Sunday, October 21, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 5

ரோம்,
அக்டோபர் 29, 1903

உங்களுடைய கடிதம் ஆகஸ்ட் 29 அன்று ஃப்ளோரன்ஸ் நகரத்தில் என்னை வந்தடைந்தது; அதற்கு மிகவும் தாமதமாக – இரண்டு மாதங்கள் கழித்து – பதிலளிக்கிறேன். என்னுடைய மெத்தனத்தை மன்னிக்கவும். நான் பயணம் செல்லுகையில் கடிதம் எழுதுவதை விரும்புவதில்லை. ஏனென்றால் கடிதம் எழுதுவதற்கு மிக அத்தியாவசியமான உபகரணங்களுடன் சேர்த்து அமைதியும், ஏகாந்தமும், மிகவும் பரிச்சயமற்ற நேரமும் எனக்கு தேவைப்படுகிறது.

நாங்கள் ஆறு வாரங்களுக்கு முன், ஆட்களற்ற, வெக்கை மிகுந்த ரோம் நகரத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த சூழ்நிலையில், தங்குவதற்கு ஏற்ற இடம் கிடைப்பதற்க்கு உண்டான பிரச்சனைகளால், எங்களை சூழ்ந்திருந்த அமைதியின்மை முடிவற்றது போல தோன்றியது. அதோடு, ரோம் நகரம் ( அதோடு பழக்கப்படுத்திக் கொள்ளாதவருக்கு) ஒருவரை ஆரம்ப நாட்களில் துயரத்தால் கட்டிப் போட்டுவிடுகிறது. அதற்கு காரணம் இந்நகரத்தின் ஜீவனற்ற அருங்காட்சியகத்தை ஒத்த சூழல்; கடந்த காலங்களின் செல்வ செழிப்புகளை வலிந்து முன்னே கொண்டு வந்து (கடந்த கால செழிப்புகளை நம்பி தற்காலத்தின் ஒரு சிறு பகுதி வாழ்ந்து வருகிறது), கல்விமான்களாலும், கலை ஆர்வலர்களாலும் மட்டுமீறிய அளவிற்கு அவற்றின் மதிப்பு உயர்த்தப்பட்டு உள்ளது.  அவர்களின் நகலாக நடந்து கொள்ளும் இத்தாலியின் சராசரி சுற்றுலாப் பயணி பார்ப்பவை எல்லாம் மற்றொரு காலகட்டத்தின், நம்மைச் சாராத மற்றொரு வாழ்க்கை சூழலின் தற்செயலாக எஞ்சியுள்ள சிதைந்து, அழிந்து கொண்டிருக்கும் பொருட்களே;  இறுதியில், சில வாரங்கள் மன எதிர்ப்பு கழிந்த பின் ஒருவர் இந்நகரில் மிச்சமிருக்கும் சிறு குழப்பத்துடன் சமநிலையை அடைய முடியும். பிறகு தனக்குத் தானே ஒருவர் சொல்லிக் கொள்வது: “மற்ற இடங்களை விட இந்த இடம் கூடுதல் அழகுடையது அல்ல. தலைமுறைகளாக போற்றப்பட்டும், மிகச் சிறந்த பணியாளர்களின் கைகள் கொண்டு செப்பனிடப்பட்டு பாதுகாக்கப்படும் இப்பொருட்களில் மதிப்போ, அழகோ, உணர்வோ எதுவும் இல்லை, இல்லவே இல்லை”.


ஆனால் இங்கும் அழகுள்ளது ஏனென்றால் எல்லா இடங்களுமே மிகுதியான அழகு கொண்டவை. முடிவில்லா உயிர்த்துடிப்புடைய நீர் இங்கே சிறு புராதன கால்வாய்களினூடே ஓடி, பெரு நகரை வந்தடைந்து, அந்நகரின் பல சதுக்கங்களில் வெள்ளைக் கற்களால் அமைக்கப்பட்ட வட்டில்களில் நடனமாடிக் கொண்டிருக்கிறது. அதே நீர் தன்னையே விரித்து அகலமான பல குளங்களில் பகல் முழுவதும் முணமுணுத்துக் கொண்டேயிருக்கிறது; நட்சத்திரங்கள் நிறைந்த, மென்காற்று வீசும் பரந்த இரவு முணுமுணுப்பின் ஓசையை கூடுதலாக உயர்த்துகின்றன. இங்கு தோட்டங்கள் உள்ளன, இருபுறமும் வரிசையான மரங்கள் உடைய சாலைகளை மறக்க இயலாது மற்றும் மைக்கேலேஞ்சலோ வடிவமைத்த படிகட்டுகள்,  கீழ்நோக்கிச் செல்லும் அருவியைப் போன்ற உருவமைப்பில் உருவாக்கப்பட்ட படிக்கட்டுகள்; அவை இறங்குகையில் அலைகளிலிருந்து படிகள் உருவாகி வரும். இக்காட்சிகளின் வழியே ஒருவர் தன்னை மறுபடியும் திரட்டிக் கொண்டு, இறுகப் பிடித்து பாரமேற்றும் மற்றவைகளின் ஓயாத இரைச்சலில் இருந்து தன்னை காத்துக் கொள்ள இயலும். நாம் அன்புகொள்ளக் கூடிய நித்தியதன்மையையும், பங்கேற்க கூடிய தனிமையையும் தன்னகத்தே கொண்டுள்ள வெகு சில பொருட்களை இங்கே ஒருவர் மெதுவாக இனம் காண கற்றுக் கொள்வார்.

நான் இன்னும் நகரத்தில் தான் வசிக்கிறேன், காபிடாலில், பண்டைய ரோமின் கலைகளிலிருந்து நம்மிடம் வந்துள்ள மிக அழகான குதிரை வீரனின் சிலை இருக்கும் இடத்திற்கு அருகில்; அது மார்க்கஸ் ஆரெலியஸ்யின் சிலை. ஆனால் சில வாரங்களில் இந்நகரின் இரைச்சல்களிலும், சம்பவங்களிலும் இருந்து ஒளிந்து பெரிய சோலை ஒன்றின் உள்ளே அமைந்திருக்கும் அமைதி கொண்ட, பழைய கோடைவீடு ஒன்றிற்கு என் வசிப்பை மாற்றி விடுவேன். பனிக்காலம் முழுவதும் அங்கே இருப்பேன்; அந்த தனிமையை அனுபவித்து, மகிழ்ச்சிகரமான வேலை நிரம்பிய மணிநேரங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அங்கு இன்னும் இயல்பாக இருப்பேன்; உங்களுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதுவேன், அதில் நீங்கள் அனுப்பிய கடிதத்தை குறித்து நான் சொல்ல வேண்டிய சிலவற்றை கூறுவேன். இப்போது உங்களிடம் ஒன்றை கூற வேண்டும் (முன்னரே அதை சொல்லாமல் இருந்தது என் தவறு தான்); நீங்கள் அனுப்பிய புத்தகம் (அதில் உங்களுடைய படைப்புகள் சிலவும் உள்ளது என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள்) இன்னும் வந்து சேரவில்லை. உங்களிடம் அவை வார்ப்ஸ்விட்  நகரத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதா? (அவர்கள் வெளிதேசங்களுக்கு பொதிகளை மேலனுப்புவதில்லை). இருப்பதில் அது தான் நம்பிக்கை மிகுந்த சாத்தியம், அது உறுதிபட்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். நீங்கள் அனுப்பிய பொதி தொலைந்து போகவில்லை என எதிர்பார்க்கிறேன் – துரதிருஷ்டவசமாக இத்தாலியின் அஞ்சல் துறை இருக்கும் நிலையில், அப்படி நடந்திருந்தாலும் அதில் அசாதாரணம் ஏதுமில்லை.

அந்த புத்தகம் என்னை வந்தடைந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன் (உங்களுடமிருந்து வரும் எதுவும் எனக்கும் மகிழ்ச்சியே); அதைப் போலவே இந்த இடைப்பட்ட காலத்தில் உங்களிடமிருந்து உருவான கவிதைகளும். நான் எப்பொழுதும் ( நான் வைத்துக் கொள்வதற்காக அனுப்பும்) உங்கள் கவிதைகளை திரும்பத் திரும்ப வாசித்து, அவற்றை உள்ளார்ந்து அனுபவிக்கிறேன்.
நல்வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்களுடன்.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.

No comments: