக்க காலங்களில் நமக்கு அளித்துள்ளது.

சிறுமியும், பெண்ணும் அவர்களுடைய சமீபத்திய தனிப்பட்ட வளர்ச்சியில் சிறிது காலங்களுக்கு மட்டுமே ஆணின் குணத்தையும், செயல்களையும் பிரதிபலிப்பார்கள். நிலைமாற்றத்தின் உறுதியற்ற காலங்கள் கழிந்த பின்பு – அவர்கள் ஆண்களின் உருக்குலைக்கும் தாக்கங்களிலிருந்து அவர்களுடைய தன்னியல்பை தூய்மைப்படுத்தி எடுத்துக் கொள்வதற்கே இத்தனை வேஷங்களின் வழியே பயணித்தார்கள் என்பது புரிய வரும். மேம்போக்கான பார்வையை கொண்டிருக்கும் ஆண் – அவன் அன்பு செலுத்தும் எதையும் குறைத்தே மதிப்பிடுபவன் – போலன்றி; தன்னுள்ளே ஒரு உயிரை இன்னும் நெருக்கமாகவும், உயிர்ப்போடும், நம்பிக்கையுடனும் கொண்டிருக்கும் பெண் தன் ஆழங்களில் கூடுதல் கனிவுடனும், மனிதத்துவத்துடனும் இருப்பாள். கருப்பையில் எல்லா துன்பத்திற்கு மத்தியிலும் சுமக்கப்படும் பெண்ணின் மனிதாபிமானம், மரபு சார்ந்த பெண்மை என்ற வெளித்தோற்றத்தை அவள் உதிர்க்கையில் வெளிப்படும் – அதன் வரவை எதிர்ப்பார்க்காத  ஆண்கள் அதைக் கண்டு அதிர்ச்சியடைவார்கள். இன்னும் சில காலங்களில் (இப்போதே வட ஐரோப்பாவின் சில நாடுகளில் நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன) பெண்களின் பெயர்கள் வெறும் ஆண்களின் எதிர்மறை என்பதைக் கடந்து தனித்துவமான வாழ்க்கையாகவும், யதார்த்தமாகவும் மாறிவிடுவார்கள்: பெண் மானுட இனம்.

இந்த முன்னேறல் (ஆரம்பத்தில் ஆணின் விருப்பத்திற்கு எதிராக இருப்பினும்) காதல் அனுபவத்தை மாற்றி அமைத்துவிடும்: தவறுகள் நிரம்பிய அனுபவங்களிலிருந்து வடிவமாற்றம் பெற்று ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையே ஏற்படும் உறவு என்றாகி விடும். இனிமேலும் அது ஆணிடம் இருந்து பெண்ணை நோக்கி பாயும் உறவு என்று இருக்காது. கூடுதல் மனிதத்துவம் கொண்ட இந்த அன்பு ( முடிவில்லா பரிவும், மென்மையும், கருணையும், தெளிவும் கொண்ட) நம்மை சிரமத்துடன் தயார்படுத்திக் கொண்டிருக்கும்  அன்பிற்கு ஒத்ததாகும் : இரு மனிதர்களின் தன்னியல்பும், தனிமையும் தம்மையே பாதுகாத்து, வரையரை செய்து கொண்டு ஒன்று மற்றொன்றை வாழ்த்தி வரவேற்க வழிவகுக்கும் அன்பாகும்.
இன்னும் ஒரு செய்தி. நீங்கள் சிறுவனாக இருந்த பொழுது உணர்ந்த பெரும் அன்பு உங்களுக்கு தொலைந்து போய்விட்டது என எண்ணாதீர்கள். உங்களுடைய அந்த கால ஆசைகள் அன்று முதிராமல் இருந்த தால் தான் இன்று வாழ்கிறீர்கள் என்பதை எப்படி அறிந்து கொள்ள இயலும்? அன்பு, உங்கள் நினைவுகளில் உறுதியுடனும், உக்கிரத்துடனும் இருப்பதற்கு காரணம் அதுவே முதல் முறையாக ஆழ்ந்த தனிமையிலும், அக செயல்பாடுகளிலும் உங்களை ஈடுபட வைத்ததால் தான் என நான் நம்புகிறேன்.

திரு. கப்பஸ், என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.

No comments: