Monday, December 10, 2012

இளம் கவிஞனுக்கான கடிதம் - 10 - இறுதி கடிதம்

பாரீஸ்,
கிறுஸ்துமஸிற்கு அடுத்த நாள், 1908

உங்களுடைய அன்பு மிகுந்த கடிதத்தை அடையப் பெற்று மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், கப்பஸ். நீங்கள் சொல்லியிருந்த செய்திகள் யாவும் நற்செய்திகளே. அவற்றை மறுபடியும் மனதில் அசைப் போட்டு பார்க்கையில், அதிலிருந்த உள்ளார்ந்த வெளிப்பாடுகளும், உண்மையும் அதை மறுபடியும் ஒரு நற்செய்தியாகவே மனதில் எழச் செய்கிறது. இதைத் தான் கிறுஸ்துமஸ் அன்று உங்களுக்கு எழுத நினைத்திருந்தேன். ஆனால் என் படைப்புகளில் இந்த குளிர்காலம் முழுவதும் செலவிட்டுக் கொண்டிருந்தமையால், பழம் பெரும் பண்டிகை தினம் வந்ததையே நான் உணரவில்லை. அதனால் இறுதி நேரங்களில் சில்லறை வேலைகள் செய்வதற்கே நேரம் போதவில்லை, எழுதுவதும் சேர்த்து.
ஆனால் கிறுஸ்துமஸ் அன்று உங்களைக் குறித்து பல முறை எண்ணிக் கொண்டிருந்தேன். என் மனதில், வெளியே கோட்டைச் சுவர்களை கிழித்து எறிந்து விடப் போவது போல தென்காற்று வீசிக் கொண்டிருக்கையில், யாருமற்ற மலைகளின் மத்தியில் கோட்டைக்குள்ளே தனிமையில் நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருப்பதை கற்பனை செய்து பார்த்தேன்.
ஒலிகளுக்கும், அசைவுகளுக்கும் தனி அறைகளை உண்டாகும் அந்த அமைதி மிகவும் தீவிரமானதாக இருந்திருக்க கூடும். அதோடு சேர்த்து ஆதி காலம் முதல் தொடர்ந்து வரும் ஒருங்கிசைவின் உள்ளார்ந்த ஸ்வரம் போல ஒலிக்கும் தூரத்து கடலின் ஒலியையும் சேர்த்துக் கொண்டால், உங்களிடமிருந்து இனி எப்போதும் துடைத்தழித்து விட முடியாத அந்த தனிமையை மிகுந்த நம்பிக்கையுடன் உங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுதலை மட்டுமே என்னால் செய்ய இயலும். மூதாதையரின் உதிரம் எப்படி நம்முடைய ரத்தத்துடன் கலந்து இன்னொரு முறை பிரதியெடுக்க முடியாத, தனித்துவமான மனிதர்களாக இந்த வாழ்க்கையில் மாற்றியதோ அதைப் போல அந்த தனிமையும் உங்களுக்குள்ளே பெயரிட முடியாத தாக்கத்தையும், மென்மையான, தீர்க்கமான ஒன்றாக செயல்படும்.
 
ஆமாம்: உங்களுக்கு கிடைத்துள்ள நிலையான, சொல்லிக் கொள்ளக் கூடிய வாழ்க்கையைக் குறித்து எனக்கு மகிழ்ச்சி உண்டு. சுற்றி நிறைய மனிதர்கள் இல்லாத தனிமையான இடத்தில் கிடைத்திருக்கும் - சீருடைகளும், பதவியும், வேலையும்- கூடுதல் தீவிரத்தையும், அவசிய தேவையையும் உருவாக்கி உங்களை விழிப்புடன் வைத்திருக்கும். அது தற்சார்பு கொண்ட எச்சரிக்கையுணர்வை அனுமதிப்பதோடு சேர்த்து அதை மேலும் வளர்க்கவும் செய்யும். நம் மீது தாக்கம் செலுத்தும் சூழ்நிலைகளில் எப்போதும் இருப்போமேயானால் அது மகத்தான விஷயங்களின் முன் நம்மை கொண்டு போய் நிறுத்தும் – அது மட்டுமே நமக்கு போதுமானது.
கலையும் வாழ்வதற்கான ஒரு வழிதான். ஒருவர் வெளியே எப்படி வாழ்ந்தாலும் தம்மை அறியாமலேயே கலைக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ளலாம். உண்மைக்கு அருகாமையில் இருக்கும் தோறும் ஒருவர் கலையின் அருகில் இருக்கிறார். தன்னளவில் கலையுணர்வு குறைந்த செயல்கள் தம்மை எவ்வளவு தான் கலையின் அருகிலிருப்பதாக காட்டிக் கொண்டாலும் அவை யதார்த்தத்தில் கலையின் இருப்பை மறுதலித்து, அழிக்கின்றன – உதாரணமாக, மொத்தமாக  பத்திரிக்கையியல், பெரும்பான்மையான விமர்சனங்கள், முக்கால்வாசி தங்களை இலக்கியம் என பறைசாற்றிக் கொள்பவை போன்றவைகளைச் சொல்லலாம். நீங்கள் அந்த தொழில்கள் எதிலும் போய் மாட்டிக் கொள்ளாமல் – சிறிது மென்மையற்ற யதார்த்தத்தில் – தனிமையுடனும், மனதைரியத்துடனும் இருப்பதைக் குறித்து எனக்கு மகிழ்ச்சி உண்டு. 

புது வருடம் உங்களுக்கு இன்னும் அதில் உறுதுணையும், ஆற்றலையும் அளிக்கட்டும்.

என்றும் உங்களுடைய,
ஆர்.எம்.ரில்கே.

No comments: