Thursday, December 6, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 8

ஃப்ளாடி, ஸுவீடன்,
ஆகஸ்ட் 12, 1904.

அன்புள்ள கப்பஸ், 
நான் பேசும் விஷயங்கள் உங்களுக்கு எவ்வகையிலும் உதவி புரியாது என்றபோதும், உங்களுடன் இன்னும் சிறிது நேரம் பேச விரும்புகிறேன். உங்களுக்கு உதவக் கூடிய சொற்களை கண்டெடுக்க என்னால் முடியவில்லை. உங்களுக்கு பல துயரங்கள் உள்ளன, உங்களை விலகி சென்றுவிட்ட  பெரும் துயரங்கள். சமீபத்தில் உங்களை கடந்து சென்ற மனத்துயரம் மிகுந்த கடினமாக இருந்ததாக கூறியிருந்தீர்கள். தயவு கூர்ந்து, உங்களிடமே கேட்டுப் பாருங்கள், இத்தகைய பெரும் சோகங்கள் கூட உங்களினூடே கடந்து போய் விட்டன அல்லவா? உங்களுக்குள்ளே பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம்; எங்கோ, உங்கள் இருப்பின் ஆழங்களில் சோகத்துடன் இருந்த சமயங்களில் முக்கியமான மாறுதல்களை நீங்கள் அடைந்திருக்கக்கூடும். சோகங்களிலே மிகவும் அபாயமானவை, பொதுவெளியில் நாம் சுமந்து செல்லும் துயரங்களே. புறத்தில் உள்ள கூச்சலில் மூழ்கடிப்பதற்காக நாம் கொண்டு அலையும் மனத் துயரங்கள், முட்டாள்தனமாகவும், மேம்போக்காகவும் சிகிழ்ச்சையளிக்கப் பட்ட நோயை போன்றவையாகும்; சிறிது காலத்திற்கு பின்வாங்கிக் கொண்டு பிறகு அதிக கொடூரத்துடன் கட்டவிழ்த்து வெளிவரும்; நமக்குளே சேகரம் ஆகி, நம் வாழ்க்கையாகி விடும் – நாம் வாழ இயலா வாழ்க்கை, நிராகரிக்கப் பட்ட, இழக்கப்பட்ட, மரணத்தை கொண்டு சேர்க்கும் வாழ்க்கை. நம் அறிவின் எல்லைகளுக்கு அப்பால் பார்க்க முடிந்தால், நம் முன்னெண்ணங்களின் வெளிக் கட்டுமானங்களைத் தாண்டி அறிய முடிந்தால், துயரங்களை, மகிழ்ச்சியான பொழுதுகளை விட அதிக நம்பிக்கையுடன் தாங்கிக் கொண்டு இருந்திருக்கலாம். ஏனென்றால் துயரத்தின் பொழுதுகளில் தான் நாமறியா ஒன்று நம்முள் நுழைகிறது; நமது உணர்ச்சிகள் , சங்கோஜத்துடன் மௌனமாகின்றன, நம்முள்ளே உள்ள அத்தனையும் பின்வாங்குகின்றன, அமைதி எழுகிறது, புதியதொரு அனுபவம், யாரும் அறிந்திராத அனுபவம், எல்லாவற்றிற்கும் நடுவில் ஒன்றுமே கூறாமல் நிற்கிறது.


நமது துயரங்கள் அனைத்தும் நெருக்கடியின் கணங்கள் என்று எனக்கு தோன்றுகிறது; ஏனென்றால் அந்நியமான இருப்பு ஒன்று நம்முள்ளே நுழைந்து விட்டமையால், நாம் நம்பிய, பழகிப் போன அனைத்தும் அந்த கணத்தில் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டதால், மாற்றத்தின் இடையில் ஒரு கணம் கூட ஸ்திரமாக நிற்க முடியாத நிலையில் நாம் இருப்பதால் - அந்த நேரங்களில் ஸ்தம்பித்துப் போன நமது உணர்ச்சிகளின் துடிப்பைக் கேட்க இயலாமல், முடக்குவாதம் போன்றதொரு நிலையை உணர்கின்றோம். அதனால் தான் துயரங்களும் கடந்து போய் விடுகின்றன: நம்முள் நுழைந்த புதியதொன்று, நம்மோடு இன்னும் ஒன்றாக இணைந்து , இதயத்தின் உள்ளே நுழைந்து, அதன் உள்ளார்ந்த அறைக்குள் சென்றுவிடுகிறது, பிறகு அது அங்கு கூட இருப்பதில்லை – அதற்குள்ளாகவே நமது ரத்த ஓட்டத்தில் கலந்து விட்டது . அது என்னவென்று நாம் அறிவதேயில்லை. ஏதுவுமே நடக்கவில்லை என நம்மையே எளிதில் நம்பவைத்து விடலாம், ஆனால் விருந்தினர் வந்த வீடு மாற்றம் கொள்வதைப் போல நாமும் மாறியிருப்போம். உள்ளே நுழைந்தது என்ன என்று நம்மால் வார்த்தையில் கூற இயலாது, நமக்கு தெரியாமலே கூட இருக்கலாம்; ஆனால் எதிர்காலம் நடந்தேறுவதற்கு முன்னரே நம்முள்ளே இன்று நுழைந்து, மாற்றங்களை அடைவதற்கான அறிகுறிகளை உணர முடியும். அதனால் துயரத்தின் பொழுதுகளில் தனிமையில், விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம்: எதிர்காலம் நமக்குள்ளே நுழையும் நிகழ்வற்ற, அசைவற்ற பொழுதுகளே வாழ்க்கைக்கு மிக அருகாமையில் உள்ளன; அல்லாது, பெரும் ஓசையுடன், தற்செயல்களின் தருணங்களில் வெளியிலிருந்து உள்ளே நுழைவது போல தோன்றும் தருணங்களில் அல்ல. துக்கத்தின் தருணங்களில் நாம் கூடுதல் அமைதியுடனும், பொறுமையிடனும், திறந்த மனதுடனும் இருப்போமேயானால் அதிக ஆழத்துடனும், சாந்தத்துடனும் நம்முள்ளே அந்த இருப்பு நுழையும்; அதை இன்னும் அதிகமாக நமதாக்கிக் கொள்ளலாம். 

பின்னர், அது மற்றவர்களுக்கு நிகழ்கையில் நமது ஆழங்களில் அதை உணர்ந்து கொள்ள முடியும். அது மிகவும் அவசியமானது. அதை நோக்கியே சிறிது சிறிதாக நமது வளர்ச்சி வெளிப்படும் – இது மிகவும் அவசியமானது ஏனென்றால் அவ்வகையில் நாம் அறியாதது எதுவும் நடைபெறாது, நிகழும் கணங்கள் எல்லாம் நமக்குளே வெகுகாலமாக இருந்தவைகளே. ஏற்கனவே மனிதர்கள் பல விஷயங்களைக் குறித்து மறுசிந்தனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்: விதி என்பது வெளியிலிருந்து நமக்குள்ளே வருவது இல்லை, மாறாக நம்முள்ளே இருந்து வெளியே வருவது என்பதையும் படிப்படியாக உணர்ந்து கொள்வார்கள். அது அவர்கள் மிகவும் பழக்கப்படாத ஒன்று என்பதால் அவர்களுக்குள்ளே இருந்து வெளிப்படுவது என்னவென்று உணர்வதில்லை; அவர்களுடைய குழப்பத்தாலும், பயத்தாலும் அதை உணர்ந்த கணத்தில் அது தங்களுக்குள்ளே வெளியேயிருந்து நுழைந்தது என நினைத்துக் கொள்கிறார்கள். அதைப் போன்ற ஒன்று தமக்குள்ளே இருந்ததில்லை என்று சத்தியம் செய்கிறார்கள். நீண்ட காலமாக எப்படி சூரியனின் இயக்கத்தைக் குறித்து மனிதர்களுக்கு தவறான கருத்து இருந்ததோ அதைப்போலவே வரும் காலங்களைக் குறித்தும் அவர்கள் தவறான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். அன்பு கப்பஸ்,எதிர்காலம் ஸ்திரமாக நிற்கிறது, ஆனால் நாம் தான் முடிவற்ற வெளியில் நகருகிறோம்.

நமக்கு அது கடினமற்றதாக எவ்வாறு இருக்க முடியும்?

தனிமையை பற்றிய பேச்சின் தொடர்ச்சியாக – தெள்ளத் தெளிவாக தெரிவது என்னவென்றால் தனிமையை தனியாக பாகுபடுத்தி தேர்ந்தெடுக்கவோ, விலக்கி வைக்கவோ முடியாது. நாம் அனைவரும் தனித்தவர்களே. அது உண்மையில்லை என நம்புவதற்காக நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்ளலாம். அவ்வளவுதான் செய்ய இயலும். ஆனால் நாம் தனிமையானவர்களே என்பதை உணர்ந்து கொள்ளல் இன்னும் எத்தனை மேம்பட்டது; ஆம், இந்த புரிதலில் இருந்து ஆரம்பிப்பது கூட சிறப்பானது. நம் பார்வை பழகிய புள்ளிகளை எல்லாம் அது பிடுங்கிக் கொண்டு போய்விடும், தூரத்தில் இருந்தவை எல்லாம் முடிவில்லா தொலைவில் விலகிப் போய்விடும். ஆகையால் நிச்சயமாக அந்த எண்ணம் நம்மை கொஞ்சம் மூர்ச்சையடையச் செய்யும். ஒரு மனிதனை அவனுடைய அறையிலிருந்து தூக்கி எந்தவொரு முன்னறிவிப்பும், தயார்படுத்துதலும் இல்லாமல் பெரும் மலைத்தொடரின் உச்சியில் கொண்டு நிற்கவைத்தால் அதைப் போன்ற உணர்வைத் தான் அடைவான்: ஒப்பிடமுடியா பாதுகாப்பின்மை, பெயரற்ற இடத்தில் கைவிடப்பட்ட உணர்வு எல்லாம் சேர்ந்து அவனை அழித்து விடும். கீழே விழுந்து கொண்டிருப்பதைப் போலவும், ஆகாயத்தில் பெரும் விசையுடன் எறியப்பட்டதைப் போலவும் அல்லது ஆயிரம் துண்டுகளாக வெடித்து சிதறுவதைப் போலவும் அவன் உணர்வான்: அவன் புலன்களின் நிலையை புரிய வைப்பதற்காக மூளை எத்தனை பிரம்மாண்டமான பொய்யை அவனிடம் சொல்ல வேண்டியிருக்கும். இப்படித் தான் தனிமையை அடையும் மனிதனுக்கும் எல்லா தொலைவுகளும், அளவுகளும் மாறிப் போய்விடும்; இவைகளில் பல மாற்றங்கள் திடீரென ஏற்பட்டுவிடுவதால் – மலையுச்சியில் விடப்பட்ட அந்த மனிதனைப் போல – அசாதாரணமான கற்பனைகளும், புரியாத உணர்வுகளும் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு அவனுள் எழும். 

ஆனால் அவற்றை அனுபவிப்பது நமக்கு மிகவும் அவசியமானது. யதார்த்தத்தை நம்மால் முடிந்த அளவிற்கு அகண்ட மனதுடன் ஒத்துக் கொள்ள வேண்டும், இதுவரை நினைத்துப் பார்த்திராத விஷயங்கள் கூட அந்த பார்வைக்குள்ளே ஒரு சாத்தியமாக இருத்தல் வேண்டும். அது மட்டுமே  இறுதியில் நம்மிடன் கோரப்படும் மனதைரியம் ஆகும்: புரியாத, மிகவும் அசாதாரணமான, விளக்கவே முடியாத வாழ்க்கை அனுபவங்களை எதிர் கொள்ளும் தைரியம். இந்த விஷயத்தில் மனிதர்கள் காட்டிய கோழைத்தனம் வாழ்விற்கு கணக்கிட முடியாத தீங்கை ஏற்படுத்தி விட்டது; “பேய் அனுபவங்கள்”, “ஆவி உலகம்”, மரணம் போன்று நமது வாழ்விற்கு மிகவும் நெருங்கிய தொடர்புள்ள அனுபவங்களை நமது பயத்தால் ஒதுக்கி விட்டோம். அவற்றை புரிந்து கொள்வதற்கான புலன்களின் செயல் திறனையும் படிப்படியாக இழந்து விட்டோம். கடவுளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் புரிந்து கொள்ள முடியாதவைகளின் மேல் கொண்ட பயம் தனிமனிதனின் யதார்த்தத்தை வற்றச் செய்தது மட்டுமல்லாமல்; அது சக மனிதனிடம் உள்ள உறவையும் குறுக்கி விட்டது, முடிவில்லா சாத்தியங்களை உடைய ஆற்றுப் படுகையில் இருந்து எடுத்து கரையிலுள்ள தரிசு நிலத்தில் வைத்ததைப் போல. மனித உறவுகளுக்கு மத்தியில் திரும்பத் திரும்ப ஏற்படும் இந்த சலிப்பிற்கு நமது அலட்சியம் மற்றும் புரியாத அனுபவங்களுக்கு முன்னால் நிற்கையில் அவற்றை நம்மால் எதிர் கொள்ளமுடியாது என்ற கோழைத்தனமும் காரணம் ஆகும். 

ஆனால் எவனொருவன் எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பானோ, எந்தவொரு அனுபவத்தையும் தேவையில்லை என ஒதுக்காமல் இருப்பானோ, அவன் மட்டுமே சக மனிதரிடம் கொண்ட உறவை உயிர்த்துடிப்புள்ள ஒன்றாக பாவித்து அதில் வாழ்வான். அத்தகைய மனிதனின் உள்ளத்தை ஒரு விஸ்தாரமான அறையாக உவமைப் படுத்திப் பார்த்தோமேயானால், மற்ற மனிதர்கள் அவர்களுடைய அறையின் ஒரு மூலையை மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள், ஜன்னலுக்கு அருகே ஒரு இடம், நேர் கோட்டில் சென்று வர ஒரு குறுகிய சிறு பாதை. அவ்வகையில் அவர்களுக்கு அது ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது. ஆனால், இருட்டறையின் சுவர்களைத் தொட்டு அதில் பல உருவங்களை மனதில் கற்பனை செய்து கொண்டு, தங்களுடைய சிறைக் கூடங்களின் பயங்கரத்தை தாண்டிச் செல்லும் போவின் கதைகளில் காட்டப்படும் கைதிகளின் ஊடே தெரியும் மனிதனின் பாதுகாப்பின்மை தான் எத்தனை உக்கிரமானது. நாம் கைதிகள் அல்ல. நம்மை பிடிப்பதற்கான பொறிகளோ, கண்ணிகளோ எங்கும் இல்லை மற்றும் நாம் அச்சம் கொள்வதற்கு எதுவும் இல்லை. நமக்கு மிகவும் இணக்கமான விதத்தில் இந்த வாழ்விற்குள் நாம் வைக்கப்பட்டுள்ளோம் மற்றும் பல ஆயிரம் வருடங்களாக ஏற்பட்டு வரும் ஒத்திசைவின் காரணமாக இந்த வாழ்க்கையை மிகவும் சிறப்பாக பிரதிபலிக்கிறோம்; நாம் ஒன்றும் செய்யாமல் ஸ்திரமாக இருந்தோம் என்றால் நம்மைச் சுற்றி உள்ள எதிலிருந்தும் வேறுபட்டு தெரிய மாட்டோம். 

நமது உலகைக் குறித்து அவநம்பிக்கை கொள்ள தேவையில்லை ஏனென்றால் அது நமக்கு எதிராக செயல்படுவது இல்லை. இங்கு கொடூரங்கள் உள்ளதென்றால் அது நமக்குள்ளே இருக்கும் கொடூரமே; இங்கு படுகுழிகள் உள்ளதென்றால் அந்த படுகுழிகள் நமக்கு சொந்தமானவையே; இங்கு அபாயங்கள் உள்ளதென்றால் அவற்றை நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். கடினமான விஷயங்களின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற கொள்கையின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இன்று மிகவும் அந்நியமாக தெரிபவை எல்லாம் நம்பிக்கைக்குரிய, அந்தரங்கமான அனுபவங்களாக மாறிவிடும். எல்லா மனித இனங்களின் தொடக்கத்தில் உருவான புராண கதைகளில் வரும் கொடூரமான யட்சிகள் இறுதி கணத்தில் அழகான தேவதைகளாக மாறிவிடுவதை எங்ஙனம் மறக்க இயலும்? நமது மனங்களில் குடியிருக்கும் யட்சிகளும், தேவதைகளும் நாம் ஒரு முறையேனும் வீரத்துடனும், அழகுடனும் செயல்படுவதை பார்க்க காத்திருக்கலாம் அல்லவா. நம்மை பயமுறுத்துபவை எல்லாம், ஆழத்தில், நமது அன்பை வேண்டி நிற்பவைகளாக கூட இருக்கலாம்.

ஆகையால், கப்பஸ், நீங்கள் இதுவரை கண்டிராத அளவிற்கு பெரிய துயரத்தை எதிர் கொண்டாலும் அச்சம் கொள்ளலாகாது; நீங்கள் ஆற்றும் செயல்களின் மீதும், உங்கள் கைகளின் மீதும் பதட்டமோ, இருண்மையோ கடந்து சென்றால் பயப்படாதீர்கள். உங்களுக்குள்ளே ஏதோவொன்று நடைபெறுகிறது, வாழ்க்கை உங்களை கை விட்டுவிடவில்லை, உங்களை அதன் கைகளில் ஏந்திக் கொண்டு கீழே சரியாமல் பார்த்துக் கொள்கிறது என நீங்கள் உணர வேண்டும். அமைதியின்மையும், விசனமும், மனத்தளர்ச்சியும் உங்களுக்குளே எதை நிகழ்த்துகின்றன என அறிந்து கொள்வதற்கு முன்பே எதற்காக அவைகளை வாழ்க்கையிலிருந்து பூட்டி வைக்கிறீர்கள்?  இவையெல்லாம் எங்கிருந்து வருகிறது, எங்கு சென்றுகொண்டிருக்கிறது போன்ற கேள்விகளை கொண்டு எதற்காக உங்களையே வருத்திக் கொள்கிறீர்கள்? அதுவும், நீங்கள் நிலைமாற்றத்தின் மத்தியில் இருக்கிறீர்கள் என்று அறிந்து கொண்டு; மற்ற எல்லாவற்றையும் விட மாற்றத்தை வேண்டும் என வரம் கேட்டுக் கொண்டு எதற்காக இப்போது அதில் உங்களை துயரப்படுத்துகிறீர்கள்? 

உங்களுடைய எதிர்வினைகளில் ஏதேனும் கெடுதல் இன்னும்  உண்டென்றால், நான் சொல்வதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்; நோய்நிலை என்பது உயிரினம் தன்னை அந்நியமான ஒன்றிலிருந்து விடுவித்துக் கொள்ளும் வழிவகையாகும்; அது பிணிகளைந்து சுகப்படுவதற்கு அதை நோய்நிலையில் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும். திரு கப்பஸ், உங்களுக்குள்ளே பல மாற்றங்கள் நடைபெறும் இந்த காலங்களில், நோயுற்றவர் போல பொறுமையுடனும், குணமடைபவரை போன்ற நம்பிக்கையுடனும் இருத்தல் வேண்டும். மேலும், உங்களை பராமரித்து கவனித்துக் கொள்ளும் மருத்துவரும் நீங்கள் தான். ஆனால் எல்லா நோய் காலங்களிலும் பல நாட்கள் பொறுமையோடு காத்திருத்தல் அல்லாது ஒரு மருத்துவர் செய்யக் கூடிய காரியம் வேறொன்றுமில்லை. மற்ற எல்லாவற்றை காட்டிலும் அதைத் தான் இப்போது நீங்கள் செய்ய வேண்டும்.

எப்பொழுதும் உங்களையே கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்காதீர்கள். உங்களுக்கு ஏற்படும் அனுபவங்களை வைத்து அவசர முடிவுகளை எடுக்காதீர்கள்; அவைகளை நடை பெற அனுமதியுங்கள். இல்லாவிடில், குற்றவுணர்ச்சியுடன் ( ஒழுக்கம் சார்ந்து) உங்கள் கடந்த காலங்களை எளிதில் காண ஆரம்பித்துவிடுவீர்கள்; இயல்பிலேயே அதற்கும் இன்று நீங்கள் சந்திக்கும் எல்லாவற்றிற்கும் தொடர்புண்டு. பால்ய காலத்தின் பிழைகளும், ஆசைகளும், ஏக்கங்களும் அல்ல  இன்று நீங்கள் ஞாபகத்தில் மீட்டி கண்டனம் செய்பவை. தனிமை மிகுந்த, ஆதரவற்ற குழந்தைப் பருவம் என்பது மிகவும் கடினமானதும், சிக்கலானதும், பல தாக்கங்களுக்கு எளிதில் அடிமையாவதும் ஆகும்; அதே நேரம் உண்மையான வாழ்க்கையிலிருந்து எல்லாவகையிலும் துண்டிக்கப்பட்டதும் கூட; அங்கு ஒரு தீயொழுக்கம் நுழைந்தால் அதை வெறுமனே தீயொழுக்கம் என ஒருவர் குறிப்பிட மாட்டார். எப்படியிருந்தாலும் நாம் எப்போதும் பெயர்களின் மீது கவனம் கொள்ளல் வேண்டும். பல நேரங்களில் வாழ்க்கை, செய்த செயலின் பெயரின் காரணமாக நொறுங்கி விழும்; அதற்கு பின்னே இருக்கும் பெயறற்ற, தனிப்பட்ட செயலால் அல்ல –அது நடை பெற்ற நேரத்தில் மிக அவசியமானதாகவும், வாழ்க்கை மிக இயல்பாக தனக்குள்ளே சேர்த்துக் கொண்ட செயலாகவும் கூட அது இருந்திருக்கலாம். 

வெற்றியை மிகைமதிப்பிடுவதன் காரணத்தால் நீங்கள் செலவிடும் ஆற்றல் பிரம்மாண்டமாக தெரிகிறது; நீங்கள் நினைத்ததைப் போன்று “பெரிய காரியத்தை” எதையும் சாதிக்கவில்லை; இங்கு “பெரிய காரியம்” என்பது முன்பே இங்கு ஒன்று இருந்தது, அதன் மேல் இருந்த பொய்யான தோற்றத்தை நீங்கள் உண்மையான ஒன்றை கொண்டு மாற்றி வைத்தீர்கள். அதுவும் இல்லையென்றிருந்தால் உங்களுடைய வெற்றிக்கு தார்மீக எதிர்வினை என்பதைத் தாண்டி எவ்வித மதிப்பும் இருந்திருக்காது; ஆனால் இன்று அது உங்கள் வாழ்க்கையின் அங்கமாகி விட்டது. கப்பஸ், உங்களுடைய வாழ்க்கையை பல வாழ்த்துக்களுடன் எண்ணிப் பார்க்கிறேன். அந்த வாழ்க்கை  “பிரம்மாண்டமான விஷயங்களை” நோக்கி குழந்தைப் பருவத்தில் எப்படி ஏக்கம் கொண்டது என உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? இன்று அதைவிட பிரம்மாண்டமான, சிறந்த விஷயங்களை நோக்கி ஏக்கம் கொண்டுள்ளதை நான் காண்கிறேன். அதன் காரணமே, அது கடினம் கொள்வதை விடுவதுமில்லை, தொடர்ந்து வளர்ந்து கொண்டிருப்பதை நிறுத்துவதுமில்லை.

உங்களிடம் நான் சொல்ல வேண்டியது ஒன்று உண்டென்றால்: உங்களுக்கு ஆறுதலை அளிக்க முயலும் இந்த மனிதன் அமைதி கூடிய, இந்த வார்த்தைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என நினைத்து விடாதீர்கள். அவன் வாழ்க்கையும் பல உபாதைகளும், துயரங்களும் உள்ளடக்கிக் கொண்டு உங்களுடையதை விட வெகு பின்னால் இருக்கிறது. அங்ஙனம் இல்லையென்றால் அவனால் இந்த சொற்களை கண்டடைந்திருக்க முடியாது.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.

No comments: