Friday, December 7, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 9

ஃபுரோபெர்க், ஸ்வீடன்
நவம்பர் 4, 1904

அன்புள்ள கப்பஸ்,

கடிதம் அனுப்ப இயலாத இடைப்பட்ட காலங்களில் நான் பகுதி பயணத்திலும், பகுதி அதிக வேலைப் பளுவுடன் இருந்தேன். இன்றும் கூட எழுதுவதற்கு சிரமமாக உள்ளது ஏனென்றால் நிறைய கடிதங்களை எழுதி கை வலியெடுக்கிறது.  நான் உரைக்க மற்றொருவர் எழுதுவதாக இருந்தால் உங்களிடன் கூடுதலாக பேசியிருப்பேன். ஆனால் இன்றைய நிலையில் உங்களுடைய நீண்ட கடிதத்திற்கு என்னுடைய சில சொற்களை பதிலாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
அன்புடைய கப்பஸ், உங்களைக் குறித்து பல முறை நான் எண்ணிக் கொள்வதுண்டு. என் எண்ணங்களின் உள்ளார்ந்த வாழ்த்துக்கள் எப்போதாவது உங்களுக்கு நன்மையளிக்கும். என் கடிதங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கிறதா என பல தருணங்களில் நான் ஐயம் கொள்வதுண்டு. “ஆமாம் அவை உதவியாக உள்ளன” என சொல்லாதீர்கள். நன்றிகள் எதுவும் சொல்லாமல் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்; அவைகளிலிருந்து என்ன வெளிவருகிறது என நாம் பொறுத்திருந்து பார்க்கலாம். 

 
உங்களின் கேள்விகளுக்குளே மறுபடியும் பயணிக்க நான் விரும்பவில்லை. உங்களுடைய அவநம்பிக்கை, அக வாழ்க்கைக்கும், புற வாழ்க்கைக்கும் இடையில் உங்களால் ஏற்படுத்திக் கொள்ள முடியாத ஒருங்கிசைவு அல்லது உங்களை ஒடுக்கும் சகலவிதமான சஞ்சலங்களைக் குறித்து நான் சொல்ல வேண்டியவைகளை சொல்லி விட்டேன். இனி நான் வேண்டுவதெல்லாம் உங்களுக்குளே தாங்கிக் கொள்வதற்கான பொறுமை, நம்பிக்கை உருவாவதற்கான எளிமை, மற்றவர்களோடு இருக்கையில் உணரும் தனிமையின் போது வாழ்க்கையின் கடினத்தின் மீது ஏற்படும் கூடுதலான நம்பிக்கை போன்றவைகளே. அதைத் தவிர்த்து, வாழ்க்கையை உங்களைக் கொண்டு நடை பெற விடுங்கள். என் சொற்களை நம்புங்கள்: வாழ்க்கை எப்போதும் சரியாகவே நடை பெறுகிறது. 


அடுத்தது உணர்ச்சிகளைக் குறித்து: உங்களை ஒருமுகப்படுத்தி, எழுச்சி செய்யக் கொள்ளும் அத்தனை உணர்ச்சிகளும் தூய்மையானவையே. உங்களை ஒரு பக்கமாக பிடித்து, இழுத்து மனதை உருச்சிதைவு செய்யும் உணர்ச்சியே தூய்மையற்றது. உங்களுடைய குழந்தைப் பருவத்தை எண்ணிப் பார்க்கையில் உருவாகும் எல்லா உணர்ச்சிகளும் சிறப்பானவை. உங்களுடைய சிறந்த வாழ்க்கை கணங்களில் உணர்ந்ததை விட இன்னும் கூடுதலாக உங்களை நிறைவுடன் உணரச் செய்பவை எல்லம் சரியானவை. போதையேற்றாமல், மனக்குழப்பம் இல்லாமல் ஆனால் ஆழத்தில் கண்டு கொள்ள முடிந்த ஆனந்தத்தால் உங்களுடைய ரத்தம் முழுவதிலும் தீவிரமேற்றக் கூடியவை கூட நல்லதே. நான் எதைக் குறித்து பேசுகிறேன் எனப் புரிகிறதா?


உங்களுடைய சந்தேகங்களை முறையாக பழக்கிக் கொண்டால் அவைகளையும் ஒரு நற்குணமாக மாற்றலாம். சந்தேகங்கள் உங்களுடைய அறிதலாக வேண்டும், விமர்சனமாக வேண்டும். உங்களுக்குளே எதையாவது அழிக்க முற்படும் பொழுது அதனிடன் கேள்விகளைக் கேளுங்கள். இது ஏன் உனக்கு அசிங்கமாக தெரிகிறது என வினவுங்கள். அதற்கான ஆதாரங்களை கோரி, அவைகளை சோதனைக்கு உட்படுத்துங்கள். அதன் பிறகு சந்தேகம் உங்கள் முன் அதிர்ச்சியுற்று நிற்பதை காணலாம், சங்கோஜம் கொள்வதை உணரலாம், ஏன் சில சமயம் எதிர்ப்பு தெரிவிப்பதைக் கூட கேட்கலாம். ஆனால் விட்டுக் கொடுத்துவிடாதீர்கள், வாதங்களை முன் வைக்க வற்புறுத்துங்கள். ஒவ்வொரு முறையும் இதைப் போலவே கருத்துடன், பிடிவாதத்துடன் செயல்படுங்கள்: ஒரு நாள் உங்களை அழிப்பதில் இருந்து விலகி  அது உங்களுடைய மிகச் சிறந்த சேவகனாக மாறிவிடும் – உங்களுடைய வாழ்க்கையை கட்டியெழுப்பும் கருவிகளுள் மிகவும் சாமர்த்தியமான ஒன்றாக கூட மாறி விடலாம்.


இவ்வளவு மட்டுமே இன்று என்னால் கூற முடியும், கப்பஸ். ஆனால், இந்த கடிதத்துடன் “ ப்ரேக் ஜெர்மன் லேபர்” பத்திரிக்கையில் வெளிவந்த என்னுடைய சிறு கவிதையையும் சேர்த்து அனுப்புகிறேன். அதில், இன்னும் கூடுதலாக உங்களுடன் வாழ்வையும், மரணத்தையும் குறித்து பேசுகிறேன் மற்றும் அவற்றின் சிறப்பையும், மகிமையையும் சொல்கிறேன்.



உங்களுடைய,

ரெய்னர் மரியா ரில்கே.

No comments: