Thursday, April 11, 2013

முந்திரி காட்டு வாழ்க்கை – உயிர் தண்ணீர் சிறுகதை தொகுப்பு


முந்திரி காடுகளை மையமாக கொண்ட அடித்தள மக்களின் வாழ்க்கையை சொல்லும் கதைகளே கண்மணி குணசேகரனின் உயிர் தண்ணீர் சிறுகதை தொகுப்பு. முதல் தொகுதி அந்த  குடும்பங்களின் பெண்களை மையமாக கொண்டும் மறு பாதி ஆண்களை மையமாக கொண்டும் உருவாக்கப்பட்ட சிறுகதைகளை கொண்டுள்ளது. சாதி அடுக்கிலும், பொருளாதார நிலையிலும் அடித்தளத்தில் உள்ள மனிதர்களின் வாழ்கை அவர்களின் வட்டார வழக்கிலேயே கதைகளாக விரிகின்றன. எனக்கு மிகவும் பிடித்த சில கதைகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

அழுத்தி கொண்டிருக்கும் வறுமை, சீக்கிரத்தில் விட்டு கொடுக்க முடியாத தன்மானம், குடும்ப மானம், இவைகளுக்கு இடையில் மனிதனுக்கே உரிய சிறு ஆசைகளையும், ஏக்கங்களையும் கொண்ட மனது என பெண்களின் வாழ்கை தருணங்கள் முதற் பாதியின் கதைகளாக உள்ளன. 


தன் வீட்டை கூட்டி பெருக்குவதற்கு பூ துடைப்பம் வேண்டும் என தவிக்கிறாள் செல்லியம்மா. ஈக்கல் துடைப்பத்தை உபயோகிக்கையில் பூ துடைப்பத்தை பற்றி கனவு காண்கிறாள். சீவு முள்ளை காட்டில் இருந்து எடுத்து வரும் பிள்ளையும் கள்யாணமாகி போய்விட்டள். எங்கிருந்தோ சீவுமுள்ளை எடுத்து வீட்டில் பத்திரபடுத்தி வைக்கிறாள். ஆசையுடன் அதை அடித்து, தன்னுடைய பழைய புடவையை கிழித்து அதை சுற்றி கட்டி பூ துடைப்பம் செய்து விடுகிறாள். சாணி மொழுகிய தரை காய்ந்ததும் அதை கொண்டு பெருக்க வேண்டும் என காத்திருக்கையில் வெளியிலிருந்து வந்த கணவன் கெட்டியறுக்க காட்டுக்கு கிளம்புமாறு அவசரபடுத்துகிறான். அதே நேரம் வீட்டிற்குள் நுழைந்த பூனை சுவருக்கு மேல் வைக்கப்பட்டிருந்த துடைப்பத்தை கீழே தள்ளி விடுகிறது. அவள் கவனிப்பதற்கு முன்னால் எருமைமாடு ஒன்று பூ துடைப்பத்தை வாயில் எடுத்து அசை போட ஆரம்பிக்கிறது. சாணம் மொழுகிய முற்றத்தையே வெறுமையோடு வார்த்து கொண்டிருக்கையில் அவளை காட்டிற்கு கிளம்புமாறு வெளியிலிருந்து கணவன் கத்துகிறான். ‘சுத்தம்’ என்ற இக்கதை முதற்பாதி தொகுப்பில் உள்ள மற்ற கதைகளின் சாரத்தை சொல்வது போல அமைந்துள்ளது.

நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளில் பொக்கிஷமாக வளர்த்த ஆசைகள், என்றாவது கைகூடும் என்ற எதிர்பார்ப்புகள் பலதும் அந்த கணத்தில் காரணமேயில்லாமல் நசிந்து போய்விடும் அவலம். வாழ்வாதாரத்திற்கான அடுத்த வேலை காத்திருக்கிறது, இழந்ததை பகிரவோ, அதை குறித்து தன்னிரக்கத்தின் கதகதப்பில் அரற்றிக் கொள்ளவோ நேரமில்லாமல் வேலையை பார்க்க வேண்டும் என்ற நிதர்சனம் போன்றவை இந்த கதையை முந்திரி காட்டிலிருந்த விலக்கி மிகவும் பொதுவான வாழ்க்கையை உணர்த்துவதாக மாற்றிவிடுகிறது.

குருதி என்ற கதையில் மாதவிடாய் நாட்களில் ஒரு முறை மின்னல் வெட்டை அருகில் பார்த்து பயந்ததில் இருந்து குமாரிக்குக் அந்த நாட்களில் தாங்க முடியாத வலி ஏற்பட ஆரம்பித்து விட்டது. மாதவிடாய் நாட்கள் நெருங்கும் பொழுது அவளுக்கு மனதில் பதைப்பு தொற்றிக் கொள்ளும். வலி ஒருபுறம், அதை குணப்படுத்தவோ, குறைக்கவோ மருத்துவம் பார்க்க இயலாத குடும்ப நிலை மறுபுறம் என்ற நிலையில் அந்த நாட்களை இயலாமையுடன் சந்தித்தே ஆக வேண்டும் என்பது தான் குமாரியின் முன் இருக்கும் ஒரே வழி. மூன்று பெண் பிள்ளைகள் உள்ள அந்த வீட்டில் அம்மா எப்போதும் சிடுசிடுப்புடன் தான் இருப்பாள். அப்பாவால் நலம் விசாரிப்பதை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். மற்ற இருவருக்கும் அந்த நாட்களில் வேலை பார்க்காமல் இருக்கலாம் என்பதில் சந்தோஷம் ஆனால் குமாரிக்கு தாண்டி செல்ல வேண்டிய வதை நாட்கள் அவை. ஒரு நிலையில் இதற்கு என்ன தான் தீர்வு என்ற கேள்விக்கு அம்மா கல்யாணம் ஆகி மூணு மாசத்துல இந்த பிரச்சனை வராது என தீர்வு சொல்கிறாள். இதில் யாரும் மோசமானவர்கள் அல்ல. ஆனால் அன்றைய நிலையில் தாயாக அவளால் அதை தாண்டி இதுவும் செய்ய இயலாது என்பது தான் யதார்த்தம். அவளை சொல்லியும் குற்றம் இல்லை என்று குமாரி நினைப்பதோடு கதை முடிகிறது.

இரண்டாவது பாதியில் உள்ள கதைகள் அச்சமூகத்தின் ஆண்களை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இழவு வீட்டில் மோளம் அடிக்கும் சின்ன குண்டு, பன்றி வளர்க்கும் செல்வராசு, மருமகள் சேமிப்பை திருடி விற்று வெத்தலை வாங்கி குதப்பும் கலியன், காசிற்காக சுடுகாட்டில் கொடும்பாவிக்கு காவல் இருக்கும் குப்பன் போன்ற கதை மாந்தர்களை குறித்த கதைகள் அவை.

சாதி, வர்க்க அடுக்கில் கீழே இருந்தாலும், வறுமையின் நிழலிலேயே காலத்தை கடத்தினாலும் அந்த  மனிதர்கள் தங்களுடைய தன்மானத்தை இழப்பதில்லை. ‘குலைவு’ என்ற கதையின் செல்வராசும், ‘கொடும்பாவியின்’ குப்பனும் அம்மனிதர்களையே நினைவுபடுத்தினார்கள்.

செல்வராசு பன்றி வளர்ப்பவன். மனைவி எங்கிருந்தோ ஓட்டி வந்த பன்றி இரவு குட்டி போட்டுவிட்டு பசி தாங்காமல் மற்றவரின் கிழங்கு தோட்டத்தை கிண்டி நாசப்படுத்தி விடுகிறது. ஊர் திருவிழாவில் மின்சார விளக்கு பிடித்து கொண்டு நிற்பதற்காக விதிக்கப்பட்ட சாதி தொழிலுக்கு வழக்கத்திற்கு மாறாக இருநூறு ரூபாய் கூலி கேட்டு வாங்கி கொண்டதால் ஊர்காரர்களுக்கு செல்வராசு மேல் கோபம். அதை மனதில் வைத்து கொண்டு பன்றியால் ஏற்பட்ட இழப்புக்கு பஞ்சாயத்தை கூட்டி இருநூறு ரூபாயை அபராதமாக பிடுங்கி விடுகிறார்கள். அதை நினைத்து தன் பன்றியையும் ஓட்டி வந்த மனைவியையும் கரித்து கொட்டிக் கொண்டே இருக்கிறான். அந்த நேரம் பொன்ராசு புதிதாக வாங்கிய பன்றி ஒன்றை சைக்கிளில் கட்டி கொண்டு வருகிறான். ஊரின் நிலைமையையும், பறிபோன காசை பற்றியும் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் சைக்கிள் அசைந்து விழுந்ததில், அதிலிருந்த பன்றி தரையில் கிடந்த கல்லில் தலையும், சைக்கிள் கைப்பிடியில் கழுத்தும் குத்தி பன்றி செத்து விடுகிறது. இரண்டு நாள் கழித்து தான் சந்தையை திறப்பார்கள், அது வரை இறைச்சையை விற்க முடியாது, கொடுத்த பணம் எல்லாம் வீணாகி விட்டது என புலம்பிக் கொண்டே கழுத்தில் கொட்டிக் கொண்டிருக்கும் ரத்தத்துடன் பொன்ராசு சைக்கிளை தள்ளிக் கொண்டு போவதை செல்வராசு பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இரண்டாவது பாதியில் உள்ள கதைகளில் இதுவே எனக்கு மிகவும் பிடித்த கதை. 200 ரூபாய் என்பது செல்வராசுவிற்கு மிகவும் அதிகமான தொகை. அதை இழக்க காரணமான பன்றிய திட்டிக் கொண்டே அதற்கும், அதன் குட்டிகளுக்கும் காவல் இருக்கிறான். அபராதத்திற்கு பதிலாக எங்கிருந்தோ ஓட்டிக் கொண்டு வரப்பட்ட அந்த பன்றிகளை பஞ்சாயத்து மனிதர்களிடம் கறிக்காக கொடுத்திருந்தால் அவனுக்கு அந்த பணம் மிச்சமாகியிருக்கலாம் என்றாலும் அவன் அதை கொடுக்கவில்லை. குட்டி போட்ட பன்றியின் பசியை அவனால் புரிந்து கொள்ளமுடிகிறது, அதை பணத்திற்காக குற்றமாக பார்த்து விட்டு விட முடியவில்லை. திருவிழாவில் சாதிரீதியாக தனக்கு விதிக்கப்பட்ட கட்டுபாட்டை தெரிந்தே மீறுகிறான். அதற்கு காரணம் சொல்வதை போல தன்னை விட அவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல என மனதிற்கும் வேறுவேறு காரணங்களை சொல்லிக் கொண்டேயிருக்கிறான். அதை நீரூபிப்பதை போல தன்னை நம்பியிருக்கும் ஒரு ஜீவனை அவனால் பணத்திற்காக விட்டுக் கொடுக்க முடியவில்லை. பன்றி வளர்ப்பவர்களின் வாழ்க்கையின் பிரச்சனைகள், நிரந்தரமற்ற தன்மை போன்றவற்றை பொன்ராசு வழியாக கதை சொல்லி செல்கிறது.

கொடும்பாவி கதையில் வரும் குப்பன் கூட செல்வராசு போன்றவன் தான். ஊர் திருவிழாவிற்கு போகாமல் ஐம்பது ரூபாவிற்காக ஊர் பிராயசித்தமாக கொடும்பாவியை மயானத்தில் எரித்து அதற்கு காவல் இருக்கிறான். திருவிழாவில் ஊற்றப்படும் கூழை நினைத்து அவனுடைய மனம் ஏங்குகிறது. ஊருக்காக கொடும்பாவி எரிக்கப் போனதை சொல்லி மனைவி நிறைய கூழ் வாங்கி வீட்டில் வைத்திருப்பாள் என நம்பிக்கையோடு உட்கார்ந்திருக்கிறான். ஊர் மனிதர்களின் பார்வையில் வெறும் ஐம்பது ரூபாய்க்காக திருவிழாவிற்கு வராமல் இருக்கும் குப்பனை கண்டு இளக்காரம் தோன்றுகிறது. ஆனால் 50 ரூபாய் கடன் கொடுத்தவன் அதை கேட்டு கேவலப்படுத்தி விட்டதால் அடிபட்ட தன்மானமே குப்பனை அதை செய்ய வைத்தது என யாருக்கும் தெரியாது. கூழை நினைத்து ஏங்கிக் கொண்டே காசு கிடைக்கையில் அதை கடன்காரன் முகத்தில் விட்டு எறிவதைப் போல கனவு கண்டு கொண்டும் மயானத்தில் குப்பன் உட்கார்ந்திருக்கிறான்.

சாவுக்கு மோளம் அடிப்பவனின் ஒரு நாள் வாழ்க்கையை “சின்ன குண்டு” கதை காட்டுகிறது. பாடையை தாங்கும் கழி கிடைத்தால் அதில் வரும் பணத்தை கொண்டு தன் வீட்டு கூரையை சரி செய்யலாம் என சின்ன குண்டு நாள் முழுவது சாவு வீட்டில் யோசித்துக் கொண்டேயிருக்கிறான். மோளம் அடிப்பவர்கள் பல குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு வருடமும் ஒரு ஊரை தங்களுக்குள் குத்தகைக்கு எடுத்துக் கொள்வது, அவர்களுக்குளேயே வசதி பொறுத்து உருவாகியிருக்கும் அதிகார அடுக்கு, கிடைக்கும் பணத்தின் பங்கீட்டில் அதனால் உருவாகும் வேற்றுமைகள், சாவு வீட்டின் காட்சி என விவரணைகளால் இந்த கதை தனித்து நின்றது.

வட்டார வழக்கு வசனங்களில் மட்டுமல்லாது கதை சொல்லலிலும், விவரணைகளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. கதை மாந்தர்களின் குரலிலேயே எல்லா கதைகளும் ஒலிக்கின்றன. எனக்கு புரிந்தவரை இவர்கள் இன்ன சாதியினர் என்று எங்கும் குறிப்பிட்டு சொல்லப்படவில்லை. தன்மானம், சகிப்புதன்மை, கருணை என எல்லோரிடமும் இருக்கும் உன்னதங்கள் சாதி, வர்க்க அடுக்குகளாலும், வறுமையாலும் ஒடுங்கி போன முந்திரி காட்டு மனிதர்களிலும் உறைந்திருப்பதை அவர்களுடைய குரலிலேயே சொல்லும் இந்த கதைகள்  சிறப்பாக உள்ளன.

No comments: