Friday, August 14, 2009

எழுதுவதற்கான காரணம்...

எழுத வேண்டும் என யோசித்து யோசித்து பல வருடங்கள் கடந்து விட்டது. இறுதியில், "ஏன் எழுதவில்லை?", என்ற தலைப்பு மட்டும் தான் என்னால் எழுத முடியும் என்றாகிவிட்டது.

ஒரு பத்தி, கட்டுரை அல்லது கதையை படிக்கும் சமயத்தில், நானும் இது போல் எழுத வேண்டும் என்ற எண்ணம் மேலெழும், பிறகு அடுத்த வாசிப்பு வரை அது காணாமல் போய்விடும். பயணங்களின் போது, ஒரு திரைபடத்தை அல்லது ஆவண படத்தை பார்க்கும் போது, தனிமையில் பொழுதை கழிக்கும் போது, மன நெருக்கடியில் தவிக்கும் போது என்று பல பல நேரங்களில், மனதில், எழுதுவதற்கான 'கரு' என்று ஒன்று உருவாகி, சில கணங்கள் தங்கிவிட்டு செல்லும். அந்த நேரத்தில் மறுபடியும் 'எழுத வேண்டும்' என்ற எண்ணம் மேலெழுந்து, கற்பனையில் அந்த கருவின் தனித்துவத்தை பொறுத்து, ஒரு நிமிடமோ அரை நிமிடமோ அதை நான் எழுதுவதை போன்ற நிகழ்வு வேறொரு காலவெளியில் நடந்தேறும். அதை தொடர்ந்து நிழலை போல, "இதில் எழுத என்ன இருக்கிறது? இதை விட நிறைய தோன்றினால் எழுதலாம்!!" என்ற தணிக்கை நினைப்பு முழுவதுமாக மனதில் படரும். இறுதியில் நிழலையே
நம்பினேன்.

எதை பற்றி எழுதுவது? சின்ன விஷயமா? பெரிய விஷயமா? எப்படி எழுதுவது? நடந்ததை அப்படியே எழுதுவதா அல்லது நடந்ததை என் விருப்பு வெறுப்பு வழியாக எழுதுவதா? இல்லை அவற்றை ஒரு குறியீடாக வைத்து வேறொரு விஷயத்தை சொல்லவா? அல்லது.... இப்படி எல்லா கேள்விகளுக்கும், 'தள்ளி போடு', என்ற ஒற்றை பதிலை கொடுத்து விலகினேன்.
மனதின் கேள்விகள் உயிரியலில் படித்த 'அமீபா' போன்றது. அறுத்து இரண்டாக போட்டால் சில நாட்கள் கழித்து இரு வேறு வினாக்களாக எழுந்து நின்றன. புரியாமல் பல முறை அறுத்ததால், என்னை சுற்றி பல கேள்விகள்.


சோம்பல் காரணமா? இல்லை தன்னம்பிக்கை குறைவா? இல்லை வேறு எதுவோ? நாளடைவில் மனதில் இது ஒரு விவாதமாகி விட்டது.
இத்தனை பேர் எழுதுகிறார்கள், இதனால் என்ன கிடைக்கிறது?
மனதில் தோன்றியதெல்லாம் பகிர்ந்தால் அது வளவளாவென்று பேசுவது போல உள்ளது. பத்தில் ஒன்பது பேருக்கு அது பிடிக்காது, மீதம் உள்ள அந்த ஒரு ஆள் நிச்சயம் இன்னொரு வளவளாவாக தான் இருக்க முடியும்.
ஆதலால் நினைத்தது எல்லாம் எழுத முடியாது.

சரி, ஏதோ நல்ல விஷயம் சொல்ல போகிறோம் என சமாதானம் செய்தால் கூட, 'அது மிகவும் அவசியமா?' என்ற கேள்விக்கு 'ஆமாம்', என ஆணித்தரமாக பதில் சொல்லவே முடிவதில்லை. மற்றும் கண்ணுக்கு தெரியாத முகங்களுக்கு நல்லது சொல்ல கிளம்பி விட்டேன் என சொல்லுவது என்னை நானே பரிகாசிப்பது போலுள்ளது.

என்னை வெளிப்படுத்தி கொள்ள ஒரு நல்ல இடம் என்ற பதிலுக்கு, என் நண்பர்களும், குடும்பமும் வினாக்களாக வந்து நிற்கிறார்கள். அவர்களிடம் கூட பகிராமல் என் எண்ணங்களை ஊரெல்லாம் காட்ட போகிறேன் என்ற சமாதானம் நிறைவு பெறாமலேயே மனதில் தேங்கி நின்றது.

"எனக்கு எழுதத் தெரியும்! பாருங்கள்! நானும் பல வாழ்கை நிகழ்வுகளை பார்த்திருக்கிறேன்!", என ஊர் கூட்டி செயற்கை பணிவுடன் எழுதிக்காட்ட ஆசைப்படுகிறேன் என்ற பதில் உடனடி 'சரி' என்று தென்பட்டாலும், ஆழத்தில் 'இல்லை' என்று புரிந்தது. அது இன்றைய திரைபடங்களில் ஒரு காலை இரண்டு கைகளால் பிடித்து இடுப்பு வரை முன்னால் மடித்து தூக்கி, ஒற்றை காலுடன், கேமராவை பார்த்து, சிரித்துக் கொண்டே ஆடும் கதாநாயகர்களை நினைவுபடுத்தியது, என்னளவில் கேமராவுக்கு பதில் ஒரு ஆளுயர கண்ணாடி!

நன்றாக எழுதுபவர்களின் கருத்துக்களையொ அல்லது பிரபலங்களின் செய்திகளை படித்து அதன் முரண்பாடுகள் மற்றும் அர்த்தமின்மையை விவாதிக்கலாம் என்றால் அது பிரபலம் என்பதை தவிர்த்து, மல்லாக்க படுத்துக் கொண்டு கல்லை மேலே எறிவதை போல தோன்றியது.
உதாரணம்: மேல் பாராவின் கடைசி பகுதி!

இவை எல்லாம் இருந்தாலும் கூட, சில நேரங்களில் நல்ல எழுத்துக்களை படிக்கும் போது மனதில், "நான் அந்த இடத்தில், அந்த சிந்தனையோடு, அந்த உணர்வோடு
அவருக்கு பதிலாக இருந்திருந்திருக்க கூடாதா?", என தோன்றும், அந்த மணித்துளியில் என் கேள்விகள் எல்லாம் மறைந்து போகின்றன. பதில் கிடைத்ததால் அல்ல... தேவையே இல்லாததால்...கூடவே, "இதை எழுதி முடித்த தருணத்தில் அம்மனிதன் எப்படி உணர்ந்திருப்பான்" என ஒரு அங்கலாய்ப்பு ஏற்படுகிறது.

அந்த உணர்வை தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் எழுதுகிறேனோ என்னவோ? ஏன் எழுதுகிறேன் என புரிந்த தருணத்தில் அது கசந்துவிடுமா? தெரியவில்லை!!
நாளை எழுதுவேன் என நிச்சயம் இல்லை. ஆனால் இன்று எழுதி விட்டேன்.

No comments: