கால இடைவெளி அதிகரிக்கும்
தோறும், கடந்த காலங்களை நினைத்துப் பார்க்கையில் சிறு சம்பவங்கள் நினைவிலிருந்து உதிர்ந்து
விடுகின்றன. தீவிரமான அனுபவங்கள் சுருங்கி அவற்றின் சாரம் மட்டுமே மனதில் எஞ்சுகிறது.
அவைகளை மீட்டெடுக்கையில் சரி, தப்பு, வீண், வேடிக்கை என ஒரு மன உணர்வாகவே வெளி வருகிறது.
முன்பொரு காலத்தில் நாம் சந்தித்த, பழகிய, பயணித்த மனிதர்களும் அப்படிப்பட்ட அசையா
பிம்பங்களாகவே மனதில் தங்கி விடுகின்றனர். குடும்பத்திலும், நண்பர்கள் மத்தியிலும்,
வேலையிடத்திலும் என் மனதில் தங்கி விட்ட ஆளுமைகளின் பிம்பங்கள் குறிப்பிட்ட சில சம்பவங்களோடு
தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு விட்டன. இப்படித்தான் எல்லோரும் ஞாபக சேமிப்புகளை மனதிற்குள்
அடுக்கி வைத்திருப்பார்களாக இருக்கலாம்.
அதைப் போல பவா
செல்லதுரை தான் அறிந்த மனிதர்களின் ஆளுமையை சிறு சம்பவங்கள் மூலம் மீட்டெடுத்து படைத்திருக்கும்
கட்டுரைத் தொகுப்பு வம்சி வெளியீடாகிய ‘எல்லா நாளும் கார்த்திகை’ என்ற புத்தகம். பவாவின்
இரு வாசகர்கள் இந்நூலுக்கு சிறந்த முன்னுரை எழுதியுள்ளார்கள். சுவாரசியம் கலந்து எழுதப்பட்டுள்ள
இந்த தொகுப்பில் மொத்தம் 22 மனிதர்களைப் பற்றிய ஆசிரியரின் அனுபவங்களும், அதனால் அவதானிக்கப்பட்ட
குணாதசியங்களும் நேரடியாகவும், சில நேரம் கவித்துவத்தோடும் விவரிக்கப்பட்டுள்ளன. இலக்கியப்
பரப்பிலும், திரைப்படத் துறையிலும் எல்லோராலும் அறியப்பட்டுள்ள ஆளுமைகளுக்கு இடையில்
ஆசிரியரின் சில நெருங்கிய நண்பர்களைப் பற்றிய உருக்கமான கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
பவா செல்லதுரை
தான் பழகிய மனிதர்களிடன் அவதானித்த சிறந்த குணங்களின் வழியாகவே அவர்களை உருவகிக்கிறார்.
சில நேரங்களில் அவர்களுடைய படைப்புகளைக் குறித்து பெரிய அபிப்ராயம் இல்லை என்று வெளிப்படையாக
கூறினாலும், அவர்களுடைய எதிர்மறை குணங்களைப் பற்றிய புறவயமான அவதானிப்பை பதிவு செய்வதைக்
கூட தவிர்த்து விடுகிறார்.
பல துறைகளில் செயல்பட்டுக்
கொண்டிருப்பதாலோ அல்லது அவருடைய தனிப்பட்ட குணத்தினாலோ பவாவிடம் எல்லோரும் மிக சீக்கிரம்
உரிமையுடன் பழக ஆரம்பித்து விடுகிறார்கள் என்பது போல தோன்றுகிறது. மம்மூட்டியைக் குறித்த
கட்டுரை பொதுவெளியில் காணக்கிடைக்கும் நட்சத்திரத்திற்கு வெகுவாக மாறுபட்ட மனிதரை காட்டியது.
லெனின் என்ற திரைப்படக் கலைஞனின் முழு ஆளுமையை மிகவும் அழகாக ஒரு கட்டுரையில் உருவாக்கியுள்ளார்.
“பொங்கல் பண்டிகைக்கு
நான் ஏன் விவசாயிக்கு வாழ்த்து சொல்லணும்னு வந்து நிக்குறீங்க?” என்று சில வருடங்களுக்கு
முன் தொலைக்காட்சி குழுவை நாசர் கேட்டதை பார்த்துள்ளேன். அந்த கேள்விக்கு பின்னால்
உள்ள ஆளுமையை “ஒப்பனையற்ற முகம்” என்ற கட்டுரை வெளிச்சமிடுகிறது. ஒரு சிறுகதையைப் போல
எதிர்பாராத முடிச்சுடன் நிறைவடைகிறது பி.சி.ஸ்ரீராம் குறித்த நினைவலை.
பவாவின் வெளியில்
அறியப்படாத மனிதர்களில் திருவண்ணாமலையிலேயே வாழ்ந்து வரும் புகைப்பட கலைஞராகிய கிரீஷ்
ஃபேலன் என்ற வெளிநாட்டுகாரர், கைலாஷ் சிவன் என்ற கவிஞர், புற்று நோயால் இளமையிலேயே
மரித்த ராஜவேல் குறித்த நெருக்கமான மனப்பதிவுகளை அளிக்கிறார். ஜெயகாந்தன் குறித்த தனிக்
கட்டுரை இருந்தாலும் வேறு சில கட்டுரைகளிலும் அவர் வந்து போகிறார் சில சமயம் சம்பவங்களில்
ஜெகேவாக, சில சமயம் அவரைக் குறித்த ஞாபக மீட்டலாக.
மற்றவைகளிலிருந்து
கோணங்கி மற்றும் சுந்தர ராமசாமியைக் குறித்த கட்டுரைகள் வித்தியாசமாக எனக்குத் தோன்றியது.
கோணங்கியை குறித்த ‘கல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல்குதிரை’ என்ற கட்டுரை ஒப்பு
நோக்கையில் மற்ற கட்டுரைகளைப் போல நேரடியாக எழுதப் படவில்லை. இலக்கிய உலகில் என்ன நடந்தது
எனத் தெரிந்திருந்தால் அக்கட்டுரையின் உவமைகளை இன்னும் ரசித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
‘மொழியின் பலிபீடம்’ என்ற சுராவைக் குறித்த கட்டுரையில் பவா அவருடன் ஒரு முறை கூட நேரில்
பழகிய அனுபவம் இருந்ததாகக் காட்டவில்லை. சில செவிவழிச் செய்திகள் மூலமாகவும், சுராவின்
கதை ஒன்றின் சுருக்கமாகவும் அவரைப் பற்றிய பிம்பத்தை முன்வைக்கிறார். இதுவே தொகுப்பின்
பலவீனமான கட்டுரை என்பது என் எண்ணம்.
இந்த கட்டுரை வழியாக
ஆசிரியர் அறியாமலேயே அவரைக் குறித்தும், அவருடைய குடும்பத்தைக் குறித்தும் பல அறிந்து
கொள்ள முடிகிறது. அது பேசப்பட்ட மனிதர்கள் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகுவதால் தான்
என்று யூகித்துக் கொள்கிறேன்.
இதைப் போன்று நான்
வாசித்த பிற அனுபவக் கட்டுரைகளுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால்,
இந்த ஆளுமைகள் எல்லோரும் (பெரும்பாலும்) பவாவைத் தேடி வருகிறார்கள். அதனால் பெரும்பான்மையான
சம்பவங்கள் திருவண்ணாமலையில் நடைபெறுகின்றன. ஆசிரியர் தான் விரும்பிய ஆளுமைகளை காண
வெவ்வேறு இடங்களுக்கு சென்றதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படவேயில்லை. அவ்வகையில் மறைமுகமாக
திருவண்ணமலையும் ‘எல்லா நாளும் கார்த்திகை’யின் பகுதியாக வாசிப்பு முடிகையில் எஞ்சுகிறது.
No comments:
Post a Comment