Saturday, February 27, 2010

காபி கடை

ஒரு அமெரிக்க மழை நாள் மாலை நேரம் காபி கடையில் உட்கார்ந்திருந்தேன்.
ஆள் நடமாட்டம் அதிகம். அம்புகளை போல காதிற்குள் குத்தி இறங்கியது சுற்றுப்புற பேச்சு சத்தம்.
"என்னிடம் அப்படி பேசிட்டான் அந்த 'அவனுக்கு' பொறந்தவன்...", டீ ஷர்ட், ஜீன்ஸ், முட்டி வரை பூட்ஸ் அணிந்து மிக நவநாகரிகமாக உட்கார்ந்திருந்த வலது மேஜை பெண், தொப்பி போட்டிருந்த இன்னொரு பெண்ணிடம்.

"அப்படியா நினைக்குற??? எனக்கென்னவோ நாளை மறுநாள் வரை காத்திருக்கலாம்னு தோணுது. தேவையானது கிடைச்சாச்சு. அப்போ ஒண்ணு பண்ணலாம். என்னது??? ஹா ஹா ஹா...." மூன்று ஃபைல்களுடன் ஒரு வெள்ளெழுத்து கண்ணாடி செல்போனில்.

"நிறைய காசு பார்த்தேன், முக்கால்வாசி தண்ணிலயே செலவு செய்திட்டேன், ஆனா ஜாலியா இருந்துச்சு..." பின் மேஜை மாணவன்.
இதற்கிடையில் ஒலிபெருக்கியில் 'ஜாஸ்' இசை வேறு.


"ட்ரீங் ட்ரீங்", இடது மேஜைக்கு, "யெஸ் எனக்குத்தான், ஹாய்! நான் இப்போ வீட்டுல தான் இருக்கேன், ஆமா". நான் ஒரு முறை சுற்றி பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன், அவன் தான் பொய் சொல்கிறான் என்று.

சிரித்துக் கொண்டே 40களில் இருவர் கண்ணாடி கதவை திறந்து கை குலுக்கிக் கொண்டே,
"எப்படி இருக்கே?"
"ஃபைன், என்ன சாப்பிடுறீங்க?",
"ஒண்ணும் வேண்டாம், ஏன்னா இன்னிக்கு .....", இன்னொரு கதவு வழி வெளியேறினர்.

கண்ணாடி சுவருக்கு அந்த பக்கம் மூன்று பேர் உதட்டில் சிகரெட்டுடன், கறுப்பு ஜீன்ஸ், கறுப்பு டீ ஷர்ட், அதன் மேல் வெள்ளையும் கறுப்புமாக ஒரு கோட், தொப்பி பின்பக்கமாக பார்த்து, புகையை விட்டுக் கொண்டே.."ஓந்த்ரஸ் தே..எலெவினொறெ மார்ஸினெஸ்...."
ஊட்டியில் காலை பனியில் பேசுவதை பார்ப்பது போல் இருந்தது.

பக்கவாட்டில் ஒரு ஜப்பானிய பெண் ஒரு காபி ஒரு கேக்குடன் வந்து உட்கார்ந்து தோளுக்கும் காதிற்கும் இடுக்கில் செல்போனை சொருகி, "ங்யா...பசாசோபோங் சோமோ ககாயாயா ஊமாகா சீன் தாமாயா...", என்று பேசிக்கொண்டே கேக்கை 'இன்றே கடைசி' என்பதை போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

நேராக கடைசி மேஜையில் மொத்தம் மூன்று பேர், அதில் ஒரு ஆணும் பெண்ணும் "கிக்கீ...கிக்கீ" என்று சிரித்து பேசிக்கொண்டேயிருக்கிறார்கள், மீதம் உள்ள ஆஃபிரிக்க பெண் கையில் செல்போனை சுற்றிக் கொண்டே, ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் "கிக்கீ" ஜோதியில் தானும் சேர்ந்து விடலாம் என அவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

காபி வாங்கும் இடத்தில் உள்ள ஒரு குண்டான பெண் காதில் பொருத்திய சிறு மைக்கில், "எங்கள் கடைக்கு வந்ததற்க்கு நன்றி, மீண்டும் வாருங்கள்" என சுவருக்கு அப்பால் வாகனத்துக்கு உள்ளிருந்து ஆர்டர் கொடுத்த முகமில்லா குரலுக்கு அன்பை தெரிவித்துக் கொண்டே, காபி கலக்கும் உயரமான பையனிடம்,
"ஏய் சனிக்கிழமை என்ன பண்ண போற?",
"ப்ரண்ட் கூட சும்மா சுத்திட்டு நைட்டு பப்க்கு போறேன். நீ??"
"நானா?", கல்லாவில் உள்ள கண்ணாடி போட்ட பெண், "தெரியல! காலைல எழுந்திருக்கணும், அப்புறமா தெரியல.."
குண்டு பெண், "மொத்தம் 10 டாலர். எங்கள் கடைக்கு வந்ததற்க்கு நன்றி, மீண்டும் வாருங்கள். ஏய் சனிக்கிழமை என்ன பண்ண போற?",
வேண்டாமென்று கவனத்தை திருப்பிக் கொண்டேன்.

ஊட்டி புகை பேச்சு கூட்டம் ஏழு ஆகியிருந்தது. பொறுக்கி தின்ன வந்த காகங்களை காணவில்லை, பயந்திருக்கும்.

மற்றவரிடம் பேச இஷ்டம் இல்லாதவர்களுக்கு கண்ணாடி போட்ட தனியறை. மடிக்கணினியை திறந்து 'டெலிபதி' மூலம் அதை மூட முடியுமா என உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
'வீட்டில்' சாப்பிட்டுக் கொண்டிருந்த இடது மேஜை ஜோடி பைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். ஏதாவது காபி கடைக்கு போவார்கள் போல!

நேர் எதிரில் கன்னடத்தில், "cisco சரி இல்லை", கூட இருந்த மைசூர் வாசி, "ஆமா! கம்பெனியா நடத்துராங்க! பிச்சக்கார பசங்க! வால்மார்ட் போகணும், நீ எப்பவாவது போகும்போது சொல்லு, ஒரே கார்ல போகலாம்",..."பரவாயில்ல வெய்ட் பண்ணுறேன்.."

ஒரு பெண், பெரிய பெட்டி, மூன்று சட்டைகள் ஒன்றின் மேல் ஒன்று, ஏறத்தாழ 10 கிழிந்து அழுக்கடைந்த புத்தகங்கள் கூடவே குளிக்காமல் இருப்பதனால் வரும் விரும்பத்தகாத நாற்றம், சமைக்காத ரெடிமெட் சேமியா போன்ற தலை முடி, மலிவான காபியுடன், "எவனுக்கும் அறிவில்லை...நான் தான் சொல்றேன்ல கேட்டா என்ன? இதுக்கில்லாம் நான் வேணுமா? என்னை பத்தி தெரியாது உனக்கு...பொறுத்துக்கிட்டே இருக்க மாட்டேன். நான் கேட்டேன்னா உன் முகத்தை 'அங்கே' கொண்டு போய் வைப்பியா?" என்று கத்திக் கொண்டு இரண்டு மேஜை தள்ளி உட்கார்ந்தாள். பக்கத்து நாற்காலியில் அவள் பெட்டி மட்டும் இருந்தது.
கடையின் ஒட்டு மொத்த பேச்சலையில் அது பெரிதாக வித்தியாசப்படவில்லை.

"எனக்கு அந்த ஸ்டிக்கர் குடுடா",
"போடீ நான் தர மாட்டேன்",
"அப்போ உன் சைக்கிள் நான் தான் ஓட்டுவேன்",
"அம்மா இவளை பாரு.."
"ரெண்டு பேரும் அவளை போல கொஞ்சம் பேசாம இருங்க"
"எனக்கு இன்னொரு ஜூஸ் வேணும்.."
"இவங்கள மாதிரி இருக்கணும், ஒரு ஜூஸ் தான்"
"அவங்கள மாதிரியா?? இப்பொ தானே நீ...."
ஒரு சீன குடும்பம்.

மிருக காட்சி சாலையில் வட்ட கூண்டிற்குள் உள்ளே இருக்கும் தேவாங்கு போல உட்கார்ந்திருந்தேன்...
ஆஃபிரிக்க பெண் வேறு வழியில்லாமல் செல்போனில் பேச ஆரம்பித்தாள்,
ஜோதி எரிந்து கொண்டிருந்தது...
'டெலிபதி' இன்னும் நடந்து கொண்டிருந்தது..

கண்ணாடி கதவை திறந்து நான் வெளியில் வந்தேன்,
மழை ஓய்ந்திருந்தது.

No comments: