Sunday, September 9, 2012

திரை கடல் திரவியம் - சிறுகதை


மதிய உணவு இடைவேளையில் புதிதாய் வேலைக்கு சேர்ந்த நண்பனுடன் திரைப்பட பாடல்களை போலவே ரீமிக்ஸ் பாடல்களை உருவாக்குவதற்கு இசை ஞானம் தேவையில்லை என உணர்ச்சிகரமாக விவாதித்ததை இப்போது நினைக்கையில் கூச்சமாக இருந்தது. மதியம் மூன்று மணியளவில் கம்பெனியில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டு தற்போதைக்கு நாங்கள் வடிவமைத்துக் கொண்டிருந்த எல்லா மின்னணு சாதனங்களையும் நிறுத்தப் போவதாக அறிவித்தார்கள். சுருக்கத்தில், நாளை காலை வேலைக்கு வேண்டுமென்றால் வரலாம் ஆனால் செய்வதற்கு ஓன்றும் இல்லை. அடுத்தது அதிகாரப்பூர்வமாக வேலைக்கு வரவே வேண்டாம் என்று எப்போது அறிவிப்பார்கள் எனத் தெரியவில்லை.

     மொத்தமாக ஆயிரம் சொச்சம் பணியாளர்களும் மாநாட்டுக் கூடத்தில் திரண்டிருக்க கோட், சூட், டை, பளபளக்கும் ஷூ அணிந்த இருவர் மேடை மீது நின்று கொண்டு அதை அறிவித்தார்கள். கீழே நின்றவர்களின் முகங்களை பார்க்க சகிக்கவில்லை. சிலர் தரையை பார்த்துக் கொண்டேயிருந்தார்கள், இரு ஆள் உயரமும் பத்தடி அகலமும் உடைய ஜன்னல் கண்ணாடி வழியே சிலர் தெருவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். வேறு சிலரோ கூட்டத்தின் நடுவே யாருக்கெல்லாமோ அவசரமாக இங்கு நடந்துகொண்டிருப்பதை செல்பேசியில் தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். என் முகத்தை கண்ணாடியில் எப்படி இருக்கிறது எனப் பார்க்கலாமோ என்றும் தோன்றியது.


மேனேஜர், டைரக்டர் என பேதமில்லாமல் கீழே எல்லோரும் நின்று கொண்டிருந்தோம். எங்கள் கம்பெனியை இரு வருடங்களுக்கு முன் வாங்கிய தாய் நிறுவனத்தின் நடுநிலை மேலாளர்கள் மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். போன வாரம் வரை ஈமெய்லிலும், கம்பெனியின் வலைத்தளத்திலும், “நமது எதிர்காலம் சிறப்பாக உள்ளது” என ஓயாது சொல்லிக் கொண்டிருந்தவரும் அந்த மேடையில் நின்று கொண்டிருந்தார். என்ன நினைத்தாரோ, அவர் மட்டும் அணிந்திருந்த கோட்டை கழட்டி விட்டு மேடையிலிருந்து கொஞ்சம் பரிவுடன் பேசினார்.
“உங்களை நாங்கள் கைவிடவில்லை. நீங்கள் உருவாக்கிக் கொண்டிருந்த பொருட்களை மட்டும் நிறுத்திவிட்டோம். அடுத்தது என்ன செய்யப் போகிறோம் என இன்னும் முடிவெடுக்கவில்லை.” அந்த வாக்கியங்களை கோர்த்தால் என்ன சொல்ல வருகிறார் என கொஞ்சமும் விளங்கவில்லை. “சந்தையில் இப்போது வைத்துள்ள நமது மின்னணு பொருட்கள் துரதிர்ஷ்ட வசமாக எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை ஆகவில்லை. அடுத்த கால் ஆண்டில் கடந்த முறை போலவே அறிக்கையில் இழப்பு காட்ட கூடாது என நிர்வாகம் முடிவெடுத்திருப்பதால், பணம் விரயமாகும் திட்டப்பணிகளை உடனடியாக நிறுத்துகிறோம்”

இவர் மூன்று வாரங்களுக்கு முன் இதே திட்டப்பணிகளை அவர்களுடைய அட்சய பாத்திரம், காமதேனு, வற்றா ஜீவநதி என்று கேக், பழரசம் மற்றும் பீர் விளம்பி எல்லா மென்பொருள் வல்லுனர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் சொன்னதாக அங்கு போய் வந்த நண்பன் சொன்னது ஞாபகம் வந்தது.

“நாம் பயணித்த பாதையை கைவிடவில்லை. அதில் இன்னும் எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இலக்கை அடைய வெகு தூரம் உள்ளது. அதுவரை எல்லவற்றையும் நிறுத்திவிட்டு வேண்டுமென்றவர்களை மட்டும் வைத்திருக்கலாம் என முடிவெடுத்துள்ளோம். இதைப் போன்ற நிறுவன மறுகட்டமைப்பில் பணியாளர் குறைப்பு என்பது மிக சகஜமான ஒரு விஷயம்” என்று எதிர்மறை வார்த்தை ஒன்றைக் கூட உபயோகிக்காமல் அவர் பேசியதை கேட்கையில், ஏதோ ஒரு கம்பெனியில் யாரோ சில பேரை வேலையை விட்டு வெளியேற்றப் போகிறார்கள் எனத் தோன்றியது. அவர்கள் பேசிக் கொண்டிருந்த பொழுதே அங்கு உட்காரப் பிடிக்காமல் வெளியே வந்துவிட்டேன். சற்று நேரம் முன்பு உண்ட சாப்பாடு நெஞ்சு வரை எழும்பி வருவது போன்ற உணர்வு ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. அலுவலக அறையில் போய் உட்கார்ந்தால் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும் என தோன்றியது, அதே சமயம் ஏதாவது முக்கியமாக அறிவிப்பு வந்தால் தெரியாமல் போய் விடுமே என்ற பயம் அங்கிருந்து போகவிடாமல் தடுத்தது. நோக்கம் எதுவுமில்லாமல் அந்த கூடத்தின் புல்வெளியில் சுற்றி வந்து கொண்டிருந்தேன். பின் மதியக் காற்று இதமாக இருந்தது. கூடத்தின் வாசலில் நின்றிருந்த்த செர்ரி மரங்கள் இலைகளை உதிர்க்க ஆரம்பித்திருந்தன. செல்பேசியை எடுத்து முன்னமே தெரிந்த கார் இன்சூரன்ஸ் கம்பெனியின் வாடிக்கையாளர் உதவி எண்ணுக்கு கூப்பிட்டேன். அதில் பதிவு செய்ய்யப்பட்ட பெண்ணின் குரலை கேட்டுக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன்.

மூன்று வருடம் முன்பு சான் ப்ரான்ஸிஸ்கோவின் புல்வெளிகளால் வேயப்பட்ட கடலோர மலைத்தொடர்களை விமானத்தின் ஜன்னல் வழியே பார்த்த பரவசமும், இரவு எட்டு மணிவரை அஸ்தமிக்காத சூரியனையும் கண்ட ஆச்சரியமும் இன்றும் நினைவில் உள்ளது. வாரம் நான்கு நாட்கள் மட்டுமே கல்லூரி. அதிலும் மூன்று வகுப்புகள் பதிவு செய்து கொண்டால் போதுமானது. ஆனால் இந்தியாவை போல மனப்பாடம் செய்து பரிட்சை எழுத முடியாது என்பதால் வாரத்தில் ஐந்து நாட்களும் படித்துக் கொண்டே இருப்பது போலிருக்கும். மேலும் ஐந்து பேர் சேர்ந்து தங்கி இருந்ததால் ஒரு நாள் சமையல், பாத்திரம் கழுவுதல், வீடு கூட்டுதல், வாரக் கடைசியில் எல்லோரும் சேர்ந்து வால்மார்ட் போய் சாமான் வாங்குதல் என பொழுது பறந்துவிடும். அரிசி பருப்பு மட்டும் மாநகர ரயில் ஏறி, பேருந்திற்கு மாறி இந்திய கடை ஒன்றிலிருந்து வாங்கி வருவோம். எங்கள் வீட்டை சுற்றி இருந்த வீடுகளில் தோட்டங்களிலும், விடுதி சமையலறைகளிலும், கடைச் சாலைகளிலும் கூலிக்கு வேலை பார்க்கும் மெக்ஸிகர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்தனர். பத்தில் எட்டு மெக்ஸிகர்கள் குண்டாக இருப்பார்கள். அதிலும் குழந்தைகள் மிகச் சிறிய வயது முதலே உருண்டு இருப்பதை பார்த்திருக்கிறேன். எப்போதும் அவர்களின் வீட்டிலிருந்து அலறும் சத்தத்தில் ஸ்பானிஷ் பாடல்கள் கேட்ட வண்ணம் இருக்கும். அவர்களுக்குள் சில சமயம் வாரக் கடைசி பின்னிரவுகளில் தெருவில் சண்டைகள் வருவதுண்டு, கூடவே விசாரிக்க போலீஸ் கார்களும்.

எங்களுடைய வீட்டில் தூக்கம் கெட்டாலோ அல்லது தொலைபேசியில் பேசுவதற்கு இடையூறு வந்தாலோ மட்டுமே சண்டை வரும். வகுப்புகளோடு நாங்கள் கல்லூரியின் கேண்டீன், நூலகம், ஆய்வறை, பதிப்பகம், நிர்வாக அலுவலகங்களில் ஒரு மணிநேரத்திற்கு பத்து முதல் இருபது டாலர் வரை வேலை செய்துவிட்டு விறகு போல உறங்குகையில் மற்றவர் இந்தியாவிற்கோ அல்லது தோழிகளிடமோ வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தால் நிச்சயமாக சண்டை வரும். அதைத் தவிர சில சமயங்களில் பாத்திரம் கழுவுதல், குளிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளுதல், குறட்டை விடுதல் என மிதமான கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு அடங்கி விடுவதுண்டு. வேறொரு நாட்டில் இருக்கையில் வீம்பு பிடித்து சண்டை போட்டு வீட்டை விட்டு கிளம்பினால் அது இரு தரப்பிற்கும் பணச்சுமையை வெகுவாக கூட்டிவிடும் என்ற பகுத்தறிவு எல்லாப் பிரச்சனைகளையும் வாரக் கடைசியில் சினிமா பார்த்தல் என்ற சமரசப் புள்ளியில் நிறுத்தி நீர்க்கச் செய்துவிடும். சில சமயம் செவ்வாய் கிழமையே சினிமாவிற்கு போக வேண்டி வந்ததுண்டு.

படித்து முடித்தால் வேலை வாய்ப்பெல்லாம் நன்றாக உள்ளது என நினைத்திருக்கையில் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளின் நிர்வாகிகள் மக்கள் பணத்தை வைத்து உலக சந்தையில் சூதாடிப் பார்க்கலாம் என முடிவெடுத்திருந்தார்கள் என தெரிந்திருக்கவில்லை. அதன் பாதிப்பு குறையும் வரை ப்ரொபஸர்களின் கை காலகளில் விழுந்து கடைசி செமஸ்டர் ப்ராஜக்டை இரண்டு செமெஸ்டர்களாக நீட்டித்து, பகுதி நேரமாக ஒரு கம்பெனியில் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து ‘அனுபவம்’ பெற்று எட்டு மாதம் முன்பு இந்த கம்பெனியில் சேர்வதற்குள் திட்டமிட்டதை விட ஒன்றரை வருடம் அதிகமாகி விட்டது.

இவையெல்லாம் நிலையற்ற துண்டு காட்சிகளாக மனதில் ஓடிக் கொண்டிருக்க மெதுவாக கூடத்திற்குள் மறுபடியும் நுழைந்தேன். இப்போது, எல்லா கலந்துரையாடல்களைப் போல கேள்வி பதில் பகுதி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதன் சாராம்சம் – நிர்வாகிகளாகிய அவர்கள் இன்னும் இரண்டு அல்லது நான்கு வாரங்களுக்குள் என்ன செய்ய வேண்டும் என முடிவெடுத்து எங்களிடம் சொல்வார்கள். அது வரை நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஆனால் பலருக்கு பணி நீக்கம் என்பது உறுதி. எல்லோரும் அவரவர் வேலை அறைகளுக்கு திரும்ப ஆரம்பித்தார்கள். நான் நண்பர்களுடன் ஆய்வறைக்கு சென்று கொஞ்ச நேரம் புலம்பிக் கொண்டியோருந்தேன். பிறகு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள ஆர்வமாக ஒவ்வொரு மாடியின் சந்திப்பு அறைகளில் எட்டிப் பார்த்துக் கொண்டே சுற்றி வந்தோம். இரண்டாவது மாடியில் ஐந்து, பத்து ஆட்களாக சிறு குழுக்களாக பிரிந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
“பாடிஸ்டாவை பார்த்து விட்டு வரலாமா?”, என்று தேஜஸ்வி கேட்டான்.

“அவருக்கென்ன புதுசா தெரியப் போகுது?”

“ரொம்ப நாளா இங்க இருக்காரு. இதுக்கு முன்னடி இப்படி நடந்திருக்கானு கேட்டு பாக்கலாம்.”

“ம்ம்ம்..சரி..எப்படினாலும் இன்னைக்கு வேலைனு எதுவும் இல்ல…”

பாடிஸ்டா மென்பொருள் தர மேம்பாட்டுத் துறையின் பொறியியல் வல்லுனர். அவருடைய அறை முதல் மாடியில் ஜன்னலோரத்தில் இருந்தது. கணினியின் மேலே ப்ளாஸ்டிக்கால் செய்யப்பட்ட வாழையிலையை நிறுத்தி வைத்திருப்பார். மேஜைக்கு அருகில் ஒரு பழைய தையல் மெஷின் இருக்கும் அதன் பின்னால் பழங்காலத்தில் உபயோகப்படுத்திய கறுப்பு நிற தொலைபேசியும் இருக்கும். ஸ்பானிஷ் பேசுபவர்கள் எல்லாம் மெக்சிகோவிலிருந்து வருபவர்கள் என்ற எண்ணத்தை மாற்றியவர். எல்-சால்வடோர் என்பது நகரம் அல்ல, அது ஒரு தனி நாடு என்றும் அப்போதுதான் தெரிந்து கொண்டேன். அவருக்கு வயது நாற்பதிலிருந்து நாற்பத்தி ஐந்திற்குள் இருக்கலாம். அவர் பேச்சில் அதை எங்களிடம் எப்போதுமே காட்டியதில்லை. பத்தாண்டுகள் முன்னதாக பிறந்ததை தான் முயன்று நடத்திய சாதனையாக காட்டிக் கொள்ளும் சக தேசத்தவர் மத்தியில் பாடிஸ்டாவை எங்களுக்கு இயற்கையாகவே பிடித்துப் போனது.

“இப்போ என்ன ஆயிரும்? ஒண்ணுமே ஆகாது!” என்ற முகபாவனையில் தான் பாடிஸ்டாவை இதுவரை பார்த்திருக்கிறேன். உணர்ச்சிகரமாக பேசும் பொழுது ஆங்கிலத்திற்கிடையில் ஒன்றிரண்டு ஸ்பானிஷ் வார்த்தைகள் விழுவதுண்டு. அதை கேட்கையில் சிரிப்பு வரும் ஏனென்றால் அவை பச்சை கெட்ட வார்த்தையாகத் தான் இருக்கும் என்பது நிச்சயம். பாடிஸ்டா அமெரிக்கா வந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. முதலில் அமெரிக்க கப்பற்படையில் மாலுமியாக பணி செய்துவிட்டு ஐந்தாண்டுகள் கழித்து மின்னணு இயந்திரங்கள் தயாரிக்கும் கம்பெனிகளில் வேலை செய்து வந்துள்ளார். திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உண்டு. நான்கு மாதம் முன்பு தான் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார். அன்று எங்களிடம் வந்து தான் மறுபடியும் பிரம்மசாரி ஆகிவிட்டதால் பார்களில் போய் யாரவது கிடைப்பார்களா என தேட போவதாக நக்கலடித்துக் கொண்டிருந்தார். பிறகொரு நாள் பேசும் போது, அந்த விவாகரத்தில் நீதிமன்றம் அவருடைய மனைவிக்கு மாதம் 2500 டாலர் உதவித் தொகை வழங்குமாறு தீர்ப்பளித்ததில் மிகுந்த மனவருத்தம் உண்டு என்று சொன்னார்.

நாங்கள் எதிர்பார்த்தது போலவே பாடிஸ்டா அவருடைய வாழையிலை குடை அறையில் இல்லை. வீட்டிற்கு போயிருப்பார் என பேசிக்கொண்டோம். முதல் மாடியிலும் சிறு குழுக்களாக பலர் நின்று கொண்டிருந்தனர். ஏன் இப்படி நடந்தது, இனி என்ன நடக்கும் என்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு குழுவிலும் ஒரு கதை முளைத்திருந்தது. துப்பக்கியால் இருட்டரையில் சுட்டுக் கொண்டேயிருந்தால் உருவாகும் ஒளிக் கீற்றல்கள் போல கதைகள் குறுக்கும் நெடுக்குமாக சிதறிக் கிடந்தன. இந்தியர்களில் சிலர் தனக்கு பிரச்சனை ஒன்றுமில்லை, தேவைப்பட்டால் நாளைக்கே திரும்பி இந்தியாவிற்கு போய் ஒரு வேலை தேடி கொள்வேன் என்று வீராவேசம் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் இந்த வேலை இருக்கும் போதே வேறு ஒப்பந்த நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு இதைவிட நல்ல வேலை கிடைக்குமா என விசாரித்து வருபவர்கள். இந்த அறிவிப்பால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானவர்கள் தற்காலிக விசாவுடன் வேலை செய்பவர்கள் தான் – என்னையும் சேர்த்து. இங்கு நிரந்தரமாக குடியுரிமை பெற்ற எல்லா நாட்டவரும் ஆரம்பகட்ட அதிர்ச்சிக்கு பிறகு சமாதானமடைந்து விட்டனர். இங்கிருக்கும் சட்டப்படி ஒரு நிறுவனம் செலவை குறைப்பதற்காக ஒரு பணியாளரை வேலையிலிருந்து நீக்கினால் அவருக்கு இரண்டு அல்லது மூன்று மாத சம்பளத்தை கொடுத்து தான் அனுப்பவேண்டும். அதனால் இங்கேயே பிறந்த அமெரிக்க மற்றும் குடிமை உரிமை பெற்ற ஐரோப்பியர்கள் சிலரும் கிடைக்கப் போகும் பெரும் தொகையில் எங்கெல்லாம் பிரயாணம் செய்யலாம் என பேசிக்கொண்டிருந்தனர்.

இரண்டாவது மாடியில் பாடிஸ்டாவின் உரத்த குரல் கேட்டு ஏறிச் சென்றோம். எங்களை பார்த்தவுடன் சிரித்துக் கொண்டே வந்தார்.
“என்ன…நல்ல வெச்சு ஏத்துனாங்களா?”
எங்களை அறியாமல் சிரித்து விட்டோம்.
“இத மாதிரி முன்னாடி நடந்திருக்க பாடிஸ்டா?”
“இரண்டு மூணு தடவை தவணை முறைல நடந்திருக்கு, ஆனா இந்த மாதிரி தடாலடியா இது தான் முதல் தடவை..”
தேஜஸ்வி, “எங்களுக்கும் அதுதான் ஆச்சரியமா இருக்கு, நம்பவே முடியல. ஒரு முன்னறிவிப்பு கூட இல்லையே.”
“அது நிர்வாகிக்கிற கம்பெனியை பொறுத்து இருக்கு. இவனுங்க ஸ்டைல் இப்படி தான் போல…”
“ம்ம்ம்..”
“சில பேரோட மனைவி கொஞ்சம் கொஞ்சமா பர்ஸ்ல இருந்து வாழ்கை முழுவதும் திருடுவாங்க. மத்தவங்க மொத்தமா விவாகரத்து செய்திட்டு, மாசம் 2500 டாலர் வேணும்னு புடுங்கிருவாங்க. அத மாதிரிதான் இவனுங்களும்..ஹோதேர்

மறுபடியும் சிரித்துக் கொண்டிருந்தோம்.
“எனக்கு பிரச்சனையில்லை. வேலை போயிருச்சுன்னா கோர்ட்ட்ல போய் இதையே காரணம் சொல்லி மாசம் 2500 டாலர் குடுக்க முடியாதுனு தடை வாங்கிருவேன்”

“என்னயிருந்தாலும் அடுத்த வேலை தேடித் தானே ஆகணும் பாடிஸ்டா”
“நான் ஸால்வடோருக்கு திரும்பி போயிருவேன். கொஞ்ச நாளாவே அந்த யோசனைல தான் இருக்கேன்”

“நீங்களுமா? உங்களுக்கு தான் விசா பிரச்சனை ஒண்ணும் இல்லையே.”

“அதெல்லாம் இல்லை. ஆனா எல் ஸல்வடோர்ல ஒரு நல்ல காபரே டான்ஸ் க்ளப் தொடங்கணும்னு ஆசை இருக்கு”

நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தோம். பாடிஸ்டா தீவிரமான யோசனையில் தொடர்ந்தார், “இப்ப ஸால்வடோர்ல நல்ல பணப் புழக்கம். எல்லாம் ஏற்றுமதி இறக்குமதி பாதைக்கு நடுவுல இருக்குறதுனால தான். எங்கே பாத்தாலும் பார், டான்ஸ் க்ளப்னு வந்திருச்சு. என் மருமகன், சின்ன பையன் மூணு செல்போன் வச்சிருக்கான். இது தான் சரியான நேரம், போய் ஆரம்பிச்சிரணும்.
“உங்க இஷ்டம் பாடிஸ்டா. அப்படினா மூணு மாசம் மொத்த சம்பளத்த இப்போவே எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா?”

“மூணு மாசம் சம்பளம்லாம் எவன் தருவான்? ஒருத்தனும் தர மாட்டான்.”

“இல்ல..கார்பரேட் சட்டமெல்லாம் இருக்கு. அவங்களே நம்மள வேலைலயிருந்து…”

பாடிஸ்டா இடைமறித்து,” அதெல்லாம் சட்டம் இருக்கு. ஆனா தரமாட்டங்க. வேண்டி வராதுனு வச்சிக்கோ.”

புரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
பாடிஸ்டா தொடர்ந்து, “இதெல்லாம் குறைஞ்ச செலவில நடத்தி முடிக்குறதுக்கு தானே இன்னிக்கு வந்தவங்க எல்லாம் வேலை பாக்குறாங்க. வேலைல இருந்து எடுப்போம்னு சொல்லிட்டாங்க. ஆனால் எப்போ, எவ்வளவு பேரனு சொல்லாம போயிடாங்க இல்லையா”

“அவங்க இன்னும் முடிவு பண்ணலனு சொன்னாங்க”

“முடிவெல்லாம் நம்மள ஆளுரவன் எப்பவோ எடுத்துட்டான். இஹோ-தே-பூத்தா, நம்ம கிட்ட சொல்லல. எவ்வளவு பாத்திருக்கேன் இத மாதிரி. இன்னும் ஒரு மாசம் வரைக்கும் புதுசா எதுவும் சொல்ல மாட்டாங்க. அங்கேயும் இல்லாம இங்கேயுமில்லாம உங்கள விட்டுருவாங்க. என்ன நடக்கும்னு புரியாம ஒவ்வொரு ஆளா வேற வேலைய தேடிக்கிட்டு ராஜினாமா குடுத்துருவீங்க.”

“ம்ம்ம்ம்…”

“முக்கியமா உங்கள மாதிரி தற்காலிக விசால உள்ளவங்கதான் ரொம்ப பயந்துகிட்டு சீக்கிரம் கிளம்பிருவாங்க. நீங்களே ராஜினாம செஞ்சா மூணு மாசம் சம்பளம் தர வேண்டாம்ல. அதெல்லாம் சேர்த்து அடுத்த காலாண்டு நிதியறிக்கைல லாபமா வந்திரும். நல்லபடியா எல்லாரையும் கழட்டி விட்டா வந்தவங்களுக்கு அதுல போனஸ் கூட கிடைக்கும்.”

“நம்பவே முடியல பாடிஸ்டா.”

“இதுவே நம்ப முடியலையா. மொத்தமா எல்லாரும் போகாம இருக்க முக்கியமான ஆட்களுக்கு எல்லாம் வேலைய விடாம இருக்குறதுக்கு இன்னும் ஒரு வாரத்துக்குள்ள ரகசியமா போனஸ் வேற குடுப்பாங்க. அது தெரியும உங்களுக்கு?”

நாங்கள் வாயை பிளந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
“எல்லாத்துக்கும் ஒரே மாதிரி ஏத்துனாங்கனு நினைச்சீங்களா? ஹா..ஹா..ஹா..”

பாடிஸ்டாவிடம் பேச இன்னும் இருவர் வந்து நின்றனர். அவர் நகருவதற்கு முன் எங்களிடம், “ரொம்ப யோசிக்காம, இன்னைக்காவது சீக்கிரம் வீட்டுக்கு கிளம்புங்க” என்றார்.

வேறு ஏதாவது அறிக்கை வருமா என்ற எதிர்பார்ப்புடன் அங்குமிங்கும் சிறிது நேரம் சுற்றிக் கொண்டிருந்தோம். ஒரு மாறுதலுக்காக எட்டு டாலர் கொடுத்து பாட்மின்டன் விளையாடிவிட்டு செல்லலாம் என தேஜஸ்வி கூப்பிட்ட பொழுது அது ஒரு பெரிய தொகையாக இன்று தோன்றியது. விருப்பமில்லை என மறுத்துவிட்டு வீட்டிற்கு காரை கிளப்பினேன். என்ன நடந்தது, எப்படி நடந்தது, என்ன செய்ய வேண்டும் என்று கேள்விகள் கேட்டு, பதில் சொல்லி, எதிர் கேள்வி கேட்டு என காரை ஓட்டிய ஞாபகமே இல்லை. வீட்டின் அருகில் வந்த போது நினைவு திரும்பியது. மாலை ஐந்து மணிக்கே வீட்டிற்குள் போக மனத்தடை தோன்றியதால், அரை மணி நேர தூரத்தில் இருந்த காபி கடையில் போய் வண்டியை நிறுத்தினேன். மூன்று டாலருக்கு காபி வாங்கி இரண்டு பாக்கெட் சீனி சேர்த்து ஒரு மூலையில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். இந்த கடை இரவு ஒரு மணிவரை நல்ல கூட்டத்துடன் திறந்திருக்கும். அதுவரை இந்த காபியை வாங்கிய காரணத்திற்காக அங்கேயே நானும் உட்கார்ந்திருக்கலாம். அதைப்போல உட்கார்ந்திருக்கும் மனிதர்களை அடிக்கடி நான் பார்த்தும் இருக்கிறேன். மடிக்கணிணியை திறந்து சேமித்து வைத்திருந்த திரைப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன். சீக்கிரமே ஆர்வம் தாளாமல் இணையத்தில் எங்களுடைய கம்பெனியின் இந்த அறிவிப்பைப் பற்றி ஏதாவது புதிதாக செய்தி வந்திருக்கிறதா எனத் தேடினேன். கிடைத்ததெல்லாம் மிகவும் மோசமான கருத்துகளும், கணிப்புகளும் தான். நாங்கள் அறிந்தவைகளை விட பல மடங்கு நம்ப முடியாத கணிப்புகளை எழுதித் தள்ளியிருந்தார்கள். அதில் ஒன்று கூட நல்ல செய்தி இல்லை. எதைச் செய்தாலும் மனம் சதா மாதச் செலவை கணக்கிட்டுக் கொண்டேயிருந்தது. போன வாரம் பார்த்த திரைப்படம், தனியாக வாடகைக்கு எடுத்திருக்கும் வீடு, வாரம் மூன்று முறை ஹோட்டல் சாப்பாடு என செலவழித்ததெல்லாம் என்னை குற்றப்படுத்திக் கொண்டிருந்தது. குடித்து முடித்த கொஞ்ச நேரத்தில் அந்த காபி செலவும் அவைகளுடன் சேர்ந்து கொண்டது.

வெற்று யோசனைகளின் அலைவை தடுக்க முடியாமல் கடையின் வெளியே வந்து நின்றேன். மறுபடியும் மாலைக் காற்று முகத்திலடித்தது சுகமாக இருந்தது. கொஞ்ச நேரம் அங்குமிங்கும் சுற்றிவிட்டு ஏழு மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். வராந்தாவில் பையை வீசிவிட்டு வழக்கத்தை விட அதிக நேரமெடுத்து குளித்தேன். குளித்து முடித்த கால் மணி நேரம் வரை மனதில் இருந்த யோசனை எல்லாம் ஆவியாகி போய்விட்டது போலிருந்தது. பிறகு மெதுவாக எறும்புகள் போல ஒன்றிரண்டாக அவை மொய்க்க ஆரம்பித்தன. காணாமல் போன அந்த கால் மணி நேரத்திற்கும் சேர்த்து உக்கிரமாக மனதை ஆக்கிரமித்தன. வேறு இடங்களில் வேலை செய்யும் நண்பர்களின் தொலைபேசி அழைப்பு வந்ததை கண்டு மனம் கடும் எரிச்சலடந்து அதை அணைத்து வைத்தேன். ஒரு பழத்தை சாப்பிட்டு விட்டு படுக்கையில் மடிக்கணினியுடன் விளக்கை அணைத்துவிட்டு உட்கார்ந்தேன். அலுவலக ஈமெயிலை திறந்து இன்று வரை நான் அனுப்பிய, எனக்கு வந்த கடிதங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அவை அத்தனையும் வெறும் நேர விரயம் போலிருந்தது.

“அதை செய்தாகிவிட்டதா?”, “இதைச் செய்து விட்டேன்”, “அடுத்த டார்க்கெட் இது தான். ரொம்ப முக்கியம்!”, “வாரக் கடைசியில் வந்து வேலை செய்தேன்”, “ஞாயிறு வந்து செய்ய முடியுமா?”, “உன் வேலை டைரக்டருக்கு பிடித்திருக்கிறது”, “நன்றி.”, “இப்படியே போனால் இங்கேயே உனக்கு நல்ல எதிர்காலம்”, ”மிக்க நன்றி,” “இன்னொரு முறை அவனிடம் கலந்தாலோசித்து முடிவெடு”, “அடுத்த ப்ராஜெக்ட் ரொம்ப முக்கியம், காலையில் சீக்கிரம் வா பேசிக்கலாம்”, “கட்டாயமாக. ஏழரைக்கு வந்து விடவா?” என்று ஒன்றுமில்லாமல் போவதற்காக ஆயிரம் வார்த்தைகளில் அலங்காரம் செய்த கடிதங்களை படிக்கையில் மனதில் இயலாமை அப்பிக் கொண்டது. இருந்தும் அதில் திளைப்பதில் ஒரு நிம்மதி கிடைப்பது போல இன்னும் வெறித்தனமாக வாசித்துக் கொண்டிருந்தேன். இறுதியில் இந்த வேலையின் முதல் நாள் கடிதங்களுக்கு வந்து நிறுத்துகையில் மனம் துவண்டு கிடந்தது. எவ்வளவு நேரம் போனது எனத் தெரியவில்லை. இருட்டில் கணினியின் திரையை பார்த்துக் கொண்டேயிருந்ததில் தலை வலிக்க ஆரம்பித்தது. எழுந்து போய் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க முடியாத அளவிற்கு சலிப்பு ஏறியிருந்தது.

     அப்படியே படுத்துக் கொண்டேன். பக்கத்து வீட்டு படுக்கையறையிலிருந்து ஒரு பெண் சிரிக்கும் சத்தமும் கூடவே குழந்தை அழும் ஓசையும் லேசாக கேட்டது. கடிகாரத்தின் பென்டுலம் ஆடி நிற்பது போல் மனம் அடங்க எத்தனை நேரம் எடுத்தது என நினைவில்லை. தூக்கத்தில் தொலைந்து கொண்டிருந்த நினைவில் கடைசியாக பதிவானது கீழ் வீட்டுக்காரர் காரை நிறுத்தும் ஓசை. அவரும் என்னைப் போல ஒரு கம்பெனியில் தான் வேலைச் செய்கிறார். அப்படியென்றால் அப்போது மணி பதினொன்று. நாளை இன்றைவிட மோசமாக இருந்தாலும், இன்று போல் இருக்காது என்று நினைத்துக் கொண்டிருந்த போது தூங்கிப் போன ஞாபகம்.. 

பின்குறிப்பு:
அந்த கூடத்தில் நின்றவர்களில் சொற்ப எண்ணிக்கை தவிர மற்ற எல்லோரும் வேலை இழந்தோம். இன்னொரு வேலையில் நானும் தேஜஸ்வியும் சேர்ந்தோம். யாருமே இந்தியாவிற்கு திரும்பிச் செல்லவில்லை.
பாடிஸ்டா காபரே கனவுகளுடன் அதே கம்பெனியில் இன்னும் வேலையில் தொடர்கிறார்.

1 comment:

Anonymous said...

Nice! You have captured the feelings of a layoff very well.