இயற்கையை விளை பொருளாக பார்ப்பதற்கு அடுத்தபடியாக அதை அழகானதாக பார்ப்பதை குறித்து எமர்ஸன் கூறுகிறார். அழகு என்பது புதிய நிறங்கள், புத்துணர்ச்சி கொள்ள வைக்கும் சூழ்நிலைகள், கிளர்ச்சியூட்டும் வடிவங்கள் போன்றவற்றை கூறலாம்.
கட்டுரையில் அவர் இயற்கை அழகை மூன்று கூறுகளாக பிரித்துப் பார்க்கிறார். முதல் அழகுணர்ச்சியை இயற்கையின் மூலமாக கிடைக்கும் ஒரு விளைபொருளைப் போலவே மனிதன் உணர்கிறான். அது புறத்தில் உணரப்படும் அழகாகும். அடைந்த கூடத்தில் நெடுநேரம் ஒரு வேலையில் கழித்து விட்டு கடற்கரையின் முன்னாலும், பெரும் இமயங்களுக்கு முன்னலும் போய் நிற்கையில் ஏற்படும் விடுபடலை குறிக்கும் அழகுணர்ச்சி என்று அதைக் கூறலாம். அழகின் அக்கூறை உணர்கையில் அங்கு மனிதனை வந்தடையும் காட்சியில், தொடுகையில், ஒலிகளில் புதியவைகளை கண்டுகொள்வான். ஓடும் நீரிலும், கடலின் பரப்பிலும், அந்தி நேர ஒளியில் மிளிரும் மேகங்களின் வடிவங்கள் வழியே அவன் உணரும் அழகு என்பது வெளியே உள்ளது. அது அவனை அமைதிபடுத்தலாம், சந்தோஷப்படுத்தலாம். ஆனால் சிறிது நேரத்தில் அந்த கூறுகள் பழகிப் போய் மற்றொரு புதிய அனுபவத்திற்காக அவன் தேடல் ஆரம்பமாகிவிடும்.
இரண்டாவது அழகென்பது வெளியே உணரப்படும் அழகினூடே அவன் அகத்தின் உள்ளே செல்லும் பயணமே. அழகென்பது புலன்களின் வழியே தன்னையே காண்பது. அழகின் வெளி ஆபரணங்களை துளைத்து அதில் அழகென தான் உணர்வது எதை என்றும், அவற்றின் எல்லா வடிவங்களிலும் மறையாமல் நின்றிருக்கும் மறை பொருள் என்ன என்றும் தன் அகத்தின் வழியே கேட்டுக் கொள்ளும் கேள்விகளின் பதில்களே அவை. அப்படிபட்ட அழகை கண்டு கொள்ளும் ஒருவனுக்கு ஒவ்வொரு முறையும் புதுப்புது புறக் காட்சிகளும், சூழ்நிலைகளும் தேவைப்படுவதில்லை. வெளிர் வானமும், கூழங்கற்களும், காய்ந்த சருகுகளையும் பார்த்துக் கொண்டு அவனால் வெகு தூரம் அழகை ரசிக்க முடியும். அவற்றினூடே அறுபடாமல் செல்லும் நிலையான ஒன்றை பிடித்துக் கொண்டு செல்ல முடியும். அகபுறம் என்று சொல்லப்படுவதைப் போல புற அழகும், அக அழகும் ஒன்றை ஒன்று சமன் செய்யும் நிலை அது என எமர்ஸன் குறிப்பிடுகிறார். இதுவே அழகில் தெய்வீகத்தைக் காண்பது எனலாம்.
அகங்காரம் அழிந்த நிலையில் கண்களை மட்டும் வைத்து இயற்கையை உள்வாங்கிக் கொண்டு உள்ளும், புறமும் வேறுபாடில்லாமல் காணும் அழகை விட உயர்ந்ததாக அவர் கூறும் மூன்றாவது நிலை- அந்த அழகை மனிதன் உருவாக்கும் நிலை என்பதாகும். இயற்கையில் தான் காணும் அழகை முழுவதுமாக உள்வாங்கி அதை கலையாக வெளிப்படுத்தும் பொழுது அவன் இயற்கை அழகை உணர்வதன் அதிகபட்ச சாத்தியத்தை எட்டுகிறான் எனலாம். இயற்கையின் அழகு மனிதனின் அகம் வழியே மறுவாக்கம் செய்யப்படும் பொழுது அதன் ஒரு துளி முடிவிலா ஒன்றை சுட்டிக் காட்டி நிற்கிறது. அதை உருவாக்குவதே கலையின் நோக்கமாக இருக்க முடியும். இயற்கை அழகின் ஆதாரத்தை பிரதிபலிக்கும் எந்தவொரு படைப்பும் அதன் உள்ளே உண்மை, நன்மை, அழகு என்ற முக்குணங்களையும் கொண்டிருக்கும் என்கிறார்.
இயற்கை இருப்பதற்கான காரணம் என்ற கேள்விக்கும் அதன் அழகு என்பது மறுக்கமுடியாத உண்மை என்றாலும் அது மட்டுமே இறுதி உண்மை என்றாகி விடாது என முடிக்கிறார்.