எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பலவிதமான புத்தகங்களை தேடிப் படிக்கின்றனர். ஒரு புத்தகம் வாசகர்களிடம் அறிமுகமாகும் சூழல் பெரும்பாலும் சிறு வேற்றுமைகளை கடந்து அடிப்படையில் பத்திரிகை விமர்சனங்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்த எழுத்தாளர்களின் சிபாரிசு, புத்தகக் கண்காட்சி, இலக்கிய கூட்டம், இணையதளம் போன்ற காரணிகளாலேயே ஏற்படுகின்றது.
எந்த ஒரு நல்ல படைப்பும் பொதுவாகவே இவ்வெளிச்சங்களால் அடையாளம் காணப்படுகிறது.
நல்லதொரு முதற்படைப்பு உருவாகி, அதற்கு மிக சாதகமான விமர்சனமும் ஒரு பிரபல பத்திரிக்கையால் கொடுக்கப்பட்டு, ஆனால் எவராலும் படிக்கப்படாமல், காலத்தின் சுழற்சியில் முப்பது வருடங்களுக்கும் மேலாக தொலைக்கப்பட்டு, பிறகு அதை ஒரு வாசகன் கண்டெடுத்து, அதன் எழுத்தாளனை தேடிச் செல்கின்ற பயணத்தின் பதிவே 'தி ஸ்டோன் ரீடர் (The Stone Reader)' என்கின்ற ஆவணப் படம்.
எழுபதுகளின் தொடக்கத்தில் 'தி ஸ்டோன்ஸ் ஆப்ஃ ஸம்மர் The Stones of Summer' என்ற நாவல் 'டாவ் மோஸ்மென் Dow Mossman' என்பவரால் எழுதப்பட்டு அமெரிக்காவில் வெளியானது. அக்காலத்தின் பிரபல நாளேடான 'தி நியூயார்க் டைம்ஸ்' அந்நாவலுக்கு மிக சாதகமான விமர்சனம் கொடுத்து, பரிந்துரை செய்து செய்தி வெளியிட்டது.
அதைக் கண்டு இந்த ஆவண படத்தின் இயக்குனரான 'மார்க் மொஸ்கொவிஸ் Mark Moskowitz' என்ற இளம் வாசகன் அதை வாங்கி படிக்க முயன்றான். ஆனால்அவ்வெழுத்தின் ஆழத்தை தொடமுடியாததால் கைவிட்டு விட்டான். முப்பது வருடங்களில் வாசகனின் தரம் வெகுவாக உயர்ந்தது. இடையில் அந்நாவலை வாசிக்க தொடங்கி நேரமின்மை அல்லது வேறு அலுவல்கள் காரணமாக தொடர முடியாமல் கைவிட்டு விட்டான்.
இறுதியில் அதை படித்து முடித்த பின்பு, தான் படித்த புத்தகங்களின் தரப் பட்டியலின் முதல் அடுக்கில் வைக்கப்பட வேண்டிய எழுத்துக்கள் அவை என உணர்ந்து, அந்த எழுத்தாளனின் பிற படைப்புகளை தேடுகின்றார். அப்பொழுதுதான் எழுத்துலகில் அந்த மனிதனை எங்கேயும் காணக்கிடைக்கவில்லை என்பது தெரிய வருகிறது. இணையதளம், பதிப்பாளர்கள், விமர்சகர்கள் என எவரிடமும் மாஸ்மெனை பற்றிய தகவல் என்றில்லாது அடிப்படை பரிச்சயம் கூட கிடைக்கவில்லை. மேலும், அப்படி ஒரு நாவல் வெளிவந்ததாக கேள்விப்பட்டோர் கூட யாரும் இல்லை. இங்கிருந்து தொடங்குகிறது படத்தின் பயணம்!
பூமிப் பரப்பிலிருந்து காணாமல் போன ஒருவரை தேடுவது போல் இருக்கிற்து படத்தின் போக்கு. இயக்குனர் சந்திக்கும் ஒவ்வொரு பதிப்பாளரும், விமர்சகரும் அந்நாவலை படித்து விட்டு, "எப்படி இது வெளியே தெரியாமலேயே போனது? இந்த மனிதனால் இப்படி எழுதிவிட்டு எங்ஙனம் அடுத்து எதுவுமே எழுதாமல் இருக்க முடிந்தது?", என்று வியக்கிறனர். மிக முக்கியமான, தரம் மிக்க எழுத்துக்களை படித்து விட்டோம் அல்லது குறைந்தபட்சம் அவற்றை பற்றிய அறிமுகமாவது வைத்திருக்கிறோம் என்ற எண்ணத்தை உடைத்து தனக்கு தெரியாமலேயே இப்படி ஒரு நாவல் இருந்திருக்கிறது என்ற யதார்த்தத்தை நேரிடும் போது அவர்களின் வியப்பு நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சில நேரங்களில் மாஸ்மென் இறந்திருப்பார் என்ற எண்ணம் இயக்குனருக்கும், நமக்கும் மனதில் வருகிறது. மேலும், எந்த எழுத்தாளனும் ஒரு நாவலை எழுதி முடித்தவுடன் அதிலிருந்து முழுவதுமாக வெளியே வர வேண்டும், ஆனால் இந்த மனிதனுக்கு அது சாத்தியப்படாமலேயே போயிருக்கலாம் என சில எழுத்தாளர்களும், விமர்சகர்களும் அபிப்ராயப்படுகிறார்கள்.
பின்னணி இசை வெகு குறைவாக இருந்தாலும், இப்படம் நம்மிடையே கொஞ்சம் கொஞ்சமாக படபடப்பையும், எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது. இந்த தேடலில் மிக பிரபலமான நாவலான 'காட்ச் - 22 catch -22' என்ற நாவலின் பதிப்பாளருடன் ஒரு உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளளது. இதுவும் முதலில் கவனிக்கப்படாமலேயெ இருந்து பிறகு அப்பதிப்பாளரின் முயற்சியால் வெளிக் கொணரப்பட்டு மிகவும் பிரபலமானது. அந்த உரையாடலில் ஒரு படைப்பு வெளிவருவதற்கு ஒரு பதிப்பாளரின் பங்கு மறைமுகமாக சொல்லப்படுகிறது.
ஒரு நிலையில், இனி மாஸ்மெனை கண்டுபிடிக்கவே முடியாது என்று முடிவெடுத்து இயக்குனர் கைவிட்டு விடுகிறார். பல நாட்கள் கழித்து அதிர்ஷ்டவசமாக ஐயோவா மாகாணத்தில் நடை பெற்ற
எழுத்தாளர் பயிற்சி பட்டறையில் எடுக்கப்பட்ட ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தின் மூலம் 'துப்பு' கிடைத்து மறுபடியும் தேடல் தொடர்கிறது. இறுதியில் அதே மாகாணத்தில் ஒரு புறநகர் பகுதியில், கீழ் நடுத்தரவர்க்க சூழலில் மாஸ்மெனை கண்டடைகிறார்.
அது ஒருவிதமான சோகமயமான அழகுடைய தருணம்.
பிறகு சுமார் பத்து நிமிடங்கள் மாஸ்மெனுடன் இயக்குனரின் உரையாடல் மற்றும் அவருடைய வீட்டின் அறைகளும், மற்றும் அடித்தளத்தில் இருக்கும் அறையில் இருக்கும் தாள்களும், திருத்தி அமைக்கப்பட்ட படைப்புகளின் நகல்களும் இடம் பெறுகின்றன. அவை வாழ்க்கை சக்கரத்தில் சிக்கி சிதைந்து காணாமல் போன எல்லா கலைஞர்களின் பொது உதாரணங்களாகவே தோன்றுகிறது. அவர்களுடைய வீடுகளும் இப்படித் தான் இருந்திருக்குமா? எவ்வளவு தாள்களை எழுதி வைத்திருந்திருப்பார்கள்? எவ்வளவு பக்கங்களை விரக்தியில் வீசி எறிந்திருப்பார்கள்? தனக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்து அவர்கள் தாங்கிக் கொண்ட வேதனைகளும், ஏமாற்றங்களும் எப்படி இருந்திருக்கும்? குடும்பம், பொருளாதார நிலை, கட்டுப்பாடுகள் என வேறொருவருக்காக கனவுகளை தொடராமல் வாழும் பொழுது, மற்றொருவர் மூலமாக தன் மனதில் தோன்றிய கருக்களின் சாயலில் படைப்புகளை பார்க்க நேரிடும் போது என்ன தோன்றியிருக்கும்? என்று பல கேள்விகளை அது கேட்கத் தோன்றுகிறது.
சிறிது அவதானித்தால் இது கலைஞன் என்ற வட்டத்திலிருந்து விரிந்து நாமும் நம்மை சுற்றியிருக்கும் பெரும்பான்மையானவர்களின் வாழ்கையை காட்டுவது போல உள்ளது. எந்த ஒரு மனதின் உள்ளே பார்த்தாலும் அந்த வீட்டில் கிடந்த தாள்களை போல திருத்தியமைக்கப்பட்ட கனவுகளும், நிறைவேறாத ஆசைகளும், நிராகரிக்கப்பட்ட சிறு சந்தோஷங்களும், சமரசம் செய்யப்பட்ட சுதந்திரங்களும் கிடந்து புழுங்கிக் கொண்டிருப்பதை காணலாம். அதனால் தான் என்னவோ, இப்படம் ஒரு தேர்ந்த எழுத்தாளனை ஒரு முதிர்ந்த வாசகன் கண்டெடுக்கும் பயணம் என்பதையும் தாண்டி, சக மனிதர்களின் மனதை தேடி அவர்களின் கனவுகளை கண்டெடுக்க வேண்டியதின் அவசியத்தை மறைமுகமாக உணர்த்துவது போல் தோன்றுகிறது.
இப்படம் வெளியான பிறகு 'பார்ன்ஸ் அண்ட் நோபிள்ஸ்' என்ற புத்தக நிறுவனம் ஸ்டோன்ஸ் ஆஃப் ஸ்ம்மரை மறு பதிப்பு செய்து வெளியிட்டது. மாஸ்மெனுக்காக மகிழ்ச்சி அடைந்தாலும் அதை அடுத்து இன்னும் அறியப்படாமல் கிடக்கும் படைப்புகளும், அதன் படைப்பாளிகளும், கனவுகளை தொலைத்த மனிதர்களும் ஒரு புகை படிந்த கண்ணாடியின் பின் தனக்கான வெளிச்சத்தை எதிர்பார்த்து நிற்பதை போன்ற காட்சியை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
இந்த படத்தின் வலைதளம் : www.stonereader.net

No comments:
Post a Comment